பொன்மனச்செம்மல் பட்டம் கிடைத்த வரலாறு
‘சர்காரு ஏழைப்பக்கம் இருக்கையில நாங்க சட்டத்திட்டம் மீறி இங்கே நடப்பதில்லை’. பேரறிஞர் அண்ணாவின் ஆட்சியில் மெட்ராஸ் மாநிலம் என்பது தமிழ்நாடு என பெயர் மாற்றம், சுய மரியாதை திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் கிடைத்தது. கை ரிக் ஷா ஒழிக்கப்பட்டது.
இப்படி எல்லாவற்றையும் சந்தோஷமாக ஏற்றுக்கொண்ட தமிழக மக்களுக்கு, பேரறிஞர் அண்ணாவை புற்றுநோய் பீடித்துள்ளது என்ற செய்தியை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. செய்தி அறிந்த எம்.ஜி.ஆரும் பதறிப்போய் விட்டார்.
இதற்கு, அமெரிக்காவில் தான் நல்ல வைத்தியம் கிடைக்கும் என்று சொல்லிவிட்டார்கள் மருத்துவமனையில், 10 செப்டம்பர் 1968 அன்று விமானத்தில் புறப்பட்ட பேரறிஞர் அண்ணாவை பம்பாய் வரை சென்று வழியனுப்பினார் எம்.ஜி.ஆர். சிகிச்சைபெற்று திரும்பிய அண்ணா பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். 3.2.1969 அண்ணாவின் மரணம் புரட்சித்தலைவர் உட்பட அனைவரையும் சோகக்கடலில் ஆழ்த்தியது.
அண்ணா மறைந்த சில தினங்களில் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் கிருபானந்தவாரியரை அடித்துவிட்டார்கள் என்று பரபரப்புசெய்தி. ஆன்மீக பக்தர்கள் மத்தியில் கொந்தளிப்பு. விஷயம் எம்.ஜி.ஆர் காதுகளுக்கு போக பதறிப்போய் நடந்த விவரங்களை கேட்டறிந்தார்.
புராணசொற்பொழிவு நடத்த நெய்வேலிக்கு வந்த கிருபானந்தவாரியார் பேச்சின் இடையே ஆத்திகர், நாத்திகர் பற்றி பேசிய பேச்சில் ஆண்டவனை நம்பாதவன் அமெரிக்கா போனாலும், டாக்டர் மில்லரே வந்தாலும் இப்படித்தான் முடிவு வரும் என்று பேசியதின் விளைவே கிருபானந்தவாரியார் தாக்குதல்.
விஷயம் சட்டமன்றம் வரைசென்றது, உடனடியாக வாரியாருக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதன் பிறகு எம்.ஜி.ஆர் என்னசெய்தார். வாரியாருக்கு நெருக்கமான மா.பொ.சிவஞானத்திடம் வருத்தப்பட்ட எம்.ஜி.ஆர், பெரியவர் வாரியாருக்கு பாதுகாப்பு அளிப்பதை முக்கியமாக கருதினார். பிறகு தனதுசொந்த செலவில் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடுசெய்து வாரியாரை அழைத்து பேசச்செய்தார்.
அந்த கூட்டத்தில் தான் வாரியார் அவர்களால் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு பொன்மனச்செம்மல் என்ற பட்டம் வழங்கப்பட்டது.
-ஹரிகிருஷ்ணன்