அடுத்தடுத்து கைதாகும் “சார்”கள் ! தேவை நீதிபோதனை ! Editorial (ஆசிரியர் தலையங்கம்)
தமிழகத்தின் பெரும்பாலான பள்ளி வளாகங்களில் அக்கல்வி நிறுவனங்களை சேர்ந்த ஆசிரியர்களாலேயே மாணவர்கள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்ற யதார்த்தமும்; அடுத்தடுத்து பல “சார்”கள் போக்சோவில் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவங்களும் நம்மை நிலைகுலைய வைக்கின்றன.
அதிலும் குறிப்பாக, கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒன்றில் வெறும் 13 வயதான 8-ம் வகுப்பு மாணவியை அதே பள்ளியின் ஆசிரியர்களான ஆறுமுகம், சின்னசாமி, பிரகாஷ் ஆகிய மூன்று பேருமாக சேர்ந்து அந்த பிஞ்சை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியிருப்பதும் அதன் காரணமாக கருக்கலைப்பு செய்ய நேரிட்ட கொடுந்துயரமும்; திருச்சி மாவட்டம் மணப்பாறையில் தனியார் பள்ளி ஒன்றில் 4-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த புகாரில் அப்பள்ளியின் அறங்காவலர் வசந்த குமார் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்ட விவகாரமும்; சென்னை அசோக் நகரில் தனியார் பள்ளி ஒன்றில் 9 ஆம் வகுப்பு மாணவனை ஆசிரியர் சுதாகர் வன்புணர்வுக்கு ஆளாக்கிய விவகாரமும் தமிழகம் எதிர் கொண்டிருக்கும் பெருத்த அவமானங்களாகியிருக்கிறது.

இதனை தொடர்ந்து, கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும் திருப்பூர் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி கணித ஆசிரியர் சுந்தரவடிவேலு; காங்கேயம் அரசுப் பள்ளியில் ஆசிரியர் சிவகுமார்; புதுக்கோட்டை – அன்னவாசல் பள்ளியின் பகுதிநேர உடற்கல்வி ஆசிரியர் கே.அடைக்கலம்; சேலம் மாவட்டம் – ஏற்காடு அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் இளைய கண்ணு; திருச்சி மாவட்டத்தில் அரசு உதவி பெறும் ஒரு பள்ளியின் ஆசிரியர் அய்யப்பன்; தர்மபுரி அரசு மேல்நிலைப்பள்ளி கணித ஆசிரியர் ராஜகுரு; ஈரோடு பவானிசாகர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் தண்டபாணி என அடுத்தடுத்து ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவங்கள் அதிர வைக்கின்றன.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
பள்ளிகளில் பாலியல் சார்ந்த துன்புறுத்தல், அச்சுறுத்தல் குறித்து புகாரளிக்க 14417 என்ற எண்ணில் அதன் உதவி மையத்தை அணுகலாம் என்ற தமிழக அரசின் அறிவிப்பும்; தமிழகத்தில் கடந்த பத்தாண்டுகளில் மட்டும் 255 ஆசிரியர்கள் பாலியல் புகாரில் சிக்கியிருக்கும் நிலையில், பாலியல் தொல்லை சம்பவம் தொடர்பான புகாரில் உண்மைத்தன்மை நிரூபணம் செய்யப்பட்டால் அதுசார்ந்த ஆசிரியர்களின் கல்வித்தகுதி ரத்து செய்யப்படும் என்பதாகவும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்திருப்பதும் ஆறுதலை தருகின்றன.

நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் குறித்த கவுன்சலிங் உள்ளிட்டு பள்ளி மாணவர்களிடையே தமிழக அரசின் சார்பில் முன்னெடுக்கப்பட்ட விழிப்புணர்வு நிகழ்வுகளின் தொடர்ச்சியாகவே, இதுபோன்ற பல்வேறு குற்றச்சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றன. குற்றங்களுக்கான தண்டனைகள் ஒருபுறமிருக்க; ஒரு காலத்தில் பள்ளிகளில் கலைத்தொழில், நன்னெறி வகுப்புகள் என்பதாக பாடப்பிரிவுகள் இடம்பெற்றிருந்தன. காலப்போக்கில், அவை மறைந்துபோயிற்று. எஞ்சியிருக்கும் விளையாட்டுப் பாடத்திற்கான வகுப்புகள்கூட கணக்கு வாத்தியார்களால் களவாடப்பட்டு விடுகின்றன. பொருத்தமான கல்விச்சூழலை உருவாக்குவதிலும் பள்ளிக்கல்வித்துறை கவனம் செலுத்த வேண்டும் என்பதையே இந்த விவகாரங்கள் உணர்த்தியிருக்கின்றன.