அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

என் சொல்லுக்கு மறுசொல் கூடாது ! – இது சரியா?

திறந்த மடல் - 20

திருச்சியில் அடகு நகையை விற்க

மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் அவர்களுக்கு, வணக்கம்.
நடந்து முடிந்த 17ஆவது சட்டமன்றத்தின் பேரவைத் தலைவராகத் தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கிடையே நடுநிலையாக இருந்து பேரவையைச் சிறப்பாக வழிநடத்த வேண்டுமென உங்களுக்கு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அண்மையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள சி.ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசின் மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சிகளின் சார்பில் கட்சிகளின் குழுத் தலைவர்கள் உரையாற்றினார்கள். அதிமுக குழுவின் தலைவர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றிய பிறகு அதிமுகவில் இன்னொரு குழு என்று இயங்கும் வேலுமணி அவர்களைப் பேரவைத் தலைவராக உள்ள நீங்கள் உரையாற்ற அழைத்தீர்கள். அதற்கு எடப்பாடி தலைமையில் இயங்கும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சட்டப்பேரவையில் வேலுமணி பேசி முடிக்கும்வரை கூச்சல், குழப்பம் தொடர்ந்தது.
அப்போது குறுக்கிட்டுப் பேசிய பேரவைத் தலைவர் பொறுப்பில் உள்ள நீங்கள், “யாரைப் பேச அழைக்கவேண்டும் என்பது என்னுடைய உரிமை. இதில் யாரும் தலையிடவோ, கேள்வி கேட்கவோ முடியாது. நான் சொல்வதுதான் இறுதியானது. யாரேனும் பேசி விரும்பி என்னை அணுகியிருந்தால் பேச வாய்ப்பளித்திருப்பேன்” என்று சொல்லி, தனக்கு வானளாவிய அதிகாரம் உள்ளது என்பதை நேரடியாகவே தெரிவித்தீர்கள்.
பேரவைத் தலைவர்களின் முடிவுகள் ஜனநாயகத்திற்கும் சட்டவிதிகளுக்குப் புறம்பாக இருந்தால், பேரவைத் தலைவர்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என்பதைக் கண்டித்துப் பல தீர்ப்புகளை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது என்பதை நீங்கள் மறந்துவிட்டு முன்னாள் பேரவைத்தலைவர் பி.எச்.பாண்டியனை நினைவுபடுத்தும் வகையில் நீங்கள் பேசியுள்ளது என்பது ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1982ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். தலைமையில் நடைபெற்றுவந்த அதிமுக அரசின் மீது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கலைஞர் கருணாநிதி நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது பேரவைத் தலைவராக இருந்தவர் க.இராசாராம். அதிமுக அரசின் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீது சட்டப்பேரவையில் கடுமையான விவாதங்கள் நடைபெற்றன. விவாதங்களின் முடிவில் ஏப்ரல் 16ஆம் நாள் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது.

க.இராசாராம்
க.இராசாராம்

இந்த வார MAY 6 அங்குசம் இதழில்…

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

வாக்கெடுப்பின் விவரங்களின் முடிவைப் பேரவைத் தலைவர் க.இராசாராம் அறிவிக்கும்போது, “அரசின் மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது” என்று அறிவித்தார். அதிமுக உறுப்பினர்கள் வெற்றி பெற்றுவிட்டது என்ற அறிவிப்பைக் கேட்டு, மேசையைத் தட்டி ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். உடனே, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கலைஞர் கருணாநிதி எழுந்து அவையில் பேச வாய்ப்பு கேட்டார். முடிவு அறிவிக்கப்பட்ட பின் கலைஞர் என்ன பேசப்போகிறார் என்று பேரவை எதிர்நோக்கி இருந்தது. கலைஞர், “பேரவைத் தலைவர் இந்த அவையில் பழக்கதோஷத்தில் தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது என்று கூறியுள்ளார். அப்படியானால் இந்த அரசு கலைக்கப்பட வேண்டும். பேரவைத் தலைவர் அரசின் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி அடைந்துள்ளது என்று திருத்தம் மேற்கொண்டு மீண்டும் அறிவிப்பை வெளியிடவேண்டும்” என்று கூறினார்.
தன் தவறை உணர்ந்த பேரவைத் தலைவர் க.இராசாராம் சிரித்துக்கொண்டு, கலைஞருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டு, “அதிமுக அரசின் மீது கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி அடைந்தது” என்று திருத்தம் மேற்கொண்டு அறிவிப்பைப் பேரவையில் வெளியிட்டார். பேரவைத்தலைவர் வானளாவிய அதிகாரம் படைத்தவர்கள், அவர்களின் சொல்லுக்கு மறுசொல் கிடையாது என்றால், 1982இல் அதிமுக ஆட்சி கலைக்கப்பட்டிருக்கும். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டிருந்த கலைஞர் தானே முன்வந்து பேரவைத் தலைவர் அறிவிப்பில் உள்ள பிழையைச் சுட்டி காட்டி, திருத்தம் செய்யச் சொன்னார் என்ற வரலாற்றை நீங்கள் அறிந்தவர் என்பதுதான் நகைமுரண். 1980-84 ஆண்டுகளில் வில்லிவாக்கம் தொகுதியில் வெற்றி பெற்றுச் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர் என்பதுதான் வரலாற்றின் விநோதம்.
தவெக அரசின் பேரவைத் தலைவராக உள்ள உங்களின் முதல் கோணலைச் சரி செய்யுங்கள். இல்லையென்றால், முற்றும் கோணலாகிவிடும் என்பதை உங்களுக்குத் தெரிவிப்பது எங்கள் கடமை என்பதைச் சுட்டிக்காட்டுகிறோம். பேரவைத் தலைவராகச் சிறப்புடன் செயல்பட எங்களின் நல்வாழ்த்துகள்.

தமிழன்புடன், ஆதவன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.