நம் உடலில் இன்சுலின் என்னும் நொதியின் சுரப்புத் தன்மை குறைந்தாலோ,அல்லது நமது செல்களில் குளுக்கோஸை பயன்படுதுவதற்க்கு தடை ஏற்பட்டாலோ அல்லது நமது உணவு குடலில் புரதப் பொருட்களின் சுரப்புத் தன்மையில் மாற்றம் ஏற்பட்டாலோ,நமது உடலில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்கத் தொடங்கிவிடுகிறது.
பக்கவாதத்தை ஏற்படுத்தும் காரணிகளில் மிகவும் முக்கியமான ஒன்றான சர்க்கரை நோயைப் பற்றி இந்த வாரம் பார்ப்போம்.
நீரிழிவு நோய் என்னும் சர்க்கரை நோயைப் பற்றி மக்களிடம் பல்வேறு விதமான மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன என்பதை சமூக வலைத்தளங்களில் இருந்து நான் தெரிந்து கொண்டேன். அதாவது சிலர், ‘சர்க்கரை நோய் என்பது ஒரு வியாதியே அல்ல, இதற்கு மருந்து உட்கொள்ளத் தேவையில்லை. சர்க்கரையின் அளவு நம் உடலில் எந்த அளவு உள்ளதோ அந்த அளவிற்கு சக்தி பிறக்கும் என்றும் அலோபதி மருந்துகளினால் இதை கட்டுப்படுத்த முடியாது’ என்றும் பல்வேறு தவறான கருத்துக்களை மக்களிடம் தைரியமாக பரப்புகிறார்கள். இதனால் மாத்திரைகளை உட்கொள்ளாமல் நிறுத்திவிட்டு, இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகி பக்கவாத நோய் மற்றும் மாரடைப்பு நோயால் உயிரிழந்த பல நோயாளிகளை நான் பார்த்திருக்கிறேன்.
எனவே நீரிழிவு நோய் என்றால் என்ன?…எவ்வாறு அது ஏற்படுகிறது?… அதன் பாதிப்புகள் என்னென்ன?… என்பதை மருத்துவர் என்ற முறையில் உங்களுக்கு கூற நான் கடமைப்பட்டிருக்கிறேன்.
Dr. அ.வேணி MD., DM (NEURO)
மூளை நரம்பியல் நிபுணர்.
“அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு” என்னும் பழமொழி சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மிகவும் பொருத்தமானது. நம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லும் தமது பணியை செய்வதற்கு ஆக்ஸிஜன் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு குளுக்கோஸ் எனப்படும் ஒரு வகையான சர்க்கரையும் மிகவும் அவசியமானது. சாதாரணமாக நமது உடலில் சர்க்கரையின் அளவு உணவிற்கு முன் 100mg/dl-க்கு குறைவாகவும், உணவிற்கு பின் 180mg/dl-க்கு குறைவாகவும் இருக்க வேண்டும். எப்போது சர்க்கரையின் அளவு 200mg/dl-ஐ விட அதிகமாகிறதோ, அப்போதே அதுவரை நமக்கு ஆக்கத்தை கொடுத்த சர்க்கரையானது நம்மை அழிக்கவும் தொடங்கிவிடுகிறது. இதைத் தான் நீரிழிவு நோய் என்கிறோம்.
இந்த அதிகமான சர்க்கரையை செரிப்பதற்காக நமது உடலில் பல்வேறு வகையான மாற்றங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. இதில் பல்வேறு நச்சுப் பொருட்களும் உருவாகின்றன. இந்த நச்சுப் பொருள் சிறுநீரகம், மூளை, நரம்பு மண்டலம், இரத்தக் குழாய்கள் மற்றும் கண் விழிப்படலம் ஆகியவற்றை சிறிது சிறிதாக பாதிக்கத் தொடங்குகிறது. இவையாவும் நம் கண்களுக்கு தெரிவதில்லை. இந்த உறுப்புகளில் 50 சதவிகித பாதிப்புகள் ஏற்பட்ட பின்னரே அறிகுறிகள் தென்படத் தொடங்குகிறது. ஆகையால் தான் மருந்துகள் கொடுத்தும் முழுமையாக குணப்படுத்த முடியாமல், அதன் பாதிக்கும் தன்மையை மட்டுமே குறைக்க முடிகிறது. எனவே வருமுன் காப்பதே சாலச் சிறந்தது என்பதை உணர்வோம்.
சரி, இந்த நீரிழிவு நோய் எவ்வாறு ஏற்படுகிறது என்பதை பார்ப்போமா!…நம் உடலில் இன்சுலின் என்னும் நொதியின் சுரப்புத் தன்மை குறைந்தாலோ, நமது செல்களில் குளுக்கோஸை பயன்படுத்துவதற்கு தடை ஏற்பட்டாலோ அல்லது நமது உணவுக் குடலில் புரதப் பொருட்களின் சுரப்புத் தன்மையில் மாற்றம் ஏற்பட்டாலோ, நமது உடலில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்கத் தொடங்கிவிடுகிறது.
இந்த நிலை ஏன் நம் உடலிற்கு ஏற்படுகிறது என்று சற்றே சிந்திக்க வேண்டும். இதைப் படிக்கும் அனைவரும் ஒரு காகிதத்தையும், பேனாவையும் எடுத்துக் கொள்ளுங்கள். கடந்த மூன்று நாட்களில் என்னென்ன சாப்பிட்டீர்கள் என எழுதுங்கள். பொரும்பாலான வீடுகளில் காலையில் இட்லி, தோசை. மதியம் சாதம். இரவு இட்லி, தோசை, அல்லது சப்பாத்தி. இது தவிர காலை மற்றும் அந்தி வேளையில் தேனீர் அருந்துவதோடு, அதோடு சேர்த்து ஏதாவது நொறுக்கு திண்பண்டம் உண்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். நாம் உண்ணும் உணவில் இயற்கையாக கிடைக்கும் பச்சை காய்கறிகள், பழங்கள், மற்றும் கீரைகளின் அளவு மிகவும் குறைவாகவே உள்ளது. நாம் உண்ணும் உணவில் இருக்கும் சர்க்கரையின் அளவு மிகவும் அதிகமாக (Carbohydrate Toxicity) இருப்பதால் தான் சர்க்கரை நோய் அதிகமாகிக் கொண்டு வருகிறது. காய்கறி, கீரைகளைத் தவிர எதை நாம் எடுத்துக் கொண்டாலும் அதனை அளவோடு தான் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படியில்லாமல், இதே போன்ற வாழ்வியல் முறை நம்மிடம் தொடர்ந்து இருந்தால் 2020-ல் (இன்னும் 2 வருடங்களே உள்ளன) இந்தியாவில் உள்ள ஒவ்வொரு 7-வது மனிதனுக்கும் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளது என்று ஆய்வுகள் கூறுகின்றன.
குடும்பத்தில் சர்க்கரை வியாதி உள்ளவர்கள் என்ன செய்ய வேண்டும் மற்றும் அவர்களின் குழந்தைகள் சர்க்கரை வியாதி வராமல் தடுக்க என்ன செய்யலாம் என்பதைப் பற்றி பார்ப்போம்…