உச்ச நீதிமன்றத்துக்கே விபூதி அடித்த சவுக்கு சங்கர்! சாட்டையை சுழற்றிய தலைமை நீதிபதி ! நடந்தது என்ன ?
பல்வேறு கோரிக்கைகளுடன் உச்சநீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் தொடர்ந்த வழக்கில், ”நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக” சவுக்கு சங்கர் தரப்பில் அவரது வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்ததையடுத்து, ”உங்களுக்கு இதே வேலையா?” ”இனிவரும் காலங்களில் இது போல youtube மூலம் அவதூறு பரப்பிக் கொண்டு இருந்தால் பிணையை ரத்து செய்ய நடவடிக்கை எடுங்கள்.” என்பதாக உச்சநீதிமன்றம் கடுமை காட்டியிருக்கும் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதனை தொடர்ந்து, இதே வழக்கில் பல்வேறு அதிரடி உத்தரவுகளையும் பிறப்பித்திருக்கிறது.
அவதூறு பேச்சும் அடுத்தடுத்து பதிவான வழக்குகளும் !
கடந்த 2024 ஆம் ஆண்டு, ரெட்பிக்ஸ் யூடியூப் சேனல் சார்பாக அதன் உரிமையாளரான ரெட்பிக்ஸ் ஜெரால்டு, தனது நெருங்கிய தோழரான சவுக்கு சங்கரை நேர்காணல் செய்திருந்தார். அவர்கள் இருவரும் கலந்துரையாடிய அந்த நேர்காணலில், ”தமிழகத்தில் பணியாற்றும் பெண் போலீசு அதிகாரிகள் ஏதோ ஒரு வகையில் தங்களது உயர் அதிகாரிகளிடம் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்து கொள்கிறார்கள்” என்பதாக, ஒட்டுமொத்த பெண் போலீசாருக்கும் களங்கம் கற்பிக்கும் வகையிலான சர்ச்சைக்குரிய கருத்தை பேசியிருந்தார், சவுக்கு சங்கர்.
சவுக்கு சங்கரின் வரம்பு மீறிய அந்த அவதூறு பேச்சுக்காக தமிழகத்தில் முதல் வழக்காக, 2024 மே மாதம் 3ம் தேதி கோயம்புத்தூர் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து கோவை மத்திய சிறையிலடைத்தனர். அதனை தொடர்ந்து, அவரது சர்ச்சை பேச்சால் பாதிக்கப்பட்ட பெண் போலீசார்கள் சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் புகார் அளித்தனர்.
வழக்குகள்
தமிழகத்தில், அடுத்தடுத்து 16 வழக்குகள் பதிவாகின. சவுக்கு சங்கரை தொடர்ந்து, சர்ச்சைக்குரிய பகுதிகளை நீக்காமல், அவருக்கு ஆதரவாக அவரது நேர்காணலை அப்படியே வெளியிட்ட ரெட்பிக்ஸ் ஜெரால்டுக்கு எதிராகவும் வழக்குகள் பதிவாகின. வழக்குக்குப் பயந்து சென்னையில் பதுங்கியிருந்த ஜெரால்டை, திருச்சி மாவட்ட போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
அடுத்தடுத்து இரண்டு குண்டாஸ் !
தேனியில் தனியார் விடுதி ஒன்றில் தங்கியிருந்த சமயத்தில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டபோது, அவர் தங்கியிருந்த விடுதி மற்றும் அவர் பயணித்த காரில் கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றிய போலீசார் அவற்றுக்கு எதிராகவும் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், தமிழகத்தின் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து அவதூறான வீடியோக்களை பதிவிட்டு வந்த சவுக்கு சங்கருக்கு எதிராக அடுத்தடுத்து குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் தமிழக போலீசார் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க :
* 21,000 லஞ்சப்புகார்கள்… 2 -க்கு மட்டுமே எஃப்.ஐ.ஆர்… லஞ்ச ஒழிப்புத்துறையையே ஒழித்துகட்டிய அதிகாரிகள் !அதிர்ச்சியூட்டும் ஆதாரங்கள்! அங்குசம் Exclusive!
* விருதுநகர் கிராவல் மணல் கொள்ளை !அங்குசத்திற்கு வந்த டைரி !
* விருதுநகர் குவாரியில் சிக்கிய டைரி… சிக்கலில் அதிகாரிகள் !
சென்னை மாநகர காவல் ஆணையர் பரிந்துரையின் பேரில் பதிவான முதல் குண்டாஸை சென்னை உயர்நீதிமன்றமும், அதனை தொடர்ந்து தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் பரிந்துரையின் பேரில் தேனி மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா உத்தரவின் கீழ் பதியப்பட்ட இரண்டாவது குண்டாஸை உச்சநீதிமன்றமும் ரத்து செய்து உத்தரவிட்டது.
ஜாமீனில் வந்தும் தொடர்ந்த அவதூறு பேட்டிகள் !
உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து கடந்த ஆண்டு செப்-25 அன்று மதுரை மத்திய சிறையிலிருந்து நிபந்தனை பிணையில் விடுவிக்கப்பட்டார், சவுக்கு சங்கர். பிணையில் வெளிவந்ததும் வழக்கம் போல, அவதூறு பேட்டிகளை அதுவும் அவரது உற்ற தோழர் ரெட்பிக்ஸ் ஜெரால்டுடன் இணைந்தே வெளியிட்டும் வந்தார் சவுக்கு சங்கர். ”தந்தையின் நிழலில் வளர்ந்த போன்சாய் செடி.” என்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் மீதான தனிப்பட்ட விமர்சனம் தொடங்கி, பல்வேறு அவதூறு பேட்டிகளை அதிரடியாக வெளியிட்டு வந்தார் சவுக்கு சங்கர்.
இதற்கிடையில், தமிழகத்தில் தனக்கு எதிராக பதியப்பட்ட 16 வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும்; மேற்படி வழக்குகள் அனைத்தையும் ஒரே இடத்தில் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளுடன் அடுத்தடுத்து 5 வழக்குகளை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார் சவுக்கு சங்கர்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா மற்றும் சஞ்சய் குமார்
உங்களுக்கு இதே வேலையா?
மேற்படி வழக்கானது, உச்சநீதிமன்றத்தில் பிப்ரவரி-24 அன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா மற்றும் சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
சவுக்கு சங்கர் சார்பாக மூத்த வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன் ஆஜரானார். அப்போதுதான், தனது கட்சிக்காரரான சவுக்கு சங்கர், “நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக” உச்சநீதிமன்ற நீதிபதிகளிடத்தில் தெரிவித்தார். இதை கேட்டதும் கடுப்பான தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, ”உங்களுக்கு இதே வேலையா? உங்களின் வாதி சவுக்கு சங்கரை பற்றி நன்றாக தெரியும். எத்தனை முறை தான் அவர் நீதிமன்றத்தின் முன் நிபந்தனை அற்ற மன்னிப்பு கேட்பார் என தெரியவில்லை.” என அதிருப்தியை பதிவு செய்தார்.
மூத்த வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன்
அரசு தரப்பில் கடும் ஆட்சேபணை !
”நீதிபதிகள், காவல் துறை அதிகாரிகள், பத்திரிகையாளர் என ஒருவரையும் விட்டுவைப்பதில்லை. பலரை பற்றியும் பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருபவர். இவரது மனுவையே நீதிமன்றம் ஏற்றுக்கொண்டிருக்கக்கூடாது” என கடுமையான ஆட்சேபத்தை தெரிவித்திருக்கிறார், ஒன்றிய அரசுதரப்பு வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி.
தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லுத்ரா, நீதிமன்றத்தையும் மோசடியான முறையில் சவுக்கு சங்கர் ஏமாற்றிய விவகாரத்தை அம்பலமாக்கினார். பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசியதற்காக பதியப்பட்ட வழக்குகள் ஒருபுறமிருக்க; நீதிமன்றத்தில் நேர் நிறுத்துவதற்காக அவரை அழைத்து வந்த சமயத்தில் போலீசாரிடம் அத்துமீறி நடந்துகொண்டதற்காக; ஆபாசமாக பேசியதற்காக; அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்ததற்காக தனியே ஒரு வழக்கு திருச்சியில் பதிவு செய்யப்பட்டது. இது பெண்களுக்கு எதிரான குற்றம். இந்த வழக்கிற்கும் youtube காணொளிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால், சவுக்கு சங்கர் உச்சநீதிமன்றத்தை திசை திருப்பும் விதமாக மோசடியான முறையில் அந்த வழக்கிற்கும் தடை வாங்கியுள்ளார். இது கண்டனத்துக்குரியது. நீதிமன்றத்தை எப்படி இவ்வாறு தவறாக வழிநடத்த முடியும்.” என்பதாக கேள்வி எழுப்பினார்.
உச்சநீதிமன்றத்துக்கே விபூதி அடித்த சவுக்கு சங்கர் !
மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லுத்ரா
மிக முக்கியமாக, தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லுத்ரா வாதிடுகையில், “இதே சவுக்கு சங்கரின் அவதூறு பேச்சுக்கு எதிரான வழக்கு ஒன்றில், கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பரில் மாண்புமிகு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி முக்கியமான உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார். அந்த உத்தரவில், தெள்ளத் தெளிவாக ”சவுக்கு சங்கருக்கு பிணை தருகிறோம். ஆனால், அவர் youtube மற்றும் இதர சமூக வலைதளங்களில் எந்தவிதமான அவதூறு வீடியோவையும் பதிவு செய்யக்கூடாது” என்ற நிபந்தனையை விதித்திருந்தார்கள். அவற்றை அறவே மதிக்காமல் அப்பட்டமாக மீறியிருக்கிறார், சவுக்கு சங்கர்” என்பதாக ஆணித்தரமான வாதத்தை எடுத்து வைத்தார். மேலும், இன்று வரையிலும்கூட, அந்த உத்தரவை சவுக்கு சங்கர் மதிக்கவில்லை என்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
சவுக்கு சங்கர் தரப்பில், இதற்கு முன்னர் அருண் கோஸ்வாமிக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பின்னர், நீதிமன்ற உத்தரவையடுத்து முதலில் பதிவு செய்யப்பட்ட வழக்கு மீதான விசாரணை மட்டுமே தொடர்ந்தது. அதுபோல, முதல் வழக்கை மற்றும் வைத்துக் கொண்டு மற்ற வழக்குகளையெல்லாம் தள்ளுபடி செய்ய வேண்டுமென்ற வாதத்தை முன்வைத்தார்கள்.
அதிரடி காட்டிய உச்சநீதிமன்றம் !
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, கடும் கோபம் கொண்டு சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞரிடம் பல்வேறு கேள்விகளை முன் எழுப்பினார்.
மிக முக்கியமாக, அருண் கோஸ்வாமி விவகாரம் இந்த வழக்கிற்கு பொருந்தாது என்றும்; தமிழக அரசின் வழக்கறிஞர் சுட்டிக்காட்டியதை போல திருச்சியில் பதிவான வழக்கை தனியாகத்தான் எதிர்கொண்டாக வேண்டுமென்றும் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்கள்.
இடைப்பட்ட காலத்தில் சவுக்கு சங்கருக்கு எதிராக பதியப்பட்ட வழக்குகள் குறித்து பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடைகள் அனைத்தும் நீக்கப்படுகிறது. முதன் முதலில் பதிவு செய்யப்பட்ட வழக்கானது கோயம்புத்தூர் மாநகரில் பதிவான காரணத்தினால் மற்ற மாவட்டம் மாநகரம் அனைத்திலும் பதியப்பட்ட வழக்குகள் கோயம்புத்தூர் மாநகர காவல் துறைக்கு மாற்றப்படுகிறது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
அங்கு விசாரணை மேற்கொண்டு அனைத்து வழக்கிலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படலாம். மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லுத்ரா குறிப்பிட்டதை போல, மீண்டும் வழக்கு விசாரணை குறித்து, நீதிமன்ற தீர்ப்புகள் குறித்து பேசுவாரேயானால் அதனை குறிப்பிட்டு தனியே வழக்கு பதிவு செய்யுங்கள் விசாரிக்கிறேன் என்றும் உத்தரவிட்டிருக்கிறது, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமர்வு.
ஒருபக்கம் முஷ்டியை உயர்த்தி வீராவேச உரையாற்றும் சீமான்… மறுபக்கம், மீசையை வருடியபடி தொண்டையை செருமியபடி ஆதாரங்களுடன் அடித்துப்பேசும் சவுக்கு சங்கர்… என இவர்கள் இருவரது வரம்பு மீறிய அலப்பறைகளும் அதிலும் குறிப்பாக அந்த உடல் அசைவுகளும் அறுவெறுக்கத்தக்கவை.
தமிழகத்தின் மானக்கேடாக அமைந்த இந்த இருவர் விவகாரத்தில், சவுக்கு சங்கருக்கு எதிராக உச்சநீதிமன்றம் சாட்டையை சுழற்றியிருப்பதும்; மறுபுறம் விஜயலெட்சுமி விவகாரத்தில் சீமானுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் கிடுக்கிப்பிடி போட்டிருப்பதும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது. நிறைவாக, திருப்புமுனை தீர்ப்புகளுக்காக காத்திருக்கிறது, தமிழகம் !
— ஆதிரன்.
அங்குசத்தில் வெளியான சவுக்கு தொடர்பான மற்ற செய்திகள் :