இந்தியத் தேசியக் காங்கிரஸ் தலைவர் கார்கே அவர்களுக்கு,
வணக்கம். அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி ஆளும் பாஜகவிற்கு எதிராக மதச்சார்பின்மை கூட்டணியைக் கட்டமைத்துத் தொடர்ந்து எதிர்த்து வருகின்றது. கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தல் முதல் 2026 சட்டமன்றத் தேர்தல் வரை தமிழ்நாட்டில் திமுக, பாஜக எதிர்ப்பை மட்டுமே முன்னிலைப்படுத்தி அரசியல் செய்து வந்தது. பாஜக போற்றும் இந்து சனாதனத்திற்கு எதிராகப் பேசியதற்காக அப்போதைய துணை முதல் அமைச்சர் உதயநிதிக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. 2026 மார்ச் மாதத்தில் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதன் நகலைத் தீயிட்டுக் கொளுத்தி இந்தியாவின் கவனத்தை ஈர்த்தார், அப்போதைய முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின். இப்போதும் திமுக பாஜக எதிர்ப்பைக் கடைபிடித்து வருகின்றது.

பாஜக கொள்கை எதிரி என்று அறிவித்துவிட்டு, பாஜக மீது கடுமையான விமர்சனங்கள் எதையும் செய்யாமல், கொள்கை நடைமுறைகளை எதிர்க்காமல் ஆட்சி பொறுப்புக்கு வந்த தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்து அமைச்சரவையிலும் பங்கேற்றுள்ளது. தேசிய அளவில் திமுக மீது காங்கிரஸ் கட்சிக்கு மாறுபாடான கருத்துகள் இல்லை என்றாலும், மாநில அளவில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்குத் திமுக மீது கடும் விமர்சனம் இருந்து வந்தது. இப்போதும் தொடர்கின்றது. திமுகவும் இந்தியா கூட்டணியிலிருந்து விலகி விட்டது என்றாலும், பிரச்சனை அடிப்படையில் இந்தியா கூட்டணி எடுக்கும் முடிவுகளுக்கு ஆதரவு அளிக்கப்படும் என்று திமுக தெளிவுபடுத்தியுள்ளது.
பாஜக மற்றும் அதிமுகவுடன் திமுக கூட்டணி என்பதான தவெகவின் பொய்பரப்புரைக்கு ஏறத்தாழ ஒத்து ஊதுவதுபோல் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியியினரும் பேசி வருவது வியப்பளிக்கிறது.

“நாடாளுமன்றத்தில் மீண்டும் அறிமுகம் செய்யப்படவுள்ள தொகுதி மறுசீரமைப்பு மசோதாவைத் திமுக ஆதரிக்கக்கூடாது.” என்று அரசியல் வகுப்பு எடுக்கிறார், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம். இதற்கும் ஒருபடி மேலே சென்று, “திமுக பாஜகவின் ஆசை வலையில் சிக்கவிட்டது. முதல் கட்டப் பேச்சுவார்த்தை நடந்து முடிந்துவிட்டது. தொகுதி மறுசீரமைப்பைத் திமுக ஆதரிக்கும். ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதன் மூலம் தமிழ்நாட்டிற்கு 2031இல் வரவேண்டிய சட்டமன்றத் தேர்தல் 2029இல் நடைபெறும். இதன் மூலம் திமுக ஆட்சிக்கு வந்துவிடலாம் என்று நினைக்கின்றது” என்பதாக கொளுத்திப் போடுகிறார், சிவகங்கை எம்.பி. கார்த்திக் சிதம்பரம்.
தமிழ்நாட்டிற்குப் பக்கத்தில் உள்ள புதுச்சேரியில் பாஜக + ரெங்கசாமி காங்கிரஸ் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்கியதே புதுச்சேரி மாநிலக் காங்கிரஸ்தான் என்பதை தாங்கள் நன்கறிவீர்கள். தமிழ்நாட்டில், திமுக ஆட்சியில் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு மாற்றப்பட்டுச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இது மாநில உரிமை சார்ந்தது என்பதை அறியாமல் தவெக அரசில் உயர்கல்வித் துறை அமைச்சராக உள்ள உங்கள் கட்சியை சேர்ந்த விஸ்வநாதன் ஆளுநரைச் சந்தித்து, “நீங்கள்தான் வேந்தராக இருக்கவேண்டும். நீங்கள்தான் துணைவேந்தரை நியமிக்கவேண்டும். பல்கலைக்கழக மானியக்குழுவின் பிரதிநிதியைத் துணைவேந்தர் தேர்வு குழுவில் இணைத்துக் கொள்கிறோம்” என்று பாஜகவின் நோக்கங்களுக்கு வெண்சாமரம் வீசியுள்ளார். இதில் எங்கே பாஜக எதிர்ப்பு உள்ளது என்பதை நீங்கள் ஆராய வேண்டும்.

தேசிய அளவில் பாஜகவை எதிர்க்கத் திமுக வேண்டும் என்று தேசியத் தலைமை விரும்புகின்றது. மாநிலத் தலைமை திமுக எதிர்ப்பை மட்டும் மையமாகக் கொண்டு இயங்கும் தவெகவிற்கு ஒத்துழைப்பு நல்கி வருகின்றது. பாஜக எதிர்ப்பில் காங்கிரஸ் ‘இருதலைக் கொள்ளி எறும்பாகவே உள்ளது” என்பதாக, இதனை நாங்கள் புரிந்து கொள்ளலாம்தானே? ‘இரட்டைக் குதிரை சவாரி ஊர்போய் சேரமுடியாது” என்ற பழமொழியை தாங்கள் அறியாதவர் இல்லையே?
அகில இந்திய அளவில் பாஜகவை எதிர்த்துவரும் காங்கிரஸ், அதே அரசியல் நிலைப்பாட்டுடன் தற்போது தமிழகத்தில் கூட்டணி கட்சியாக அங்கம் வகிக்கும் த.வெ.க.வையும் இணைத்துக் கொண்டு பாஜக எதிர்ப்பில் வலிமை காட்டுமா? அதைவிடுத்து, பாஜகவுடன் திமுக கூட்டணி சேரப்போகிறது என்று அரசியல் ஆரூடம் சொல்லிக்கொண்டே காலத்தை ஓட்டுமா? எதை செய்யப்போகிறது, உங்களது தமிழக காங்கிரசு தலைமை? காங்கிரஸ் பேரியக்கத்தின் அகில இந்திய தலைவராக, உங்களது கருத்துகளை, ஆக்கப்பூர்வமான அரசியல் முன்னெடுப்புகளை ஆவலோடு எதிர்நோக்கியிருக்கிறது, தமிழகம்!
— ஆதவன்.







Comments are closed, but trackbacks and pingbacks are open.