இரண்டு பேராசிரியர்களின்  ஈகோ – வீதியில் மாணவர்கள் ! வேடிக்கை பார்க்கும் அரசு நிர்வாகம் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

இரண்டு பேராசிரியர்களின்  ஈகோ – வீதியில் மாணவர்கள்  வேடிக்கை பார்க்கும் – அரசு நிர்வாகம் !

”மூன்று வருடமாக எங்களுக்கு பாடம் நடத்த வகுப்பறைக்கே வரவில்லை” என்பதாக பெண் பேராசிரியருக்கு எதிராக ஒரு தரப்பு மாணவர்களும்; ”பேராசிரியர்களுக்கிடையிலான ஈகோ பிரச்சினையில் மாணவர்களை தூண்டிவிடுகிறார்” என்று மற்றொரு தரப்பு மாணவர்களுமாக அடுத்தடுத்து  போராட்டங்களை நடத்தியிருக்கும் விவகாரம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அங்குசம் இதழுக்கு தொடர்ந்து தோள் கொடுங்கள் !

திருச்சி துவாக்குடி அரசு கலைக்கல்லூரி
திருச்சி துவாக்குடி அரசு கலைக்கல்லூரி

திருச்சி, துவாக்குடி அரசு கலைக்கல்லூரியில்தான் இந்தக் கூத்து. என்னதான் பிரச்சினை என்ற கேள்வியோடு அங்குசம் சார்பில், விசாரணையில் இறங்கினோம். இரண்டு ஷிப்டு முறையில், சுமார் 3000 மாணவர்கள் பயின்றுவரும் அரசு கலைக்கல்லூரி அது. 15-க்கும் அதிகமான துறைகளோடு, 85 நிரந்தரப் பேராசிரியர்களையும் 50 கௌரவ விரிவுரையாளர்களையும் கொண்டு இயங்கி வருகிறது கல்லூரி.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

என்னதான் பிரச்சினை?

பொதுவில் மாணவர்கள் போராட்டம் என்பதைவிட, புவியியல் துறை மாணவர்களின் போராட்டம் என்று குறிப்பிட்டுச் சொல்வதே சரியானதாக இருக்கும். இந்த கல்லூரியில் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக, புவியியல் துறை உதவிப் பேராசிரியராக பணியாற்றிவருபவர் வி.எம்.பாத்திமா மரியம் தாஹிரா. பொறுப்பு துறைத்தலைவராகவும் இருந்து வந்தவர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக, பேராசிரியர் சரவணக்குமார் பணியில் சேர்ந்தபிறகு, பணிமூப்பு அடிப்படையில் முறையான துறைத்தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இந்நிலையில், புவியியல் துறை பேராசிரியரான வி.எம்.பாத்திமா மரியம் தாஹிரா அவர் பணிக்கு சேர்ந்ததிலிருந்தே ஒழுங்காக பாடம் நடத்துவதில்லை என்ற குற்றச்சாட்டுகளை ஒரு தரப்பு மாணவர்கள் முன்வைக்கிறார்கள். மாவட்ட ஆட்சியரிடம் இரண்டாவது முறையாக புகார் அளிக்க வந்திருந்தவர்களுடன் பேசினோம்.

பேரா. வி.எம்.பாத்திமா மரியம் தாஹிரா மூன்றாண்டுகளாக பாடமே நடத்தியதில்லை …

”ஏற்கெனவே, கோவையிலும் இதேபோலதான் ஒழுங்காக பாடம் நடத்தவில்லை என்று பிரச்சினையாகி இங்கே வந்திருக்கிறார். மூன்று வருடத்தில் ஓரிரு நாள்தான் வகுப்புக்கு வந்திருப்பார். அதுவும் எங்களை திட்டுவதற்காகத்தான். பொதுவாகவே, மாணவர்களை மட்டம் தட்டிதான் பேசுவார்.  எனக்கு உடல்நிலை சரியில்லை என்பார். பேராசிரியர் ஓய்வறையிலேயே இருப்பார். நாங்களும் கல்லூரி முதல்வரிடம் தொடர்ந்து  பல முறை புகார் சொல்லிவிட்டோம். பலமுறை வாய்மொழியாக சொல்லியிருக்கிறோம். எந்த நடவடிக்கையும் இல்லை.” என்பதாக புகார் தெரிவிக்கிறார்கள், போராடும் மாணவர்கள் தரப்பில்.

புகார் சொன்னா மிரட்டுறாங்க

”எங்களுக்கு ஒருநாள் வகுப்புக்கு வந்தாங்க. இங்கிலீஸ்லயே கிளாஸ் எடுத்தாங்க. எல்லாமே தமிழ் மீடியம்லதான் படிச்சிட்டு வந்திருக்கோம். தமிழ்லயே பாடம் நடத்துங்கனு கேட்டோம். இது இங்கிலீஸ் மீடியம் இங்கிலீஸில்தான் நடத்துவேன். இதுகூட தெரியாம எதுக்கு படிக்க வர்றீங்க?” என்று ஒரு மாதிரி பேசினார் என்கிறார் முதலாமாண்டு மாணவர் ஒருவர்.

“பாடம் நடத்துவதை தவிர, மற்ற எல்லா வேலைகளையும் செய்வார். மாணவர்களை கடைக்கு அனுப்புவார். யார் யாரோடு பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று நோட்டமிடுவார். கூப்பிட்டு கண்டிப்பார். அவர்களின் பெற்றோர்களிடம் உன் பிள்ளை சரியில்லை என்று போட்டுக் கொடுப்பார். நாங்கள் நண்பர்களாக பழகுவதைக்கூட தவறான கோணத்தில் பேசுவார். இதனாலேயே பலர் கல்லூரிக்கு வராமல் நின்றுவிட்டனர்.” என்கிறார், அருகிலிருந்த மற்றொரு மாணவி.

போராடும் மாணவர்களை மிரட்டுகிறார் …

”இதுநாள் வரையில்கூட, அனுசரித்து சென்றுவிட்டோம். தற்போது இறுதியாண்டில் இருக்கிறோம். செய்முறைத் தேர்வுகளை எதிர்கொண்டாக வேண்டும் என்பதிலிருந்தே தற்போது போராட்டத்தை முன்னெடுக்கிறோம். முதல்வரிடம் புகார் சொன்னோம் என்பதற்காக, வாட்சப்பில் மெட்டீரியலை அனுப்பி வைத்து, எழுத்து வேலையை அதிகமாக கொடுத்தார். ரெக்கார்டு நோட்டுகளில் கையெழுத்து மாறியிருக்கிறது என்று சொல்லி கையெழுத்து போட மறுத்தார். என்னை பகைத்துக் கொண்டால், இன்டர்னல் மார்க்கில் கை வைத்து விடுவேன். அரசு வேலைக்கு போக முடியாது. என்று மிரட்டுகிறார்.” என்பதாக மாணவர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.

திருச்சி கலெக்டா் அலுவலகம் முன்பு துவாக்குடி அரசு கலைக்கல்லூரி மாணவா்கள்
திருச்சி கலெக்டா் அலுவலகம் முன்பு துவாக்குடி அரசு கலைக்கல்லூரி மாணவா்கள்

இந்த விவகாரத்தில், 2024, டிசம்பர் -30 அன்று முதல்வரிடம் புகார் தெரிவித்திருக்கிறார்கள். ஜன-02 அன்று உள்ளிருப்புப் போராட்டத்தை நடத்தியிருக்கிறார்கள். ஜன-06 அன்று கல்லூரி சார்பில் பேராசிரியர் குழுவினர் விசாரணை நடத்தியிருக்கிறார்கள். முதல் முறையாக, ஜன-20 அன்று மாவட்ட ஆட்சியரிடத்தில் புகார் அளித்திருக்கிறார்கள். ஜன-22 இல் மண்டல இணை இயக்குநர் (கல்லூரி ) நேரில் விசாரணை நடத்தியிருக்கிறார். தொடர்ந்து ஜன-27 அன்று இரண்டாவது முறையாக மாவட்ட ஆட்சியரிடத்தில் புகார் அளித்திருக்கிறார்கள். ஆட்சியரிடம் மனு அளித்த மறுநாளே, மண்டல இணை இயக்குநரை நேரில் சந்தித்தும் முறையிட்டிருக்கிறார்கள். அவரும் உள்விசாரணை நிறைவுற்ற பிறகே எந்த முடிவும் அறிவிக்க இயலும் என்பதாக அறிவித்திருக்கிறார்.

பேரா.சரவணக்குமார் வந்தபிறகுதான் பிரச்சினையே …

மற்றொரு தரப்பில், “சம்பந்தபட்ட பேராசிரியர் ஒழுங்காக பாடம் நடத்தவில்லை. வகுப்புக்கு செல்லவில்லை என்பது உண்மை என்றாலும்கூட, கடந்த மூன்று ஆண்டுகளாக அமைதியாக இருந்துவிட்டு, இப்போது இவ்வளவு தீவிரமாக போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய அவசியம் என்ன? பின்னணியில் யார் இருக்கிறார்கள்?” என்ற கேள்வியை முன்வைக்கிறார்கள்.

அதிலும் குறிப்பாக, துறைத்தலைவர், கல்லூரி முதல்வரின் கவனத்திற்கே செல்லாமல் ஒரு பேராசிரியர் மூன்று ஆண்டுகளாக பாடமே நடத்தாமல் மாதந்தோறும் சம்பளம் வாங்கிவிட முடியுமா? அதுவும் தொட்டதற்கெல்லாம் போராட்டத்தை முன்னெடுக்கும் எஸ்.எஃப்.ஐ. மாணவர் அமைப்பு செயல்படும் கல்லூரியில் இது சாத்தியமா? இன்னும் சொல்லப்போனால், பேராசிரியர்களின் சங்கமான தமிழ்நாடு அரசுக்கல்லூரி ஆசிரியர் கழகமும் இந்தக் கல்லூரியில் செயல்பட்டு வரும் நிலையில் அவர்களின் கவனத்திற்கும்கூட எட்டாமல் இருந்தது எப்படி?” என்ற கேள்வியும் எழுகிறது.

பேரா.சரவணக்குமார்
பேரா.சரவணக்குமார்

இந்த கேள்வியோடு, இந்திய மாணவர் சங்கத்தின் மாநில இணைச் செயலர் ஜி.கே.மோகனிடம் பேசினோம். “ முதலில் நாங்கள் இந்தப் போராட்டத்தை தொடங்கவே இல்லை. பேராசிரியர் வி.எம்.பாத்திமா மரியம் தாஹிராவுக்கு எதிராக மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்த அணிதிரண்ட நிலையில், அவர்களின் கோரிக்கையில் நியாயம் இருப்பதை உணர்ந்து அந்தப் போராட்டத்தை வழிநடத்தினோம். பின்னர், இந்தப் போராட்டத்தை வீரியமாகவும் அடுத்தக்கட்டத்துக்கும் நகர்த்தி செல்வதற்கு பேராசிரியர் சரவணக்குமாரே நேரடியாக எங்களது நிர்வாகிகளை தொடர்புகொண்டு அழுத்தம் கொடுத்தபோதுதான், இதில் பின்னுள்ள அரசியலே எமக்கு புரிய வந்தது. முதல்வர் தரப்பில் பேசியபிறகு, அவர்களும் குறிப்பிட்ட கால அவகாசம் கேட்டிருக்கிறார்கள் என்று எடுத்து சொல்லியும், அதனை ஏற்க மறுத்து அடுத்தக்கட்ட போராட்டத்தை நடத்துவதில் அவர் முனைப்பு காட்டினார்.

இவர் கல்லூரி காலத்தில் எஸ்.எஃப்.ஐ. அமைப்பில் மாவட்ட பொறுப்பில் செயல்பட்டவர். எல்லா விசயங்களையும் சாதிய கண்ணோட்டத்தில் இவர் அணுகியதால், அமைப்பிலிருந்து நீக்கப்பட்டவர். தற்போது துறைத்தலைவராக இருக்கும் பேராசிரியர் சரவணக்குமாரின் தூண்டுதலின் பேரில்தான் மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுக்கிறார்கள். அதற்கு போதுமான ஆதாரங்கள் எங்கள் வசம் இருக்கிறது.  தனது சொந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக, மாணவர்களை பயன்படுத்திக் கொள்கிறார். போகும் இடமெல்லாம், பட்டியலின மாணவர்களை குறிவைத்து அவர்களை தன் கைக்குள் போட்டுக்கொண்டு, அவர்களை தூண்டி அரசியல் செய்கிறார், பேராசிரியர் சரவணக்குமார்.

இதே பாணியில் இவர் நடந்து கொண்டதற்காகத்தான், திருச்சி ஈ.வெ.ரா. கல்லூரி தொடங்கி, கோவை, கும்பகோணம், கூடலூர் ஆகிய இடங்களுக்கு அடுத்தடுத்து பணியிட மாறுதல் பெற்று இறுதியாக துவாக்குடி கல்லூரிக்கு வந்து சேர்ந்திருக்கிறார். இவர் பணியாற்றிய இடங்களிலெல்லாம் மாணவர்களை தூண்டிவிட்டு போராட்டம் நடத்தினார் என்பதுதான் முதன்மையான குற்றச்சாட்டாக இருந்திருக்கிறது. இடதுசாரி ஆதரவாளர் என்பதாக அடையாளப்படுத்திக் கொண்டும்; மாணவர்கள் நலனில் அக்கறை உள்ளவர்போல காட்டிக்கொண்டும் இந்த வேலையை செய்து வருகிறார்.

குறிப்பாக, பேராசிரியர் சரவணக்குமாருக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டை வி.எம்.பாத்திமா மரியம் தாஹிரா முன் வைத்திருக்கும் நிலையில், அந்தக் குற்றச்சாட்டிலிருந்து தப்பிக்கவும், திசை திருப்பவுமே பேராசிரியர் சரவணக்குமார் தூண்டுதலின் பேரில் இந்த போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்திய மாணவர் சங்கத்தை வைத்து உனது வேலையை காலி செய்துவிடுவேன் என்றெல்லாம் நேரடியாகவே மிரட்டியிருக்கிறார். மாணவர்களை தவறாக வழிநடத்தி வரும் பேராசிரியர் சரவணக்குமாரை கைது செய்ய வேண்டும்.

பேராசிரியர் சரவணக்குமார் கும்பகோணத்தில் பணியாற்றியபோது நடைபெற்ற மாணவர்கள் போராட்டம்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

பேராசிரியர் சரவணக்குமார் கும்பகோணத்தில் பணியாற்றியபோது நடைபெற்ற மாணவர்கள் போராட்டம்.

மாதந்தோறும் சம்பளம் வாங்கிக்கொண்டு பாடம் நடத்தாத பேராசிரியர் வி.எம்.பாத்திமா மரியம் தாஹிரா ஒழுங்காக பாடம் நடத்த வேண்டும். தற்போது கல்லூரியின் அமைதி குலைவதற்கும் கல்விச்சூழல் பாதிப்பதற்கும் காரணமான இரண்டு பேராசிரியர்களையும் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். என்ற கோரிக்கையை முன்வைத்திருக்கிறோம்.” என்கிறார்.  இதே கோரிக்கைகளை வலியுறுத்தி ஜன-28 அன்று இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் கல்லூரிக்கு எதிரில் ஆர்ப்பாட்டத்தையும் பேரணியையும் நடத்தியிருக்கிறார்கள்.

என்னை குறி வைத்து பழிவாங்குகிறார்கள் …

சர்ச்சையில் சிக்கியிருக்கும் பேராசிரியர் வி.எம்.பாத்திமா மரியம் தாஹிராவிடம் பேசினோம். “எம்.எஸ்.சி. முடித்துவிட்டு 25 வயதில் பேராசிரியராக பணிநியமனம் பெற்று கடந்த 2015 இல் துவாக்குடி கல்லூரியில் பணிக்கு சேர்ந்தேன். பணிக்கு சேர்ந்த ஆறே மாதத்தில், திடீரென்று தந்தை உடல்நிலை நலிவுற்றநிலையில் கோவைக்கு இடமாறுதல் பெற்று சென்றேன். நான் உயர் கல்வி பயின்றது கோவை அரசு கல்லூரியில். இளம் வயதில் நான் பணிக்கு வந்ததை ஏற்றுக்கொள்ள முடியாமல் என் மீது அபாண்டமான குற்றச்சாட்டை சுமத்தி, எஸ்.எஃப்.ஐ. மாணவர்களை வைத்து போராட்டம் நடத்தி மீண்டும் துவாக்குடி கல்லூரிக்கு இடமாற்றம் செய்துவிட்டார்கள். தற்போது மீண்டும் அதேபோல் இங்கும் செய்கிறார்கள். நான் முறையாக வகுப்புக்கு சென்று கொண்டுதான் இருக்கிறேன்.” என்கிறார், அவர்.

“மாணவர்கள் அவர்களாகவே போராடுகிறார்கள். நான் ஏன் மாணவர்களின் போராட்டத்தை தூண்டிவிட வேண்டும். அவர்கள் சிறுபிள்ளைகள் இல்லையே. மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தியது டிச-12 ஆம் தேதி. என் மீது பாலியல் குற்றச்சாட்டை அவர் முன்வைத்தது, ஜனவரி-20 தேதி. அது பொய்யான குற்றச்சாட்டு. அடுத்து நான் போகும் இடத்தில் பிரச்சினை செய்கிறேன் என்கிறார்கள். கும்பகோணம் கல்லூரியில் வகுப்பில் சாதிய கண்ணோட்டத்தில் வகுப்பு எடுத்த பேராசிரியருக்கு எதிராக மாணவர்கள் போராடினார்கள். அதில் என்னை சம்பந்தமில்லாமல் என்னையும் இடமாறுதல் செய்தார்கள்.

பேராசிரியர் வி.எம்.பாத்திமா மரியம் தாஹிரா.
பேராசிரியர் வி.எம்.பாத்திமா மரியம் தாஹிரா.

சாதிய கண்ணோட்டத்தில் பேசிய பேராசிரியருக்கு பக்கத்து மாவட்டத்திலும், எனக்கு தொலை தூரத்திலும் இடமாறுதல் போட்டார்கள். அதனை எதிர்த்து வழக்கு தொடுத்துதான் இந்த கல்லூரிக்கு வந்தேன். நான் என் கடமையில் எப்போதும் சரியாக இருப்பவன். முறையாக வகுப்புகளுக்கு செல்பவன். நான் எப்போதும் மாணவர்கள் நலனில் அக்கறை செலுத்துவேன். இங்கே, ஆசிரியர் கழகம், ஆசிரியர் மன்றம் என்பதாக சங்க வேறுபாடும் இருக்கிறது. முதலில் பேராசிரியர் வி.எம்.பாத்திமா மரியம் தாஹிராவுக்கு எதிராக போராடிய எஸ்.எஃப்.ஐ. இப்போது அவரிடமே பணத்தை வாங்கிக்கொண்டு அவருக்கு ஆதரவாகவும் எனக்கு எதிராகவும் போராட்டம் நடத்துகிறார்கள்.” என்பதாக தன் மீதான குற்றச்சாட்டுக்களை மறுக்கிறார், பேராசிரியர் சரவணக்குமார்.

மாணவர்கள் தரப்பிலும், பேராசிரியர்கள் தரப்பிலும் நாம் நடத்திய விசாரணையில், பேராசிரியர் வி.எம்.பாத்திமா மரியம் தாஹிரா முறையாக வகுப்புக்கு செல்வதில்லை. மாணவர்களிடம் மரியாதையாக நடந்து கொள்வதில்லை என்பதை முதன்மை குற்றச்சாட்டாக முன்வைக்கிறார்கள். கோவையிலும் இதே குற்றச்சாட்டின் பேரில்தான் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

பேரா. வி.எம்.பாத்திமா மரியம் தாஹிரா பாடம் நடத்தினாரா, இல்லையா?

இளம் வயதில் பேராசிரியர் பணி பெற்றவர் என்பதையும்; நோய்வாய்பட்ட தந்தையின் நிலையையும்; தனது தனிப்பட்ட உடல்நிலை பாதிப்புகளையுமே குறிப்பிட்டு இரக்கத்தை எதிர்நோக்குபவராக இருக்கிறார் என்பதை பொதுவில் சொல்கிறார்கள். கோவையிலும் துறைத்தலைவர் பன்னீர் செல்வத்திற்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார். இங்கும், சரவணக்குமாருக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார். இரண்டும் ஒரே பேட்டர்னில் அமைந்திருப்பது தற்செயலானதாக படவில்லை.

கோவை மாணவா்கள் பாத்திமாவிற்கு எதிராக போராட்டம்
கோவை மாணவா்கள் பாத்திமாவிற்கு எதிராக போராட்டம்

அடுத்து, துவாக்குடி அரசு கல்லூரியில் மூன்று ஆண்டு மாணவர்களையும் சேர்த்து மொத்தத்தில், 90-க்கும் அதிகமான மாணவர்கள் இருக்கிறார்கள். அவர்களுள் ஒருவர்கூட, பேராசிரியர் வி.எம்.பாத்திமா மரியம் தாஹிரா முறையாக வகுப்புக்கு வந்து பாடம் நடத்தியிருக்கிறார் என்பதாக சொல்லவில்லை என்பதும் கவனிக்கத்தக்கதாக இருக்கிறது. அவரிடமே இதனை சுட்டிக்காட்டி, ”உங்கள் தரப்பில் ஏதேனும் ஒரு மாணவரையாவது நீங்கள் முறையாக பாடம் நடத்தியிருக்கிறீர்கள் என்பதை உறுதிபடுத்தும் விதமாக பேச வையுங்கள்” என்ற கோரிக்கை விடுத்தும் இதுவரையில் எவரும் அவ்வாறு உறுதிபடுத்த முன்வரவில்லை. இது ஒரு விசயம்.

அடுத்து, பேராசிரியர் வி.எம்.பாத்திமா மரியம் தாஹிரா முறையாக வகுப்புகளை நடத்தவில்லை என்பது உண்மையாக இருக்கும்பட்சத்தில், ஏன் இத்தனை ஆண்டுகளாக மாணவர்கள் அதனை குற்றச்சாட்டாக முன்வைக்கவில்லை. போராட்டத்தை முன்னெடுக்கவில்லை என்ற கேள்வியும்; துறைத்தலைவராக, பேராசிரியர் சரவணக்குமார் பணிக்கு சேர்ந்த பிறகுதான் இந்தக் குற்றச்சாட்டும் போராட்டமும் முன்னிலைக்கு வந்திருக்கிறது என்பதும் நம் பரிசீலனைக்குரிய ஒன்றாக அமைந்துவிடுகிறது.

இரு பேராசிரியர்களுக்கிடையிலான ஈகோ பிரச்சினைதான் காரணம் …

” இரண்டு பேராசிரியர்களுக்கிடையிலான ஈகோ பிரச்சினைதான் இது. பேராசிரியர் வி.எம்.பாத்திமா மரியம் தாஹிராவும் சரி, பேராசிரியர் சரவணக்குமாரும் சரி, இருவருமே தண்டனைக்கான பணியிட மாறுதலில்தான் இங்கே வந்திருக்கிறார்கள். ஒருவேளை, பேராசிரியர் வி.எம்.பாத்திமா மரியம் தாஹிராவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் உண்மைதான் என்று எடுத்துக் கொண்டாலும்கூட, துறைத்தலைவராக பேராசிரியர் சரவணக்குமார் தனிப்பட்ட தனது அதிகாரத்தை பயன்படுத்தி அவருக்கு எதிரான குற்றச்சாட்டை முன்வைத்து விளக்கம் கோரியிருக்கலாம். கல்லூரி முதல்வரிடம் முறையிட்டிருக்கலாம். கல்லூரி முதல்வரும் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், மண்டல இணை இயக்குநரிடம் முறையிட்டிருக்கலாம்.

இவை எதையும் செய்யாத நிலையில், மாணவர்களை தூண்டிவிட்டு போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் என்ன? அதிலும் குறிப்பாக, பிரச்சினையை எப்படி சரிசெய்வது என்பதை நோக்கமாக அல்லாமல், இந்த விவகாரத்தை எப்படி செய்தியாக்குவது? பொதுவெளியில் எப்படி பேசுபொருளாக்குவது என்பதில்தான் முழு கவனம் செலுத்தியிருக்கிறார். அதற்கு மாணவர்களை பகடைக்காய்களாக மாற்றியிருக்கிறார். ” என்ற குற்றச்சாட்டை சக பேராசிரியர்கள் தரப்பிலிருந்தே முன்வைக்கிறார்கள்.

 

மேலும், “இப்படி சொல்வதால் பேராசிரியர் வி.எம்.பாத்திமா மரியம் தாஹிராவை ஆதரிக்கிறோம் என்பதாகவும் எடுத்துக் கொள்ள முடியாது. கடுமையான பணிச்சூழல்களுக்கு மத்தியிலும் எப்படியாவது எங்களது வகுப்புகளை நாங்கள் எடுத்துக் கொண்டுதான் இருக்கிறோம். குறைந்த சம்பளத்தில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்களும் இருக்கிறார்கள். நல்ல சம்பளத்தில் பணியாற்றும் பேராசிரியர்களும் இருக்கிறார்கள். வாங்கும் சம்பளத்தைவிட, அதிக உழைப்பை செலுத்தி அர்ப்பணிப்புணர்வுடன் பணியாற்றும் பேராசிரியர்களும் இருக்கிறார்கள். வாங்கும் சம்பளத்திற்கு முறையாக பணியாற்ற வேண்டும் என்ற கடமை உணர்விலிருந்து அணுகியிருந்தாலே, இதுபோன்ற பிரச்சினைகளுக்கே இடம் வந்திருக்காது.” என்கிறார், பெயர் வெளியிட விரும்பாத பேராசிரியர் ஒருவர்.

 

கல்லூரியின் பொறுப்பு முதல்வர் ஆனந்தவள்ளியிடம் பேசினோம். “கடுமையான மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சையில் இருந்து வருகிறேன். துறை ரீதியான விசாரணையிலும் இருந்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக கருத்து எதுவும் சொல்ல இயலாது.” என்பதாக பேச மறுத்துவிட்டார்.

கல்லூரி கல்வி மண்டல  இணை இயக்குநரிடம் பேசினோம். “மாணவர்களின் புகாரையடுத்து நானும் நேரில் சென்று விசாரித்திருக்கிறேன். துறை ரீதியான விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சென்னையிலுள்ள இயக்குநரின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கிறோம். அவர்கள்தான் இந்த விவகாரத்தில் முடிவெடுக்க வேண்டும்.” என்பதாக தெரிவிக்கிறார்.

பேராசிரியர் வி.எம்.பாத்திமா மரியம் தாஹிரா முறையாக வகுப்புக்கு செல்வதில்லை. மாணவர்களிடம் இணக்கமாக நடந்து கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டும்; பேராசிரியர் சரவணக்குமார் இதுவரை தான் பணியாற்றிய கல்லூரிகளில் எல்லாவற்றிலும் மாணவர்களை தூண்டிவிட்டு போராட்டம் நடத்த வைக்கிறார் என்றக் குற்றச்சாட்டும்; இந்தக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில்தான் இருவருமே தண்டனை அடிப்படையிலான பணியிடமாறுதல் பெற்று இந்த கல்லூரிக்கு வந்து சேர்ந்திருக்கிறார்கள் என்பதும்; வந்த இடத்திலும் அதே வகையிலான குற்றச்சாட்டுக்கு மீண்டும் ஆளாகியிருக்கிறார்கள் என்பதும் நமது கள விசாரணையில் தெரிய வருகின்றன. இரு பேராசிரியர்களுக்கு இடையிலான ஈகோ பிரச்சினைதான், மாணவர்களின் போராட்டமாக வெளிப்பட்டிருக்கிறதோ, என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றன.

போராசியர்களுக்கு எதிராக திரண்ட மாணவா்கள்

சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் துவாக்குடி அரசுக்கலைக்கல்லூரி, கருவேலம் காட்டுப்பகுதியில் அமைந்திருக்கும் கல்லூரி. இங்கே கல்வி பயிலும் மாணவர்களுக்கு போதுமான கழிவறை வசதியோ, குறைந்தபட்சம் குடிநீர் வசதியோ கூட இல்லாத, அவலம் நிறைந்த கல்லூரிகளில் ஒன்று என்றே சொல்லும் நிலையில் உள்ள கல்லூரி.

திருச்சி மாவட்டத்தில், வேறு எந்தக் கல்லூரியிலும் சேருவதற்கு இடம் கிடைக்காத நிலையில் அவர்களின் கல்லூரி கல்விக்கான ஒரே வாய்ப்பாக இருந்து வருவது துவாக்குடி அரசு கலைக்கல்லூரிதான். இந்த கல்லூரியிலும் இடம் கிடைக்கவில்லை என்றால், அந்த மாணவன் வேறு எந்த ஒரு கல்லூரியிலும் சேர்ந்துவிட முடியாது என்பதுதான் நடைமுறை உண்மையாகவும் இருந்து வருகிறது. இதுபோன்ற பின்னணியிலிருந்து கல்லூரிக்கு வரும் மாணவர்களை நல் வழிநடத்த வேண்டிய பேராசிரியர்களே வகுப்புக்கு செல்லாமலும்; முறையாக பாடம் நடத்தாமலும்; ஆங்கிலத்தில்தான் பாடம் நடத்துவேன் என்று அடம்பிடிப்பதும்; இதுகூடவா தெரியாமல் வந்துவிட்டாய் என்று ஏளனமாக பேசுவதையும் எப்படி புரிந்து கொள்வது? அதேபோல், குறிப்பிட்ட பேராசிரியருக்கு எதிரான குற்றச்சாட்டை உரிய வழிமுறைகளில் அணுகாமல் மாணவர்களை தூண்டிவிட்டு அரசியல் செய்வதையும் எப்படி எடுத்துக் கொள்வது? மாணவர்களின் அடிப்படை வசதிகளுக்கான போராட்டமாகவோ, கல்வி கற்கும் உரிமைகளுக்கான போராட்டமாகவோ அல்லாமல், பேராசிரியர்கள் இருதரப்புக்குமிடையில் சிக்கிக்கொண்டு  மாணவர்கள் தவிக்கிறார்கள் என்பது அவலமான ஒன்று.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

உயர்கல்வித்துறை சார்பில், வெளிப்படையான விசாரணையை நடத்தி உரிய முறையில் இந்த விவகாரத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதே எல்லோரது கோரிக்கையுமாக இருக்கிறது. மிக முக்கியமாக, போராடிய மாணவர்களை பழிவாங்கும் வகையில் அவர்களை மிரட்டும் வகையில் அல்லாமல், பேராசிரியர் – மாணவர்களிடையே சுமுகமான உறவை உறுதிபடுத்தும் வகையிலான பொருத்தமான தீர்வை – கவுன்சலிங்கை மாணவர்களுக்கு உயர்கல்வித்துறை அதிகாரிகள் ஏற்படுத்தித் தரவேண்டும் என்பதே பொதுக்கோரிக்கையாகவும் எழுந்திருக்கிறது.

 

                                                                                      – அங்குசம் புலனாய்வுக்குழு..

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.