இயற்பியல் சிகிச்சையின் போது நோயாளி மற்றும் உறவினர்கள் கவனிக்க வேண்டியவைகள் பற்றி இந்த வாரம் பார்ப்போம்.
1. தளர்வான ஆடைகளை அணியவேண்டும்.
2. காலை மற்றும் மாலை பயிற்சிகளை செய்ய வேண்டும்.
3. உணவு மற்றும் மருந்து சாப்பிட்ட 20 நிமிடங்களுக்கு பின்பு தான் பயிற்சியை செய்ய ஆரம்பிக்க வேண்டும்.
4. பாதிக்கப்பட்ட கை மற்றும் கால்களில் வலி இருக்கும் பகுதிகளில் மெழுகு மற்றும் சுடுநீர் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.
5. முதலில் மூச்சு பயிற்சி செய்ய வேண்டும் (20-30 முறை).
6. கை மற்றும் கால்களை முழுவதுமாக நீட்டி மடக்கி 20-30 முறை பயிற்சி செய்ய வேண்டும்
7. இடையிடையே மூச்சு பயிற்சி செய்ய வேண்டும்
8. திரும்பி படுக்காமல் எழுந்து உட்காரவும் ஆரம்பத்தில் உதவியுடன் பின் தனியாகவும் பழக வேண்டும் (10 முறை)
9. உட்கார்ந்து எழுந்து நிற்க பழக வேண்டும் (10 முறை)
10. இரு கால்களிலும் சமமாக உடல் எடையை பகிர்ந்து நிற்க பழக வேண்டும் (10 முறை உட்கார்ந்து எழுந்து)
11. கையை பின்புறமாக கட்டிக் கொண்டு நிற்க பழக வேண்டும்
12. முதலில் நிழலில் (Closed Corridor) நடைபயிற்சி பழக வேண்டும்
13. பின் சமமற்ற தரையில் (Un-even surface) நடைபயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.
14. ஓரளவு தன்னிச்சையான நடைக்குப் பிறகு படிக்கட்டுகளில் ஏறி இறங்கி பழக வேண்டும்
15. நடைப்பயிற்சி, இலகுவான விளையாட்டு மற்றும் தோட்டக்கலை போன்றவற்றில் அவசியம் ஈடுபட வேண்டும்
16. பகலில் அரை மணி நேரத்திற்கு மேல் தூங்கக் கூடாது. பகலில் அதிக நேரம் உறங்குவதால் இரவு உறக்கம் போதுமான அளவு இருக்காது. இரவு உறக்கம் நன்றாக இருந்தால் மட்டுமே மூளை நன்கு செயல்பட முயற்சிக்கும்.
17. முடிந்த அளவு அதிக பளு இல்லாத வீட்டு வேலைகள் மற்றும் அலுவலக வேலைகள் கண்டிப்பாக செய்ய வேண்டும்
இயற்பியல் சிகிச்சை செய்யும் போது நோயாளியின் முழுகவனமும் தன் உடல் மீது இருக்க வேண்டும். எனது கை, கால்கள் நன்முறையில் முன்னேற்றம் பெறுகிறது. நான் வெகு விரைவில் எனது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விடுவேன் என்ற தைரியத்தை மனதிற்கு அளித்து பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இயற்பியல் சிகிச்சையின் போது சதை வலிகள் வரலாம், அதை வெந்நீர் கொண்டு ஒத்தடம் கொடுத்து வலியை குறைத்துக் கொண்டு பயிற்சியை தொடர்ந்து செய்ய வேண்டும்.
நோயாளியின் பாதிப்பின் தன்மைக்கு ஏற்றவாறு கீழ்வரும் சிகிச்சை முறைகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.
1. பாதிக்கப்பட்ட கை மற்றும் கால்களின் மற்ற தசைகளுக்கு வலு சேர்க்கும் பயிற்சிகள் செய்யலாம்
2. முகம் மற்றும் மிகவும் செயல் இழந்த தசைகளுக்கு தளர்வாக்கும் பயிற்சி கொடுக்கலாம்.
3. கைகளுக்கென்று பிரத்யேகமான பயிற்சிகள் செய்யவேண்டும்
4. இறுக்கமான தசைகளுக்கு தசை நீட்டிப்பு (Stretching) பயிற்சி செய்யலாம்.
5. பேச்சுப் பயிற்சி
6. இசை கேட்டல்
ஒருமுறை பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டவருக்கு, மீண்டும் பக்கவாத நோய் வராமல் தடுக்கும் சிகிச்சை முறை பற்றி வரும் வாரங்களில் பார்ப்போம்.