ஜனநாயக மாண்பை மீறிச் செயல்படுகிறார் பேரவைத் தலைவர்- அதிமுக கடும் கண்டனம் !
தமிழ்நாடு பேரவைத் தலைவர் பிரபாகர் அரசியல் சர்ச்சையில் சிக்கியுள்ளார். நடுநிலைமையாக இருக்கவேண்டிய பேரவைத் தலைவர் ஆளும் கட்சிக்கு ஆதரவாக அதிமுகவை உடைக்கும் பணிக்கு உதவிகரமாக இருக்கிறார் என்பதே அதிமுக உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டாக உள்ளது.
தேர்தல் முடிந்து கடந்த 11ஆம் தேதி சட்டப்பேரவையில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பதவியேற்பு விழா நடைபெற்றது. 12ஆம் தேதி புதிய பேரவைத் தலைவர் மற்றும் பேரவைத் துணைத் தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்டுப் பேரவைத் தலைவராக ஜேசிடி பிரபாகர் தேர்வு செய்யப்பட்டார். அவை முன்னவர் செங்கோட்டையனும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியும் சட்டப் பேரவை மரபின்படி கரங்களைப் பற்றி பேரவைத் தலைவர் இருக்கையில் அமர வைத்தனர்.
13ஆம் தேதி சட்டப்பேரவையில் தவெக அரசின் மீது நம்பிக்கை வாக்கு கோரும் தீர்மானத்தின் மீது பல்வேறு சட்டமன்றக் கட்சிக் குழுத் தலைவர்களும் உரையாற்றினர். அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். பின்னர் அதிமுகவில் இன்னொரு குழுவாக இயங்குவதாக அறிவித்துள்ள வேலுமணியையும் பேச வாய்ப்பு அளித்தார். இதற்கு அதிமுக சார்பில் கடும் கண்டனம் எழுந்த நிலையில், பேரவைத்தலைவர்,“யார் பேசவேண்டும் என்பதை முடிவு செய்யும் அதிகாரம் எனக்கு உள்ளது. இதில் யாரும் தலையிட முடியாது. வேலுமணி உரையாற்ற அனுமதி கேட்டார். அனுமதித்திருக்கிறேன். வேறு யாரும் அனுமதி கேட்கவில்லை” என்று கூறினார்.
பேரவைத் தலைவரின் பேச்சு பேரவையின் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது என்று பல பத்திரிக்கையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். காரணம் திமுக அளித்த சட்டமன்றக் குழுத் தலைவர் உதயநிதி என்பதை ஏற்று அதிக இடங்களைப் பெற்றிருப்பதால் அவரை அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சித் தலைவராக அங்கீகரித்துள்ளார். அதைப்போலவே அதிமுக சார்பில் சட்டமன்றக் குழுத் தலைவராகப் பழனிசாமியைத் தேர்வு செய்து அனுப்பிக் கடிதத்தின் மீது நடவடிக்கை எடுக்காமல் இதுநாள் வரை உள்ளார். “காரணம் அதிமுகவில் உள்ள இன்னொரு குழுவும் தலைவராக வேலுமணி அவர்களைத் தேர்வு செய்து கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விரைவில் முடிவை அறிவிப்பேன். எனக்குக் காலக்கெடு விதிக்கமுடியாது” என்று பேரவைத் தலைவர் கூறியுள்ளார்.
பேரவைத் தலைவரின் கருத்தை மறுத்துப் பத்திரிக்கையாளர் ஷ்யாம் கூறும்போது,“பேரவைத் தலைவர், அதிகாரப்பூர்வ அதிமுக கொடுத்த பழனிசாமி குழுத்தலைவர் என்று கடிதத்தை ஏற்று அவரை அறிவித்திருக்கவேண்டும். அதிமுகவில் உள்ள குழுவை அங்கீகரிக்கவேண்டிய தேவையில்லை. காரணம் அதிமுகவின் தாய் அமைப்புக்குச் சட்டமன்றக் குழுத் தலைவரைத் தேர்வு செய்யும் அதிகாரம் படைத்தது. இந்நிலையில் பேரவைத் தலைவர் இரு குழுவின் கடிதத்தை ஆய்வு செய்கிறேன் என்று காலம் கடத்துவது ஜனநாயக விரோதம்” என்று சுட்டி காட்டியுள்ளார்.
அண்மையில் அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் 3 பேர் பதவி விலகியுள்ளனர். பதவி விலகியவர்கள் தவெகவிலும் உடனே இணைந்துவிட்டனர். தற்போதைய செய்தியின்படி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அம்பாசமுத்திரம் இசக்கி முத்துவும் பதவி விலகியுள்ளார். இந்த 4 பேரும் அதிமுகவின் வேலுமணி குழுவில் இருந்தவர்கள். அரசின் மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் அதிமுகவின் கொறடா கட்டுப்பாட்டை மீறி அரசுக்கு ஆதரவாக வாக்களித்த 25 பேரில் இந்த 4 பேரும் உள்ளனர். அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேரவைத் தலைவரைச் சந்தித்து, அரசுக்கு ஆதரவாக வாக்களித்த 25 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களைக் கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ்ப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று 14.05.2026ஆம் கடிதம் கொடுத்துள்ளார்.
பேரவைத் தலைவர் அதிமுக குழுத் தலைவர் யார் என்பதையும் அறிவிக்காமலும், 25 பேரைக் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ்ப் பதவி நீக்கம் செய்யாமலும் காலம் கடத்தி வருகிறார். கட்சித் தடைச் சட்டத்தின் கீழ்ப் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டியவர்களின் பட்டியலில் உள்ள 4 பேர் தற்போது சட்டமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளனர். இதைப் பேரவைத் தலைவர் ஏற்றுக் கொள்வதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் இன்பதுரை செய்தியாளர்களிடம் பேசும்போது,“கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்படி பதவி நீக்கம் செய்யப்பட வேண்டியவர்களின் பதவி விலகலைப் பேரவைத் தலைவர் ஏற்றிருப்பது உச்சநீதி மன்றம் வழங்கியுள்ள அண்மைக் காலத் தீர்ப்புகளுக்கு எதிரானது. பேரவைத் தலைவர் ஜனநாயக மாண்பை மீறி அரசுக்கு ஆதரவாகச் செயல்படுகிறார்” என்று கட்டமாக விமர்சனம் செய்துள்ளார். மேலும் பல அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதையும் பேரவைத் தலைவர் ஏற்பார் என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.
பேரவைத் தலைவருக்கு வானளாவிய அதிகாரம் இருப்பதாகச் சொல்லப்பட்ட காலம் மலையேறிவிட்டது. உச்சநீதிமன்றம் யாருக்கு என்ன அதிகாரம் உள்ளது என்பதைப் பல தீர்ப்புகளில் சுட்டிக்காட்டி அதிகார மமதை பிடித்தோரின் தலையில் குட்டும் வைத்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு பேரவைத் தலைவர் சட்டப்படி அதிமுக குழுத் தலைவராகப் பழனிசாமியை அங்கீகரித்து அறிவிப்பை வெளியிட்டும், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்படி 25 பேரையும் பதவி நீக்கம் செய்தும் ஜனநாயக மாண்பைக் காக்கவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
— ஆதவன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.