சமஸ் போட்ட குல்லாவும் , ‘சமஸ்’யோசித பொய்யும் .
“விஜய்யின் ஊழலுக்கு எதிரான ஒரு அடி” என்ற எழுத்தாளர் சமஸின் கட்டுரையை புதிய தலைமுறையின் சிந்தை இணையதள இதழில் 17.08.2026 அன்று கண்டேன் .
அதில் 1977ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த எம்.ஜி.ஆரின் முதல் ஆட்சியில் அவர் நல்லதொரு நிர்வாகத்திற்காக பேசப்படுகிறார் என்று போகின்றபோக்கில் ஒரு வெண்ணெய் உருண்டையை வீசியிருப்பார் திரு. சமஸ் அவர்கள்.
தான் கட்டமைக்க விரும்பிய எம்ஜிஆர் பிம்பத்திற்கு அழகு சேர்க்க, “பொதுபணத்தை தனியாக கையாளாதவர் எம்.ஜி.ஆர்”. என்ற ஒரு அபத்தமான தகவலையும் பதிவு செய்கிறார் திரு சமஸ் .
திரு சமஸின் கூற்று நகைப்புக்குகந்தது.
ஒருவேளை தமிழ்நாட்டின் வாடகை வாய் பிழைப்புவாதிகள் பத்தோ அவரது பழைய தலைவர் கோவோ பேசியிருந்தால் புன்னகையுடன் கடந்து சென்றிருக்கலாம் ஆனால் எழுதியது எழுத்தாளர் சமஸ் அவர்கள் எனவே பதில் கூறுவது அவசியமாகிறது.
எம்.ஜி.ஆர். அவர்கள் ஆட்சிக்கு வந்த முதலாவது காலகட்டத்தில் எம்.ஜி.ஆர். அரசில் தொழில்துறை செயலாளராக இருந்தவர் திருநெல்லை நாறாயண அய்யர் சேஷன் என்ற டி.என். சேஷன். பின்னாளில் இந்திய தேர்தல் தலைமை ஆணையாளராக அதிரடி நடவடிக்கைகளை எடுத்ததற்காக அறியப்பட்டவர்.
எம்.ஜி.ஆர். முதல்வராக வந்ததும் அவரது முதல் ஆட்சியில் நல்லதொரு நிர்வாகத்திற்கு உதாரணமாக ஒன்றைக் கூறலாம்.
தமிழ்நாட்டில் பர்ஃபுரல் என்ற இரசாயனம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்று டிட்கோ என்ற தமிழ்நாடு அரசு (Tamil Nadu Industrial Development Corporation ) நிறுவனத்திலிருந்து பெருந்தொகையாக கடனாக பெற்றது.
டிட்கோ நிர்வாக இயக்குநராக எஸ். குஹன் என்ற நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரி அச்சமயம் இருந்தார். தமிழநாடு முதல்வர் எம்ஜிஆருக்கு வேண்டப்பட்ட அந்த தொழில் நிறுவனம் கடன்வாங்கிய பணத்தை திரும்ப கட்டவில்லை .
தொழிற்சாலையும் நஷ்டத்தில் இயங்கியது எனவே தங்களுடைய நிறுவன சொத்துக்களை தமிழ்நாடு அரசு எடுத்துக்கொண்டு கடனை ஈடுகட்ட தொழில் நிறுவனம் வேண்டுகோள் விடுத்தது. அதே நிறுவனத்திற்கு வேறுபல சொத்துக்களும் தொழில்களும் உண்டு.
தொழிற்துறை செயலாளர் டி.என். சேஷனும் டிட்கோ நிர்வாக இயக்குனர் எஸ். குஹன் இருவரும் ஆலோசனை செய்து மேற்கொண்டு அந்நிறுவனம் குறித்து ஆய்ந்தபோது நிறுவனத்தின் சொத்துகளாக துருப்பிடித்த இரும்புத் தளவாடங்கள் உடைந்த நாற்காலிகள், பழுதடைந்த கதவுகள் மட்டுமே நிறுவனத்திற்கு எஞ்சி இருந்தன எனக் கண்டனர்.
ஆனால் சமஸ் குறிப்பிடும் நேர்மையாளர் எம்.ஜி.ஆருக்கு செயல்படாத பர்ஃபுரல் தொழிற்சாலையின் துருப்பிடித்த இரும்பு நாற்காலிகள் தங்கத்தை விட விலைமதிப்பு மிக்கதாக தோன்றியிருக்கலாம்.
எனவே எம்.ஜி.ஆர் அவர்கள் முதலில் அவர் டி.என். சேஷன் வீட்டிற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.
நிறுவனத்தின் சொத்துக்களை அரசே ஏற்க விரும்பிய எம்ஜிஆர் சேஷனை வீட்டிற்கும், அலுவலகத்திற்கும் , நேரிலும் தொடர்பு கொண்டு கோப்புகளை கையெழுத்திட்டு அவரிடம் அனுப்ப நிர்பந்தித்தார்.
அரசுக்கு மேலும் நிதி சுமையை ஏற்றும் , நிறுவனத்திற்கு மட்டுமே பலனளிக்கும் ஏற்பாட்டிற்கு ஒப்புதலளிக்க மனமில்லாத டி.என். சேஷன் தன் கையெழுத்தோ குறிப்புகளோ இல்லாமலேயே கோப்புகளை முதல்வர் எம்.ஜி.ஆருக்கு அனுப்பினார்.
முதல்வர் எம்.ஜி.ஆர் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி தான் விரும்பியபடி தமிழ்நாடு அரசுக்கு பெரும் இழப்பு ஏற்படுத்தும் அந்த நேர்மையான ஒப்பந்தத்தை செயலாளரின் ஒப்புதல் இல்லாமலேயே நிறைவேற்றியது வரலாறு.
அதன் தொடர்ச்சியாக எரிச்சலடைந்த எம்.ஜி.ஆர் அன்றைய தலைமை செயலாளர் கார்த்திகேயனிடம் டி.என். சேஷனை உடனடியாக கீழிறக்கும்படி உத்தரவிட்டார். நிர்வாகத் திறன் கொண்ட எம்.ஜி.ஆர் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து பதவியிறக்குதல் மற்றும் பணி நீக்கம் செய்யும் அதிகாரம் தனக்கில்லை என அறிந்திருக்கவில்லை.
தலைமைச் செயலாளர் கார்த்திகேயன் டி.என் சேஷனை ஒன்பதாவது தளத்தில் இருந்து ஒன்றாவது தளத்திற்கு கீழிறக்கினார் ஏனென்றால் சேஷன் செயலாளராக இருந்த தொழிற்துறை அலுவலகம் ஒன்பதாவது தளத்திலும், அவர் மாற்றப்பட்ட விவசாயத்துறை ஒன்றாவது தளத்திலும் இருந்தது. தரை தளம் வாகன நிறுத்தமாக இருந்ததாலும் தன்னை பார்க்கிங் அட்டெண்டராக மாற்ற எம்ஜிஆரால் முடியாமல் போனது என சேஷன் சிரித்துக் கொண்டே கூறியதை “சேஷன் அன் இன்டிமேட் ஸ்டோரி” Seshan An Intimate Story என்ற நூலில் கே. கோவிந்தன் குட்டி என்ற பத்திரிகையாளர் பதிவு செய்துள்ளார் (1) .
தமிழ்நாடு அரசின் கருவூலத்தை தனியார் ஒருவருக்கு தாரை வார்த்த எம்ஜிஆர் “பொதுபணத்தை தனிப்பட்ட முறையில் கையாளாதவர் எம்ஜிஆர்” என்ற சமஸின் புகழுரை கேட்டு ஒருவேளை உயிரோடு இருந்திருந்தால் எம்.ஜி.ஆர் அதிர்ச்சிக்குள்ளாயிருப்பார்.
எம்.ஜி.ஆர் அரசில் காவலதுறை தலைவராக இருந்த டிஜிபி மோகன்தாஸ் ஐபிஎஸ் அவர்களின் அனுபவம் வேறு.அமெரிக்கர்களான ஸ்டான் ஆலன், மேரி ஆலன் ஆகிய இருவரும் தமிழ் போராளிக் குழுக்களால் யாழ்பாணத்தில் கடத்தப்பட்டபோது அவர்களை விடுவிக்க மோகன்தாஸ் மூலம் எம்ஜிஆர் செய்த முயற்சி எதிர்பாராதவிதமாக வெற்றியடைந்ததால், மோகன்தாசுக்கு டேப் ரெக்கார்டர் பொருந்திய விலை மதிப்பற்ற கைகடிகாரம் ஒன்றை பரிசளித்தார் எம்ஜிஆர்.. மோகன்தாஸ் அதை மறுத்தார். 500 ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள பரிசுப் பொருளை தான் பெறுவதென்றால் அரசின் அனுமதி பெறவேண்டும் என்ற மோகன்தாஸின் விளக்கத்தை ஏற்க மறுத்த எம்.ஜி.ஆர். தானே தமிழ்நாடு அரசு என்று டிஜிபி யிடம் கூறினார்.(2)
நானே அரசாங்கம் என்ற எம்ஜிஆரது எண்ணமே பல்வேறு நண்பர்களுக்கு தமிழ்நாடு அரசின் அசையாச் சொத்துக்களை பரிசாக வழங்க காரணமானது.
சுதந்திர இந்தியாவின் முதல் மாபெரும் ஊழலான முந்தரா ஊழலில் சிக்கி பதவி இழந்தவர் டிடிகே என்ற டி.டி. கிருஷ்ணமாச்சாரி.
முந்த்ரா ஊழலில் எல்.ஐ.சி. நிறுவனத்தின் பணமான 1.26 கோடி ரூபாயை திவாலாகும் நிலையில் போராடிக்கொண்டிருந்த ஹரிதாஸ் முந்த்ராவின் ஆறு நிறுவனங்களில் முதலீடு செய்ய டிடிகே வின் நிதித்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. அது கல்கத்தாவின் ஹரிதாஸ் முந்த்ராவிற்கு பலனளித்தது.
இவ் ஊழலை பற்றி விசாரிக்க நீதிபதி எம்.சி. சாக்லா தலைமையிலான குழு அமைக்கப்பட்டது.டிடிகே மீதும் குற்றம் கண்டார் எம்.சி. சாக்லா டிடிகே. ஹரிதாஸ் முந்த்ராவின் நஷ்டப்பட்ட நிறுவனங்களில் எல்.ஐ.சி பணத்தை முதலீடு செய்ய காரணமான டிடிகே 1958 ஆம் ஆண்டில் பதவியிழந்தார்.
ஊழல் அமைச்சராக இருந்தாலும் மறுபடியும் அவரை எதோ ஒரு காரணத்திற்காக நிதியமைச்சராக்க நேரு விரும்பினார். நேருக்கு மொரார்ஜி தேசாய் பிடிக்காமல் போயிருக்கலாம் .
எனவே டிடிகேவை எம்பியாக்கும் பணி அன்றைய முதல்வர் காமராசரிடம் ஒப்படைக்கப்பட்டது.
தேர்தல் பணிகளுக்காக டிவிஎஸ் அதிபர் டி.எஸ். கிருஷ்ணாவும் இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் தினமணி பத்திரிகை அதிபர் கோயங்காவும் திருச்செந்தூருக்கு வந்தனர்.
டி.டி.கே. வை எதிர்த்து சுதந்திரா கட்சி வேட்பாளராக உள்ளூரில் செல்வாக்குள்ள தங்கசாமி என்பவர் தேர்தலில் நின்றார். டிவிஎஸ் அதிபர் கிருஷ்ணாவும் எக்ஸ்பிரஸ் தினமணி கோயங்காவும் தங்கசாமியிடம் பணம் தருகிறோம் வாபஸ் பெறுங்கள் என ஆசை வார்த்தை காட்டினா்ரகள் ,இருவரையும் அலட்சியப்படுத்தி அனுப்பிவிட்டார் தங்கசாமி.
அதன் பின் சொக்கலால் ராம்சேட் பீடி அதிபர் முக்கூடல் அரிராம் சேட்டிடம் கோயங்காவை அனுப்பி வைத்தார் முதல்வர் காமராஜர் . அரிராம் சேட் தங்கசாமியிடம் பேச வேண்டியதைப் பேசி, கொடுக்க வேண்டியதைக் கொடுத்து தங்கசாமியை வாபஸ் பெறச் செய்தார் .இவ்வாறாக போட்டியின்றி திருச்செந்தூர் தொகுதியில் 1962 ஆம் ஆண்டில் டிடிகே வெற்றிபெற்றார்.1964 ஆம் ஆண்டில் நேருவால் முதலில் இலாகா இல்லாத மந்திரியாகவும் பின்னர் நிதியமைச்சாராகவும் ஆக்கப்பட்டார் .(3)
முந்த்ரா எல்.ஐ.சி ஊழலில் சிக்கிய ஹரிதாஸ் முந்த்ரா 22 வருடங்கள் சிறைச்சாலையில் கழித்தார் இருந்தாலும் ஊழல் செய்த அமைச்சரை வெற்றி பெறச்செய்ய எதிரணி வேட்பாளர்களுக்கு பணம் கொடுத்து வேட்புமனுவை வாபஸ் செய்யச் செய்யும் நேர்மையான முயற்சிகள் சமஸால் பாராட்டு பெற்றதில் ஆச்சரியமில்லை. ஆனால் ,
எவ்வித நிர்வாகத் திறமையுமின்றி 1979-1982 வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த மதக்கலவரங்களுக்கு காரணமான, மண்டைக்காடு கலவரத்தில் இந்து மதச் சார்போடு நடந்த எம்.ஜி.ஆரை, மீனாட்சிபுரம் சாதிக்கொடுமை மதமாற்றங்கள் போது வளைகுடா நாடுகளின் பணத்தால் மதமாற்றம் நடகிறது என்று சொன்ன எம்.ஜி.ஆரை, விசாரணையின்றி சிறையிலடைக்கும் குண்டர் தடுப்பு சட்டம் கொண்டு வந்த எம்ஜிஆரை சிறந்த நிர்வாகி எனக் கூறும் சமஸ் அவர்கள் தெரிந்தே பொய் கூறமாட்டார் என்றே நம்புகிறோம்.
ஒருவேளை தமிழ்நாடு முதல்வர் விஜய் அவர்களை வஞ்சப்புகழ்ச்சி செய்கிறாரோ? என்னவோ ?
— தி.லஜபதி ராய்







Comments are closed, but trackbacks and pingbacks are open.