100 கோடி இலஞ்சம் – யார் இந்த பி.டி. அரசகுமார்
”நல்லா முடிச்சுவிட்டீங்க போங்க” – என்ற பிரபலமான நகைச்சுவை காட்சியைப் போலவே, தமிழகத்தில் தனக்கென தனி அடையாளத்தோடு மிடுக்காக வலம் வந்த முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை சிறையிலடைக்க காரணமான அந்த பி.டி.அரசக்குமார் (எ) பி.டி.குமார் யார்?
மில் தொழிலாளி மகனாக …
‘தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம்’ (Tamil Nadu Private Schools Association) என்ற பதிவு செய்யப்படாத சங்கத்தின் தலைவராகவும் கல்வியாளராகவும் அரசியல்வாதியாகவும் அறியப்படும் பி.டி.அரசக்குமார், புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே அமைந்துள்ள மருதந்தலை (மருந்தலை) என்ற கிராமத்தில், மணப்பாறை தியாகேசர் மில்லில் தொழிலாளியாகப் பணிபுரிந்த தியாகராஜன் என்பவரின் மகனாக எளிய பின்னணியை கொண்டவர்.

1-3 ஆம் வகுப்பு வரையில், மருந்தலையிலும்; 4-5 ஆம் வகுப்புகளை திருவெறும்பூர் வேங்கூர் அரசுப்பள்ளியிலும்; மணப்பாறை அரசு உயர்நிலைப்பள்ளியில் உயர்நிலைக் கல்வியையும்; திருச்சி பாலக்கரை பொன்னையா மேநிலைப்பள்ளியில் மேநிலைக்கல்வியையும் முடித்திருக்கிறார். பிறகு, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறையில் முதுகலை பட்டம் (M.A. History) பெற்றிருக்கிறார்.
ஆன்மீகத்தில் …
கல்லூரி காலத்திற்கு பிறகு, அவர் அடியெடுத்து வைத்தது நிலத் தரகு (Real Estate) வணிகத்தில். இப்போது போல அப்போதெல்லாம் ரியல் எஸ்டேட் பிசினஸ்க்கு பெரிய போட்டிகள் இருந்ததில்லை. குறுகிய காலத்தில் கோடீஸ்வரர்களாக்கும் வளர்ந்துவரும் வணிகமாக இருந்த காலகட்டம் அது. அதை இறுகப்பற்றி முன்னேறினார். அப்படியே, ஆன்மீகத்திலும் நாட்டம் கொண்டார். கையில் பணம் சேர, அன்னதானம், ஆலய திருப்பணி என ஆன்மீகவாதியாகவே மாறிப்போனவர், பிரேமானந்தா சாமியாருடன் நெருக்கமானார்.
ரியல் எஸ்டேட் பிசினஸ் – ஆன்மீகத் தொடர்புகள் இரண்டின் காம்பினேஷன் அவரை உச்சத்துக்கு கொண்டு சென்றது. ரியல் எஸ்டேட் பிசினஸ் போலவே, அன்றைய காலத்தில் மிகுந்த மோகம் நிறைந்த தொழிலாக மெட்ரிகுலேஷன் ஆங்கில வழி பள்ளி வணிகம் இருந்தது. 1990-ஆம் ஆண்டில் புதுக்கோட்டை மாவட்டத்தின் இலுப்பூர், மேலத்தாணியம் மற்றும் அன்னவாசல் ஆகிய பகுதிகளில் மெட்ரிகுலேஷன் ஆங்கில வழிகாட்டல் பள்ளிகளைத் தொடங்கினார். படிப்படியாக பள்ளிக்கிளைகளை மதுரை மாவட்டத்தின் கொட்டம்பட்டி, பள்ளப்பட்டி போன்ற கிராமப்புறப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தினார்.

பள்ளி தாளாளராக …
அப்போதுதான், தனியார் ஆங்கில வழி பள்ளிகள் எதிர்கொள்ளும் நிர்வாகச் சிக்கல்களையும் அரசு நடைமுறைகளும் புரியத் தொடங்கியது. முதலில் தனது பள்ளிகளின் சிக்கல்களை தீர்க்கும் முயற்சியில் ஈடுபட்டவர், பின்னர் இதையே ஒரு தரகுத்தொழிலாக மாற்றினார். அதற்கு ஏதுவாக, ஆங்கில வழிப் பள்ளி சங்கங்களை ஏற்படுத்தி சுமார் 12 ஆண்டுகள் கோலோச்சினார்.
அந்த அனுபவம்தான், பின்னர் ‘தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம்’ (Tamil Nadu Private Schools Association) அமைப்பை உருவாக்க காரணமாக இருந்தது. மாநில அளவில் அந்தஸ்து பெற்றார். ‘ஸ்டார் கல்வி அறக்கட்டளை’ (STAR Educational Trust) யின் கீழ், பிடிகே கல்வியியல் கல்லூரி மற்றும் தன் மனைவி கோகிலா பெயரில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி என அவரது கல்விச்சேவையும் விரிவடைந்தது.
தனியார் பள்ளிகளின் அனுமதி – அதன் சிக்கல்களை தீர்ப்பதற்காக தொடங்கிய தரகுப்பணி, தலைநகர் சென்னையில் உயர் அதிகாரிகளுடனும் மேல்மட்ட அரசியல்வாதிகளுடனும் நெருக்கத்தை உண்டாக்கியது. 1991-96 அதிமுக ஆட்சி காலத்தில் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்தார். போயஸ்கார்டன் வரையில் செல்வாக்கை பெற்றவராக மாறினார்.

சொந்தக் கட்சி …
மெல்ல, அரசியலில் கால்தடம் பதித்தார். கட்டு கட்டாக பணத்தை வைத்துக்கொண்டு அடுத்தவன் கட்சியில் ஏன் சேர வேண்டும் என நினைத்தாரோ, என்னவோ? ‘திராவிட விழிப்புணர்ச்சிக் கழகம்’ என்ற பெயரில் தனி அரசியல் கட்சியையே தொடங்கினார்.
அதுவரையில் விராலிமலை குமார் அல்லது பி.டி.குமார் என்று அறியப்பட்டவர், நியூமராலஜி நம்பிக்கையின்படி ”அரச” என்ற பெயரை சேர்த்துக் கொண்டார். தன் சொந்தப் பெயரை மாற்றியது போலவே, சொந்தக் கட்சியின் பெயரையும் அகில இந்திய தேசிய பார்வார்டு பிளாக் என மாற்றினார்.

ரியல் எஸ்டேட் பிசினஸூம் கல்வி வியாபாரமும் கை கொடுத்த அளவுக்கு அரசியல் பிரவேசம் அவருக்கு போனியாகவில்லை. சொந்தக் கட்சியை பாஜகவில் இணைத்தார். நாடாளுமன்றத் தேர்தல் வரவு – செலவு விவகாரத்தில், அப்போதைய பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனோடு ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, அங்கிருந்து வெளியேறி திமுகவில் ஐக்கியமானார்.
அரசியலும் தரகுத்தொழிலும் …
தொடக்கத்தில் பள்ளிகளின் அங்கீகாரம் அனுமதி என்ற அளவில் இருந்த அவரது தரகுப்பணி, மெல்ல, DTCP மற்றும் CMDA கட்டிட அனுமதி என எல்லைகளின்றி விரிவடைந்தது.

மனைவி கோகிலா அரசக்குமார் கல்வியாளராகவும்; மகள் ஏ. சண்முகப்பிரியா டாக்டராகவும்; மகன் ஏ.கார்த்திக் தமிழ் திரைப்பட இயக்குநராகவும் இயங்கி வருகிறார்கள்.

திமுகவை சேர்ந்த அரசியல்வாதியாக மட்டுமே அரசக்குமாரை அடையாளப்படுத்துகிறார்கள். ஆனால், அவரது கால்நூற்றாண்டு கால தரகுத் தொழிலில் மாநில கட்சிகள், தேசிய கட்சிகள் என வஞ்சகமின்றி எல்லா கட்சிகளிலும் செல்வாக்கு மிகுந்த நபராகவே வலம் வந்திருக்கிறார். கட்சிகளை கடந்த அரசியலும் தரகுத்தொழிலும்தான் அவருக்கான அடையாளம் !
– அங்குசம் புலனாய்வுக்குழு.






Comments are closed, but trackbacks and pingbacks are open.