ஆட்சி நடத்துவது என்னவென்றே தெரியாமல், ஆட்சியைப் பிடிப்போம் எனக் கூறுவது சரியா ? – எம்.பி .கனிமொழி பேச்சு
சென்னை தென்மேற்கு மாவட்ட திமுக மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி சார்பில் இளம் பெண்கள் பாசறை கூட்டம் இன்று (04/01/2025) சென்னை ராஜா அண்ணாமலைபுரம் முத்தமிழ் பேரவை கலையரங்கத்தில் நடைபெற்றது. இதில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு, இளம் பெண்கள் பாசறையைத் துவக்கி வைத்து, சிறப்புரையாற்றினார்.
நிகழ்வில் பேசிய கனிமொழி கருணாநிதி எம்.பி; நம்முடைய எதிர்காலத்திற்கு யாரால் திட்டமிட முடியும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மேடையில் ஏறி எதையாவது ஒன்றைச் சொல்லிவிட்டு, நான் அதை செய்வேன் இதை செய்வேன் எல்லோருக்கும் அரசு வேலை கொடுப்பேன் என்று சொல்லலாம். கேட்பதற்கு நன்றாக இருக்கும்.
ஆனால் எது நிதர்சனம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். செய்ய முடியுமா? என்பது ஆட்சி நடத்தத் தெரிந்தவர்களால் மட்டும் தான் முடியும். அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மேடையில் ஏறி, ஆட்சி நடத்துவது என்னவென்றே தெரியாமல், மக்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் வந்து கூட கேட்க முடியாமல் அதற்குக் கூட நேரமில்லாதவர்கள் எல்லாம் நாளை ஆட்சியைப் பிடிப்போம் எனப் பேசி வருகிறார்கள்.
அண்ணா பல்கலைக்கழக வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் ஏன் அங்கிருந்தார் எனக் கேள்வி கேட்கின்றனர். ‘அண்ணா என்று அழைத்திருந்தால் விட்டிருப்பாரே’ என்று பெண்ணை குற்றவாளி ஆக்குகின்றனர். பொள்ளாச்சி விவகாரத்தில் கடந்த ஆட்சியாளர்கள் அமைதி காத்தனர். அண்ணா பல்கலை. மாணவி வழக்கில் குற்றவாளி உடனடியாக கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனப் பேசினார்.
சென்னை தென்மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மயிலை த.வேலு எம்.எல்.ஏ., திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன், வழக்கறிஞர் சே.மா.மதிவதனி, திமுக மகளிர் அணித் தலைவர் விஜயா தாயன்பன், திமுக மகளிர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், திமுக மகளிர் தொண்டரணி செயலாளர் நாமக்கல் ராணி, திமுக மகளிர் அணி இணைச் செயலாளர் குமரி விஜயகுமார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
திமுக மகளிர் தொண்டரணி இணைச் செயலாளர் தமிழரசி ரவிக்குமார் எம்.எல்.ஏ., திமுக சமூக வலைதள பொறுப்பாளர் டாக்டர் ப.மீ.யாழினி, சென்னை தென்மேற்கு மாவட்ட திமுக மகளிர் அணி அமைப்பாளர் பானுசலீம், சென்னை தென்மேற்கு மாவட்ட திமுக தொண்டர் மகளிர் அணி அமைப்பாளர் மோனிஷா கருணாநிதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
— மணிபாரதி.