அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

தமிழ்த் திரைப்படம் சமூக மாற்றத்தின் வலிமையான ஊடகம் – முனைவர் கி. சதீஷ்குமார்

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

தமிழ்த் திரைப்படம் சமூக மாற்றத்தின் வலிமையான தகவல் தொடர்பு ஊடகம் துவாக்குடி அரசு கலைக்கல்லூரியில்.

கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி பேராசிரியரும் வீதி நாடகக் கலைஞருமான  முனைவர் கி. சதீஷ்குமார் சிறப்புரை

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

திருச்சிராப்பள்ளி அரசு கலைக் கல்லூரி  காட்சித் தொடர்பியல் துறை சார்பில், “திரைமொழியில் தமிழ்மொழி” என்ற தலைப்பில் ஒரு நாள் சிறப்புச் சொற்பொழிவு இன்று கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள காட்சித் தொடர்பியல் ஆய்வக அரங்கில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் பி. சத்யா தலைமை வகித்தார். நிகழ்ச்சியினை காட்சித் தொடர்பியல் துறைத் தலைவர் முனைவர் அ. பூரணி   ஒருங்கிணைத்து நெறிப்படுத்தினார்.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

நிகழ்ச்சியில் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியரும், கவிஞர், பேச்சாளர், வீதி நாடகக் கலைஞருமான முனைவர் கி. சதீஷ்குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, “திரைமொழியில் தமிழ்மொழி” என்ற தலைப்பில் விரிவான சிறப்புரையாற்றினார்.

திருச்சிராப்பள்ளி அரசு கலைக் கல்லூரி  காட்சித் தொடர்பியல் துறை
திருச்சிராப்பள்ளி அரசு கலைக் கல்லூரி  காட்சித் தொடர்பியல் துறை

தமிழ்த் திரைப்படத்தின் நூற்றாண்டுக்கும் மேலான பயணத்தை வரலாற்றுப் பின்னணியுடன் விளக்கிய அவர், மௌனப்படக் காலம் தொடங்கி பேசும் படங்களின் தோற்றம், கருப்பு-வெள்ளை திரைப்படங்களின் பொற்காலம், ஈஸ்ட்மேன் கலர் தொழில்நுட்பத்தின் அறிமுகம், வண்ணத்திரைப்படங்களின் வளர்ச்சி, சினிமாஸ்கோப், டிஜிட்டல் தொழில்நுட்பம், டிஜிட்டல் ஒளிப்பதிவு, ஒலிநுட்ப வளர்ச்சி மற்றும் ஓ.டி.டி. தளங்கள் வரை தமிழ்த் திரைப்படம் கடந்து வந்த பரிணாம வளர்ச்சியை காலவரிசைப்படி தொகுத்து விளக்கினார். பண்டைய கலை மரபுகளிலிருந்து நவீன தொழில்நுட்பம் வரை காலத்திற்கேற்ப தன்னைத் தகவமைத்துக் கொண்டு தமிழ்த் திரைப்படம் தொடர்ந்து வளர்ந்து வருவதாகக் குறிப்பிட்டார்.

தமிழ் திரைப்படங்களில் மொழியின் ஆளுமை குறித்து எடுத்துரைத்த அவர், திரைப்பட வசனங்களும் பாடல்களும் வெறும் பொழுதுபோக்கிற்காக உருவாக்கப்பட்டவை அல்ல; சமூகச் சிந்தனை, பகுத்தறிவு, மனிதநேயம், மொழிப்பற்று, சமூக நீதி மற்றும் பண்பாட்டு அடையாளத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த சக்திவாய்ந்த தகவல் தொடர்புக் கருவிகளாக அவை விளங்கியுள்ளன என்றார். குறிப்பாக ‘பராசக்தி’ திரைப்படத்தின் வசனங்கள் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்தியதுடன், தமிழ் மொழியின் செறிவையும் பகுத்தறிவுச் சிந்தனையையும் பாலின சமத்துவத்தையும், கோடிக்கணக்கான மக்களிடம் கொண்டு சென்றதாகக் குறிப்பிட்டார்.

திரைப்படப் பாடல்கள் தமிழ் மொழியின் இனிமை, இலக்கிய வளம் மற்றும் பண்பாட்டு விழுமியங்களை உலகெங்கும் எடுத்துச் சென்றுள்ளன என்றும், கவிஞர்கள் படைத்த பாடல் வரிகள் தமிழ் மொழியின் ஆளுமையை பல தலைமுறைகளுக்கு எடுத்துரைத்துள்ளன என்றும் அவர் கூறினார்.

தமிழ்த் திரைப்பட வரலாற்றில் நடிகர்களின் பங்களிப்பைப் பற்றியும் அவர் விரிவாக விளக்கினார். ஆரம்பகால திரைப்படங்களில் எம்.கே. தியாகராஜ பாகவதர், இசை, தமிழ் உச்சரிப்பு மற்றும் கலைநயமிக்க நடிப்பின் மூலம் தமிழ்த் திரைப்படத்திற்கு தனித்துவமான அடையாளத்தை உருவாக்கினார். கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், நகைச்சுவையுடன் சமூகச் சீர்திருத்தக் கருத்துகளையும் பகுத்தறிவையும் இணைத்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். மக்கள் திலகம் எம்.ஜி. ராமச்சந்திரன், ஏழை எளிய மக்களின் வாழ்க்கை, சமூக நீதி மற்றும் மனிதநேயக் கருத்துகளை திரைப்படங்கள் வாயிலாக மக்களிடம் கொண்டு சென்றார். நடிகர் திலகம் சிவாஜி கணேசன், செறிவான தமிழ் உச்சரிப்பு, இலக்கிய வளமிக்க வசன வெளிப்பாடு மற்றும் வரலாற்று, சமூகக் கதாபாத்திரங்களின் ஆழமான நடிப்பின் மூலம் தமிழ் மொழியின் பெருமையை உயர்த்தியவர் என்றார்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

திருச்சிராப்பள்ளி அரசு கலைக் கல்லூரி  காட்சித் தொடர்பியல் துறை
திருச்சிராப்பள்ளி அரசு கலைக் கல்லூரி  காட்சித் தொடர்பியல் துறை

கடந்த 110 ஆண்டுகால தமிழ்த் திரைப்பட வரலாற்றில் சமூக, அரசியல் மற்றும் பண்பாட்டு மாற்றங்களை பிரதிபலிக்கும் பல்வேறு குறியீடுகள் திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். சிவப்பு நிறம் உழைப்பாளர்களின் எழுச்சி, சமூகப் போராட்டம் மற்றும் மாற்றத்தைக் குறிக்கும் அடையாளமாகவும், டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் உருவம் மற்றும் சிந்தனைகள் சமூக நீதி, சமத்துவம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளின் குறியீடாகவும் திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன என்று விளக்கினார்.

சமூகத்தில் நிலவிய கொத்தடிமை, சாதிய ஒடுக்குமுறை, ஏற்றத்தாழ்வு, பெண்கள் மீதான ஒடுக்குமுறை, தொழிலாளர் சுரண்டல் மற்றும் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக தமிழ்த் திரைப்பட வசனங்கள் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்ட அவர், சமூக விடுதலைச் சிந்தனைகளை வீடு தோறும் கொண்டு சென்றதில் தமிழ்த் திரைப்படங்கள் முக்கியப் பங்காற்றியுள்ளன என்றார்.

“சினிமா மட்டுமே சாதி, மதம், இன, பொருளாதார வேறுபாடுகளைக் கடந்து அனைத்து தரப்பு மக்களையும் ஒரே திரையரங்கில், ஒரே இருக்கையில் அமர்ந்து ஒரே கதையை ரசிக்கச் செய்த முதல் மக்கள் ஊடகம்” என்று குறிப்பிட்ட அவர், சமத்துவ உணர்வை வளர்ப்பதில் தமிழ்த் திரைப்படங்கள் முக்கியப் பங்காற்றியுள்ளன என்றார்.

திருச்சிராப்பள்ளி அரசு கலைக் கல்லூரி  காட்சித் தொடர்பியல் துறை
திருச்சிராப்பள்ளி அரசு கலைக் கல்லூரி  காட்சித் தொடர்பியல் துறை

மகாத்மா காந்தியின் வாழ்க்கை மற்றும் தமிழ்நாட்டுடனான தொடர்பு குறித்தும் அவர் பேசினார். காந்தியடிகள் திருச்சிராப்பள்ளிக்கு 13 முறை வருகை தந்த வரலாற்றுச் சம்பவங்களை நினைவுகூர்ந்த அவர், அவை தொடர்பான ஆவணங்கள், காட்சிப் பதிவுகள் மற்றும் வரலாற்றுச் சான்றுகள் திரைப்படங்கள் மற்றும் ஆவணப்படங்கள் வாயிலாக அடுத்த தலைமுறைக்காகப் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். வரலாற்று நிகழ்வுகள், சமூகப் போராட்டங்கள் மற்றும் மகத்தான தலைவர்களின் பங்களிப்புகள் முறையாக ஆவணப்படுத்தப்பட்டால்தான் அவை காலத்தைக் கடந்து மக்களிடம் சென்றடையும் என்றும் அவர் தெரிவித்தார்.

திரைப்படக் காட்சியிடல் முறைகள் குறித்தும் அவர் சுட்டிக்காட்டினார். ஒரு காலத்தில் கிராமப்புறங்களில் டூரிங் டாக்கீஸ் மூலம் திரைப்படங்கள் திரையிடப்பட்டபோது, மக்கள் தங்களது அன்றாட பணிகளை முடித்துவிட்டு திரைப்படங்களை ரசித்து, மறுநாள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவார்கள். திரைப்படம் மக்களின் வாழ்க்கையோடு இணைந்த பொழுதுபோக்கு மற்றும் விழிப்புணர்வு ஊடகமாக அப்போது செயல்பட்டது என்றார்.

ஆனால், தற்போதைய சில திரைப்படங்களும் அவற்றைச் சுற்றியுள்ள ரசிகர் கலாச்சாரமும் மனிதர்களின் நேர மேலாண்மை மற்றும் மனநிலையில் பாதிப்பை ஏற்படுத்தும் போக்கை உருவாக்கியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், திரைப்படம் மனிதனின் வாழ்க்கையை வளப்படுத்தும் கலையாக இருக்க வேண்டுமே தவிர, அன்றாடப் பொறுப்புகளையும் சிந்தனையையும் பாதிக்கும் நிலைக்குச் செல்லக் கூடாது என்றார். சமூகப் பொறுப்புணர்வை வளர்க்கும் படைப்புகளை உருவாக்குவதில் தமிழ் சினிமா தொடர்ந்து முன்னிலை வகிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

திரைப்படங்கள் சமூகத்தின் பிரதிபலிப்பாக மட்டுமல்லாமல், சமூக மாற்றத்தை முன்னெடுக்கும் ஆவணங்களாகவும் விளங்குகின்றன. ஒவ்வொரு காலகட்டத்திலும் மக்களின் வாழ்வியல், சமூகப் பிரச்சினைகள், போராட்டங்கள் மற்றும் மாற்றங்களின் தேவையை திரைப்படங்கள் பதிவு செய்து, அவற்றை மக்களிடையே விழிப்புணர்வாகவும், சமூக தாக்கமாகவும், சிந்தனை வீச்சாகவும் கொண்டு சென்றுள்ளன. எனவே, திரைப்படங்களை வெறும் கலை வடிவமாக மட்டும் பார்க்காமல், சமூக வரலாற்றையும் பண்பாட்டு நினைவுகளையும் பாதுகாக்கும் ஆவண ஊடகமாக மாணவர்கள் அணுக வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். நிகழ்ச்சியில் முன்னதாக, காட்சித் தொடர்பியல் துறை கௌரவ விரிவுரையாளர் முனைவர் செ. குறிஞ்சிவாணன் வரவேற்புரையாற்றினார்.

இந்நிகழ்வில் ஜமால் முகம்மது கல்லூரியின் பேராசிரியர்கள் சண்முக வேலாயுதம், பிரதீபன், இரா.பார்த்திபன், பெ.ரெமிஜியஸ் உள்ளிட்ட பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். மேலும், ஜமால் முகம்மது கல்லூரியைச் சேர்ந்த ஏராளமான மாணவர்களும் நிகழ்வில் பங்கேற்று சிறப்புரையைக் கவனமுடன் கேட்டு, கலந்துரையாடலில் ஆர்வமுடன் பங்கேற்று தங்களது கருத்துகளையும் கேள்விகளையும் பகிர்ந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவில் முனைவர்.அ ராவுத்தர் மீரா நன்றியுரையாற்றினார்.

அரசு கலைக் கல்லூரியின் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பேராசிரியர்கள், மாணவர்கள் என திரளானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். தமிழ்த் திரைப்பட வரலாறு, மொழியின் ஆளுமை, வசனங்களின் சமூகப் பங்கு, முன்னோடி நடிகர்களின் பங்களிப்பு, தகவல் தொடர்பியல், சமூக நீதி மற்றும் ஆவணப்படுத்தலின் அவசியம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து நடைபெற்ற இச்சிறப்புச் சொற்பொழிவு மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.