மீண்டும் பெண் சர்ச்சையில் சவுக்கு சங்கர் ! 30 பேர் மீது பாய்ந்த வழக்கு !
மீண்டும் பெண் சர்ச்சையில் சவுக்கு சங்கர் ! 30 பேர் மீது பாய்ந்த வழக்கு !
”சவுக்கு சங்கர் விரைவில் கைது ?”… செய்தி பத்திரிகை ஒன்றின் தலைப்பு செய்தியாக இடம்பெற்றிருக்குமோ என்றுதானே நினைக்கிறீர்கள்? அதுதான் இல்லை. சவுக்கு சங்கரை உரிமையாளராக கொண்டு அவரே நேரில் தோன்றி பேசியும் வருகிற சவுக்கு மீடியாவில் அவரைப் பற்றி அவரே வெளியிட்டுக் கொண்ட ”விளம்பரம்”தான் இந்த அறிவிப்பு.
”ஹே … ஜெயிலுக்குப் போறேன் … ஜெயிலுக்குப் போறேன் … எல்லோரும் பார்த்துக்கோ நானும் ரவுடிதான்…”னு தலைநகரம் திரைப்படத்தில் நாய் சேகராக நடித்த நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் காமெடி நினைவுக்கு வந்தால், கம்பெனி பொறுப்பல்ல.
சவுக்கு சங்கருக்கு எதிராக பதிவான வழக்கு :
சரி, விசயத்திற்கு வருவோம். தமிழகத்தில் சென்னை மற்றும் திருச்சியில் தனக்கு எதிராக, இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும்; அதில் தான் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்பதாகவும் சவுக்கு சங்கர் பேசியிருக்கிறார்.
எதற்காக இந்த வழக்குகள்? ஒன்று, குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக நடவடிக்கை எடுக்காத பெண் போலீசு இன்ஸ்பெக்டரை அவமரியாதையாக பேசியதற்காக. என்ன, ஆச்சர்யமாக இருக்கிறதா? எப்போதும் சவுக்கு சங்கர் பெண்களை இழிவுபடுத்தியல்லவா, பேசுவார்? இப்போது, பாதிக்கப்பட்ட பெண்ணுக்காக குரல் எழுப்பியிருக்கிறாரே? என புருவம் உயர்த்துகிறீர்களா? உயர்த்திய புருவத்தை சற்றே இறக்கிவிடுங்கள். அந்த பெண் புகார் அளித்திருப்பது ஒரு ஐ.ஆர்.எஸ். அதிகாரிக்கு எதிராக. அதுவும் சவுக்கு சங்கருக்கு ஆகாத அந்த சென்னை மாநகரின் மூன்றெழுத்து உயர் போலீசு அதிகாரியின் மனைவி வழியாக, அந்த உயர் போலீசு அதிகாரியான கணவருக்கு அழுத்தம் கொடுத்து அவர் அந்த பெண் இன்ஸ்பெக்டருக்கு இன்ஷ்ட்ரக்ஷன் கொடுத்து இயக்கினார் என்பதுதான் சவுக்கு சங்கர் முன் வைக்கும் குற்றச்சாட்டு. எப்போதும் எலி அம்மணமாக ஓடுவதில்லைதானே?
அடுத்த வழக்கு. சவுக்கு சங்கரின் டிரேட்மார்க் வழக்கு. வழக்கம்போல, பெண் காவலர் ஒருவரை தனிப்பட்டமுறையில் அவதூறாக பேசிய நிலையில், அதனால் அந்த காவலரின் திருமணமே தடைபட்டு போன நிலையில், பாதிக்கப்பட்ட பெண் காவலர் கொடுத்த புகாரில் வழக்கு பதிவாகியிருக்கிறது.

பெண் போலீசு மீதான வன்மம் – பின்னணி என்ன ?
திருச்சி மாவட்டத்தில் ஆயுதப்படையில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றிவரும் அந்த இளம் பெண் காவலர், எஸ்.ஐ. தேர்வுக்கு தயாராகி வருகிறார். தனது மாவட்டத்தில் பணியாற்றும் தன்னை போன்ற காவலர்களுக்கு, எஸ்.ஐ. போட்டித் தேர்வில் பங்கேற்குமாறு ஊக்கம் தந்து கூடவே அதற்குத் தேவையான பாடநூல்கள் மற்றும் தனியார் நிறுவனத்தின் சார்பில் நேரடி பயிற்சிக்கும் ஏற்பாடு செய்திருக்கிறார், சரக டிஐஜியான அந்த உயர் அதிகாரி. இப்படி ஒரு முன்னுதாரணமான முன்னெடுப்பை பாராட்டி இன்ஸ்டாகிராமில் செய்தி வெளியாகிறது. அந்த உயரதிகாரியின் முன்னெடுப்பை பாராட்டி பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்கள். அதில் பத்தோடு பதினொன்றாக, அந்த குறிப்பிட்ட பெண் போலீசு காவலரும் தனது கருத்தை பதிவு செய்திருந்தார். அவ்வளவுதான். இதில் எங்கே சிக்கல் என்றால், அந்த முன்னெடுப்பை எடுத்த உயர் அதிகாரிக்கும் சவுக்கு சங்கருக்கும் ஏழாம் பொருத்தம். ஆளும் கட்சியின் மாவட்ட செயலர் என்ற அளவுக்கு சவுக்கு சங்கரால் விமர்சிக்கப்பட்டவர். இது ஒன்று. அடுத்து, அந்தக் குறிப்பிட்ட காவலர் கடந்தமுறை திருச்சி போலீசார் தன்னை கைது செய்து வேனில் அழைத்து வந்தபோது உடன் வந்த பெண் போலீசார்களில் அந்த பெண் காவலரும் ஒருவர். இதுபோதாதா? இதுதான் சந்தர்ப்பம் என்று சக்கைப்போடு போட்டு மென்று துப்பிவிட்டார் சவுக்கு சங்கர்.
போலீசை எதிர்க்க என்னைவிட்டால், வேறு யார் இருக்கா?
அந்த உயர் அதிகாரிக்கு தன்னை பற்றி சோசியல் மீடியாவில் பதிவுகள் வராவிட்டால், குடிகாரனுக்கு கை உதறல் எடுப்பதைப்போல எடுத்துவிடும் என்று அவ்வளவு நக்கலாக பேசியிருக்கிறார், சவுக்கு சங்கர். இவர்கள் எல்லாம் அந்த உயர் அதிகாரியின் டீம் என்கிறார். பெண் காவலர்களையெல்லாம் துணை நடிகைகளைப்போல, ஆர்ட்டிஸ்ட் என்கிறார். தினம் ஜாலியாக ஷூட்டிங் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்கிறார். அதே மாவட்டத்தின் எஸ்.பி.யாக பணியாற்றும் அந்த ஐ.பி.எஸ். அதிகாரியை ஒருமையில் வேறு பேசியிருக்கிறார். மேலும், அவரைப்பற்றி தனிப்பட்ட சில கருத்துக்களையும் தெரிவிக்கிறார்.
அந்த பெண் காவலரை பற்றி சவுக்கு மீடியாவில் பேசுவதற்கான அவசியம் என்ன வந்தது? அதுவும் ஆர்ட்டிஸ்ட் என்ற அளவுக்கு தரம்தாழ்ந்து பேச வேண்டிய தேவை என்ன? அதற்கான காரணத்தை, அடுத்த வீடியோவிலேயே சொல்கிறார், சவுக்கு சங்கர்.
“17.07.2008 அன்றுதான் முதல்முறையாக கைது செய்யப்பட்டேன். அதுதான் என்னை சவுக்கு சங்கராக உருவாக்கியது. அந்த கைதுக்காக மகிழ்ச்சி கொள்கிறேன். அதிகாரத்தை எதிர்ப்பது எனது மனதுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. சி.எம்.ஐ எதிர்த்து பேசலாம். எதிர்க்கட்சித்தலைவரை எதிர்த்து பேசலாம். நீதிபதியைக்கூட எதிர்த்து பேசலாம். ஆனால், போலீசுகாரங்களை எதிர்த்து பேசினா உங்களை வாழ விடமாட்டாங்க. அதுதான் யதார்த்தம். நீங்க போலீசு அதிகாரி ஒருத்தங்களை எதிர்த்து பேசிட்டீங்கன்னா? உங்களை நசுக்கி, வேறோட பிடுங்கி, அதுல ஆசிட்ட ஊத்திட்டுதான் டிபார்ட்மெண்ட் மறுவேலை பார்க்கும். அப்புறம் யார்தான் போலீசு ஆபிசர்ஸ் பத்தி பேசுறது? ” என்பதாக, தொடையை தட்டுகிறார் சவுக்கு சங்கர்.
சவுக்கு மீடியாவை முடக்க நினைக்கும் போலீசு !
இதே விசயங்களை குறிப்பிட்டு, சவுக்கு மீடியா செயல்பாட்டில் காவல்துறை தலையீடு இருக்கிறது; சவுக்கு மீடியாவை முடக்க முயற்சிக்கிறார்கள் என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் கதவை தட்டியிருந்தார் சவுக்கு சங்கர். வழக்கை விசாரித்த நீதிபதி டி.வேல்முருகன், “பத்திரிகையாளர் என்ற போர்வையில் பிளாக்மெயில் செய்யக்கூடாது. போலீசுக்கு இணையாக விசாரணை நடத்துவதற்கும்; இந்த விசயத்தை போலீசும் நீதிமன்றமும் இப்படித்தான் அணுக வேண்டும் என்று பொதுவெளியில் பேசுவதற்கும் உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? அரசியல் சாசன சட்டம் பிரிவு 19-ஐ தவறாக பயன்படுத்தக்கூடாது. பேச்சுரிமையை தவறான ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது” என்றெல்லாம் குறிப்பிட்டு, இதனை உங்கள் மனுதாரருக்கு எடுத்து சொல்லுங்கள் என்பதாக சவுக்கு சங்கரின் வழக்கறிஞருக்கு அறிவுறுத்தியிருந்தார், நீதிபதி டி.வேல்முருகன்.
போலீசு தலையிடுகிறார்கள் என்பதற்கு நீதிமன்றத்தில் ஒரு காரணத்தை குறிப்பிட்டிருந்தார், சவுக்கு சங்கர். அவரது குழுவினருடன் கும்பமேளாவுக்கு காரில் கிளம்பிச் சென்றார்களாம். சென்ற வழியில், ஒரு இருபதுக்கும் மேற்பட்ட போலீசார் தங்களை வழிமறித்து சோதனையிட்டார்களாம். விசாரணை நடத்தினார்களாம். இறுதியில், பயணித்த காருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்களாம். போலீசார் இடைமறித்து விசாரணை நடத்தியதில் இரண்டு மணி நேரம் கால தாமதம் ஆகியது என்பதாக குறிப்பிட்டதோடு, நிறுத்தாமல் இந்த அதிரடி சோதனைக்கு காரணமே சென்னையில் பணியாற்றும் இவருக்கு ஆகாத அந்த போலீசு உயர் அதிகாரிதான் என்று ஒரே போடாக போட்டார் பாருங்கள். இதில் கொடுமை என்ன தெரியுமா? சவுக்கு சங்கர் பயணித்த காரை வழிமறித்து போலீசார் விசாரணை நடத்தியது, தெலுங்கானா மாநிலத்தின் ராமையம்பேட்டை போலீசார். அடேங்கப்பா. தெலுங்கு பட பாலையாவின் காமெடி காட்சிகளையே ஓவர்டேக் செய்துவிட்டார், சவுக்கு சங்கர்.
மீண்டும் பெண் சர்ச்சையில் சவுக்கு சங்கர் ! 30 பேர் மீது பாய்ந்த வழக்கு !
கருத்து சுதந்திரத்துக்கு வந்த ’ஆபத்தா’ ?
தனக்கு எதிராக போலீசார் அடுத்தடுத்து இரண்டு வழக்குகளை பதிவு செய்திருக்கும் நிலையில், தான் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்பதாக சவுக்கு சங்கர் அழுத்தம் கொடுப்பதற்கு காரணம். போலீசுக்கு எதிராக பேசும் பத்திரிகையாளனை கைது செய்யப் போகிறார்கள், ஆகவே, அறச்சீற்றம் கொள்ள பொதுமக்களை தயார்படுத்துகிறாராம். அவர் பேசும் மற்ற விசயங்களுக்கெல்லாம், உச்சநீதிமன்றம் தீர்ப்பு இருக்கிறது. உயர்நீதிமன்றத் தீர்ப்பு இருக்கிறது என்றெல்லாம் ஆதாரங்களை அள்ளிவிடும் சவுக்கு சங்கர், தனது சர்ச்சை பேச்சுகளுக்கு எதிராக உள்ளூர் நீதிமன்றம் முதலாக உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் வரையில் ‘பார்த்து பேசுமாறு” பலமுறை சுட்டிக்காட்டியிருக்கின்றன. தலையில் குட்டும் வைத்திருக்கின்றன. தலைவனும் பலமுறை, நெடுஞ்சான்கிடையாக மன்னிப்பும் கோரியிருக்கிறார். ஆனாலும், மீசையில் ஒட்டியிருக்கும் மண்ணை தட்டிவிட்டபடியே, தொடையை தட்டிக் கொண்டே சொல்கிறார், “முன்ஜாமீன் எடுக்கப்போவதில்லை… முடிந்தால் கைது செய்துப்பார்” என்று. அதோடு விட்டாரா, இதற்கெல்லாம் விடியல் அரசு விலையை கொடுக்கும் என்று வேறு ஒரு பிட்டை சொருகுகிறார், சவுக்கு சங்கர்.
இதுமட்டுமா, அவர் பேசும் ஒவ்வொரு வீடியோவிலும் “பொம்மை முதல்வர்” என்று எத்தனை முறை பேசியிருக்கிறார் என்று எண்ண முடியாத அளவுக்கு பேசியிருக்கிறார். முத்து படத்தில், செந்தில் பேசும் நகைச்சுவை காட்சியைப்போல வீடியோவில் வாயசைத்தது சவுக்கு சங்கர். ஆனால், அவர் பேசிய வசனமோ எடப்பாடியாருடையது. தமிழகத்தில் எதிர்க்கட்சித்தலைவர் யார் என்ற குழப்பத்தை வேறு உண்டுபண்ணிவிட்டார், சவுக்கு சங்கர்.
இது கிடக்கட்டும். யார் இந்த சவுக்கு சங்கர்? அவர் பத்திரிகையாளரா? யூடியூபரா? நானும் ரவுடிதான் கதையாக, தன்னை பத்திரிகையாளர் என்றே அடையாளப்படுத்திக் கொள்கிறார், சவுக்கு சங்கர். தன்னிடம் இருப்பதைப்போல, முன்னணி அச்சு ஊடகங்களுக்கும், காட்சி ஊடகங்களுக்கும் அந்த “தில்லு” இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பவும் செய்கிறார். வேறு யாரும் முன்வரவில்லை, ஆகவே தான் அந்த பணியை தொடர்ந்து செய்து வருகிறேன் என்கிறார், சவுக்கு சங்கர்.
பத்திரிகையாளரா ? புரோக்கரா ?
சென்னை போலீசு இன்ஸ்பெக்டர் விவகாரத்தில், இன்வெஸ்டிகேஷன் ஜர்னலிசம் என்றால் என்ன என்று வகுப்பு வேறு எடுக்கிறார். அதுவும் எப்படி? புகார்தாரர் கொடுத்த புகாரை அப்படியே ஆள், பெயர் விடாமல் வாசிக்கிறார். இதற்கு பின்னணியில் இவர்களெல்லாம் இருக்கிறார்கள் என்று ஒரு பட்டியலையே வாசிக்கிறார். அவர்கள் எல்லோருமே, அவருக்கு ஆகாத அந்த போலீசு உயர் அதிகாரியாகவும் அவர்களுக்கு வேண்டப்பட்டவர்களுமாகவே இருக்கிறார்கள் என்பதுதான் இங்கே புரியாத புதிராக இருக்கிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என்பதாகவும் அதற்கு காரணம் “பொம்மை முதல்வரும்” அவருக்கு உண்மையை சொல்லாமல் மறைக்கும் இவருக்கு ஆகாத அந்த சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் போலீசு அதிகாரிகளும்தான் என்பதாக அவரது எல்லா எபிசோடுகளையும் முடிக்கிறார்.
இதையெல்லாம் எந்த அச்சு ஊடகமும் காட்சி ஊடகமும் பேசமாட்டார்கள். அதனால், வேறு வழியே இல்லை. எனக்கு என்ன இன்னல் வந்தாலும் நான் பேசியே தீருவேன் என்று சபதமிடுகிறார். உண்மைதான், இவருடைய தரத்திற்கு தரம் தாழ்ந்து எந்த பத்திரிகையாளனும் எழுத துணிய மாட்டார்கள்தான். எந்த ஒரு செய்தியிலும், அதன் உண்மைத்தன்மையை சரிபார்த்து அலுவலகத்தின் பல்வேறு படிநிலைகளை கடந்துதான் எந்த ஒரு அச்சு ஊடகமாக இருந்தாலும் சரி, காட்சி ஊடகமாக இருந்தாலும் சரி அவை வெளியாகின்றன. இதுபோன்ற எந்த ஒரு கட்டமைப்பும் இல்லாத, குறைந்தபட்ச அறிவு நாணயமும் பத்திரிகையாளனுக்குரிய அறம் இல்லாமல் வாயில் வந்ததையெல்லாம் பேசுவதை, பிறர் மீது சேற்றை வாரியிரைப்பதை “ஜர்னலிசம்” என்பதாக நாம் ஏற்றுக் கொள்ள வேண்டுமா? இவரை நாம் துணிச்சலான ஜர்னலிஸ்ட் என்று தூக்கி வைத்து கொண்டாட வேண்டுமா? அதைத்தான் எதிர்பார்க்கிறார், சவுக்கு சங்கர்.
ஒரு தனியார் ரியல் எஸ்டேட் நிறுவன விவகாரத்தில், அந்த நிறுவனத்துக்கு போட்டி நிறுவனத்திடம் காசு வாங்கிக்கொண்டு வீடியோ பேசினார் என்பது தொடங்கி, ஒரு முன்னணி பத்திரிகையில் பணியாற்றும் அதன் ஊழியர்களுடன் கூட்டு சேர்ந்து கொண்டு 50 இலட்சம் வரையில் பேரம் பேசினார்கள் என்பது வரையில் சவுக்கு சங்கருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. எந்த ஒரு விவகாரத்திலும், ஒரு தரப்பிடம் பணத்தை வாங்கிக் கொண்டுதான் அந்த தரப்புக்கு எதிரான தரப்புக்கு எதிராக வீடியோ பேசிவருகிறார் என்ற கத்தரிக்காயும் சந்தைக்கு வந்து பல காலமாகிவிட்டது. அடுத்து, ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு விவகாரம் தொடங்கி, எட்டுவழிச்சாலை விவகாரம், சேலம் விவசாயி விவகாரம், கள்ளக்குறிச்சி மாணவி விவகாரம் வரையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிராக சர்ச்சையான முறையில் பேசிய விவகாரங்களும் போதுமான அளவுக்கு சந்தி சிரித்துவிட்டன. சவுக்கு சங்கரின் உண்மையான முகத்தை அம்பலமாக்கியிருக்கின்றன.
ஹேய் … நானும் ’ரவுடி’தான் !
ஆனாலும், ”ஹேய்… ஹேய்… சிட்டி, செங்கல்பட்டு, மதுரை, திருச்சி, சேலம், கோயம்புத்தூர், நார்த் ஆற்காடு, சவுத் ஆற்காடு, எஃப்.எம்.எஸ். வரைக்கும் பார்த்தவன்டா நானு… அறுவா கம்பெல்லாம் என்ன டச்சு பன்னி டச்சு பன்னி டயர்டாகி கிடக்கு. மோதுர யாரா இருந்தாலும் முழுசா வீடு போயி சேர மாட்டீங்கடா .. அடிச்சிப்பாரு …
வர்றவன் போறவன்லா அஞ்சி நிமிசம் ஆறு நிமிசம் அடிச்சா பரவாயில்லை… ஒருமாசம் ரெண்டு மாசம் விடாம கொண்டுபோயி அடிக்கிறீங்க… இந்த பாடி எவ்வளவு தாங்கும்னு ஒரு கணக்கு வச்சிக்கிற வேணாமா நானு? நான் பாட்டுக்கு எண்ணிக்கிட்டு இருக்கேன்… நீ பாட்டுக்கு அடிச்சிகிட்டு இரு…” னு ரவுடிக்கு விளக்கம் கொடுப்பாரு பாருங்க நம்ம வடிவேலு அந்த கதையாத்தான், சவுக்கு சங்கரும் தொடர்ந்து வீராவேசம் காட்டி வருகிறார், வீடியோக்களில்.
நாம் பேசுவதையெல்லாம் முக்கிய கட்சித்தலைவர்கள் பார்க்கிறார்கள் … ரசிக்கிறார்கள் … மக்கள் விரும்புகிறார்கள். மக்கள் ஆதரிக்கிறார்கள்… என்று அவரே சொல்லிக்கொள்கிறார். அதற்கு ஆதாரமாக, சவுக்கு மீடியாவின் சப்ஸ்கிரைபர்ஸ் எண்ணிக்கையையும் வீடியோ பார்வையாளர்களின் கணக்கையும் எடுத்துப் போடுகிறார்.
இதுதான் இலக்கணம் என்றால், யூடியூபர் குட்டிமாவையும், திருச்சி சாதனா, சூர்யா போன்றவர்களையும்தான் மக்கள் விரும்புகிறார்கள். அவர்கள் போடும் வீடியோக்களும், பலாப்பழத்தின் மீது மொய்க்கும் ஈக்களைப்போல பார்வைகள் இலட்சக்கணக்கில் குவியத்தான் செய்கிறது. குட்டிமா பேசாத பேச்சுக்களா? அவ்வளவு வெளிப்படையாக, வேறு எவராலும் பேசிவிட முடியுமா? அந்த துணிச்சல் வருமா? அவரும்தான் மீடியாக்களில் பேட்டி கொடுக்கிறார். வி.ஜே.வாக மாறி பேட்டியும் எடுக்கிறார். இந்த கழிசடைகளுக்கும் சவுக்கு சங்கருக்கும் என்ன வித்தியாசம் ? அட, கொஞ்சம் மனசாட்சியோட நீங்களே சொல்லுங்களேன் !
— ஆதிரன்.
மீண்டும் பெண் சர்ச்சையில் சவுக்கு சங்கர் ! 30 பேர் மீது பாய்ந்த வழக்கு !
அங்குசத்தில் வெளியான சவுக்கு தொடர்பான மற்ற செய்திகள் :