பக்கவாத நோய் என்பது ஒரு நொடியில் வரும் நோயாகும். நன்கு பேசி, நடந்து கொண்டிருக்கும் ஒருவர் திடீரென தன் சுயநினைவை இழந்து கீழே விழுவாராயின் அவரை மூளை நரம்பியல் நிபுணரிடம் அழைத்துச் செல்ல வேண்டும். எவ்வளவு துரிதமாக அழைத்துச் செல்கிறோமோ, அவ்வளவு துரிதமாக மூளை பாதிப்படையாமலும், மூளை தன்செயல் திறனை இழந்து விடாமலும் தடுத்து நிறுத்தி விடலாம். அந்த நபரை உடனே மருத்துவரிடம் அழைத்துச் சென்றால் தான் விரைவாக வைத்தியத்தை ஆரம்பிக்க முடியும்.
நான் ஏன் இந்த துரிதமாக என்ற வார்த்ததையை அடிக்கடி உபயோகிக்கிறேன் என்று யோசிக்கிறீர்களா?
நமது மூளையில் இரத்த ஓட்டம் தடைபடுவதால் ஒவ்வொரு வினாடியும் ஒரு மில்லியன் நியூரான்கள் இறக்கின்றன. நமது மூளையின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு விதமான வேலையை செய்கின்றன. ஒரு பகுதி செய்யும் வேலையை மற்ற பகுதிகள் செய்யமுடியாது. எனவே எந்த பகுதிக்கு இரத்த ஓட்டம் தடைபடுகிறதோ, அந்த பகுதி தன் வேலையை செய்ய முடிவதில்லை. எனவே பக்கவாத நோயால் வரும் பாதிப்பை 100 சதவிகிதம் சரிசெய்து விட முடியாமல் போகிறது. இதை தடுப்பதற்காகவே நாம் விரைந்து செயலாற்ற வேண்டும். வைத்தியமுறைகள் என்ன என்பது பற்றி அறிய ஆவலா! வாருங்கள் பார்ப்போம்.
இதைப் பற்றி நான் சுருக்கமாக கூறுகிறேன். முதலில் அவரின் நாடித்துடிப்பு, இரத்த அழுத்தம், இரத்ததில் சர்க்கரையின் அளவு மற்றும் இரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜனின் அளவு ஆகியவற்றை பார்த்துவிட்டு, பிறகு CT/MRI Scan எடுத்து இரத்த அடைப்பினால் ஏற்பட்ட பக்கவாத நோயா அல்லது இரத்தக் கசிவினால் ஏற்பட்ட பக்கவாத நோயா என்பதை உறுதி செய்கிறோம். இவை இரண்டிற்கும் வைத்தியமுறைகள் வேறுபடுகின்றன.
மரு.அ.வேணி MD., DM (NEURO)
மூளை நரம்பியல் நிபுணர்.
இரத்த அடைப்பினால் வரும் பக்கவாத நோய்க்கு என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி முதலில் பார்ப்போம். பக்கவாத நோய் ஏற்பட்ட முதல் 6 மணி நேரத்திற்கு வைத்தியமுறை மிகவும் துரிதமாக செய்யப்படுகிறது. அப்போது தான் அந்த நோயாளியை இறப்பிலிருந்து காக்க முடியும். அதற்கு பிறகு அவருக்கு பக்கவாத நோய் ஏன் ஏற்பட்டது என்பதற்கான காரணிகளை கண்டறியும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.
24 மணி நேரத்திற்கு பிறகு பக்கவாத நோயினால் ஏற்படும் பின்விளைவுகளில் இருந்து நோயாளியை காப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.
பக்கவாத நோய் ஏற்பட்ட முதல் 3 அல்லது 4 நாட்களில் அந்த நோயின் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம். இதைத் தடுப்பதற்கான வைத்தியமுறைகள் செய்யப்படுகின்றன. 24 மணி நேரத்திற்கு பிறகு இயற்பியல் சிகிச்சையும் சேர்த்து அளிக்கப்படுகிறது. இது நோயாளி தன் இயல்பு வாழ்க்கைக்கு விரைவாக திரும்புவதற்கு உதவி புரிகிறது. பக்கவாத நோயின் தாக்கத்தின் அளவு எந்த இரத்தக் குழாய் பாதிக்கப்படுகிறதோ,
அதாவது சிறிய இரத்தக் குழாயா? அல்லது பெரிய இரத்தக் குழாயா? என்பதைப் பொறுத்து அமைகிறது.
மக்கள் பக்கவாத நோயின் பாதிப்பை ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள். எனது மாமாவிற்கு பக்கவாத நோய் ஏற்பட்டது அவர் 3 நாட்களில் சரியாகி விட்டார், ஆனால் எனது அப்பாவிற்கு 3 மாதங்களாகியும் சரியாகவில்லை. ஏன் இந்த முன்னேற்றத்தில் வேறுபாடு? என கேட்கிறார்கள்.
சிறிய இரத்தக்குழாய் பாதிப்பினால் ஏற்பட்ட பக்கவாத நோய் சற்று விரைவாக சரியாகிவிடுகிறது. ஆனால் பெரிய இரத்தக் குழாய் பாதிப்பு ஏற்படும் போது கால அவகாசம் அதிகம் தேவைப்படுகிறது. இதை நேயர்கள் புரிந்து கொள்ள வேண்டும். பக்கவாத நோயின் முன்னேற்றம் மாத்திரைகளில் மட்டும் அல்ல இயற்பியல் சிகிச்சையில் ஒரு பகுதியும், நோயாளியின் மனோ தைரியத்தில் ஒரு பகுதியும் உள்ளது. இவை மூன்றும் சேரும் போது தான் முன்னேற்றம் விரைவாக வரும்.
முதல் 24 மணி நேரத்தில் செய்யப்படும் சிகிச்சை முறைகள் பற்றி வரும் வாரங்களில் பார்ப்போம்.