கெட்டதிலும் ஒரு நல்லது நடக்கும்னு சொல்லுவாங்க இல்லையா? அரசுப்பள்ளியில படிக்கிற மாணவர்களுக்கு நீட் அப்படிங்கிற பெருங்கொடுமை மூலமா நடந்த மிகப்பெரிய நல்லதுதான் 7.5% இடஒதுக்கீடு.
இட ஒதுக்கீட்டின் உண்மையான அடிப்படையே ஏற்றத்தாழ்வுகளை ஓரளவுக்கேனும் சமன்படுத்த முயற்சி மேற்கொள்றதுதான். இப்படியான சூழலில், படிச்ச, நகர்ப்புறத்துல வசிக்கிற, பொருளாதாரத்தில் ஓரளவேனும் முன்னேறிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு, மார்க்கை மட்டுமே குறிக்கோளா வச்சு இயங்குற தனியார் பள்ளிக்கூடங்களில் படிக்கிற வாய்ப்பும் அதன்மூலமா கூடுதலான மதிப்பெண் பெறக்கூடிய வாய்ப்பும் கிடைச்சிடுது. அந்த மாணவர்களோடு, ஏழை, பாமர, கிராமப்புற, மலைவாழ் குடும்பங்களைச் சார்ந்த குழந்தைகளும் சமமா போட்டி போடணும்ங்கிறது சமூக அநீதி. ஆனால், அதிகாரத் திமிரில் இருக்கும் ஆட்சியாளர்களுக்கும் மனசாட்சியே இல்லாத நீதிமான்களுக்கும் அதெல்லாம் தெரியவே தெரியாது.
நீட் வந்த பிறகு நடந்த, நடக்கிற கொடுமைகளையெல்லாம் நான் சொல்லித்தான் தெரிஞ்சுக்கணும்னு அவசியம் இல்லை. ஆனாலும், நீட்டை இனி உங்களால ஒன்னுமே பண்ண முடியாதுன்னு சுப்ரீட் கோர்ட்ல ஆர்டர் வாங்கிக் கொடுத்துட்டு வந்து நளினி சிதம்பரமும் ராமனும் மீடியாவுல பேட்டி கொடுத்த பிறகு, இடைக்காலத் தீர்வா எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு கொண்டு வந்ததுதான் 7.5% இடஒதுக்கீடு. தமிழ்நாட்டின் சமூகநீதி வரலாற்றில் நிச்சயமா இது ஒரு மைல் கல்.
இன்னைக்கு லட்டுவோட பள்ளியில நடந்த ஆண்டுவிழாவில் அந்தப் பள்ளியில் 2023-24ஆம் ஆண்டுகளில் பயின்ற மாணவி, இரண்டு ஆண்டுகளா தொடர்ந்து படிச்சு 7.5% இடஒதுக்கீட்டின்கீழ் மருத்துவக் கல்விக்கான இடம் கிடைச்சிருக்கு. முந்தைய ஆண்டுகளில் பல் மருத்துவம், பாரம்பரிய மருத்துவப் பிரிவுகளில் இடம் கிடைத்தும் MBBS சேரணும்னு தொடர்ந்து முயற்சி பண்ணி இந்த ஆண்டில் இடம் கிடைச்சிருக்கு.
அவருக்கு, பள்ளியின் சார்பில் பொன்னாடை போர்த்தி வாழ்த்தினார் தலைமையாசிரியர். உயிரியல் பாடப்பிரிவு ஆசிரியர் நினைவுப் பரிசு வழங்கினார்.
ஒருவேளை எதிர்வரும் காலத்தில் நீட் ஒழிக்கப்பட்டாலும் இந்த இடஒதுக்கீடு கட்டாயம் தொடரணும். கூடவே, ஒவ்வோர் ஆண்டும் +2 தேர்வு எழுதும் தனியார் மற்றும் அரசுப்பள்ளி மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப இடஒதுக்கீடு அதிகரிக்கப்படணும். பள்ளி மேலாண்மைக் குழுவின் தலைவர்ங்கிற முறையில் மாணவியை அழைத்து நானும் என்னோட வாழ்த்துகளைச் சொன்னேன்.
— நல்லு ஆர்.லிங்கம்






Comments are closed, but trackbacks and pingbacks are open.