பாதாள சாக்கடை பணிகளால் தடைபடும் பயணம்… பரிதவிக்கும் வாகன ஓட்டிகள்… சீர்படுத்துமா மாநகராட்சி..?
பாதாள சாக்கடை பணிகளால் தடைபடும் பயணம்… பரிதவிக்கும் வாகன ஓட்டிகள்… சீர்படுத்துமா மாநகராட்சி..?
திருச்சியில் பெரும்பாலான பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்ற வருகின்றன. இதில் சாலைகளின் ஒரு பகுதியில் பள்ளம் தோண்டப்பட்டு டேங்க் மற்றும் குழாய்கள் அமைக்கப்படுகிறது. டேங்க் அமைக்க ஒரு முறை சாலையை தோண்டுவது, பின்னர் மூடுவது, குழாய் பதிக்க ஒரு முறை தோன்றுவது பின்னர் மூடுவது என ஒரு மாதிரியாக வேலைகள் நடைபெற்று வருகிறது.
மீண்டும் ஒரு முறையோ, இரண்டு முறையோ தோண்டும் நிலை வரலாம் என்று கருதியோ என்னவோ பறித்த பள்ளங்களை சரியான முறையில் மூடப்படுவதில்லை. இதில் பள்ளத்தில் போடப்பட்ட மண் உள்ளிரங்கி வாகன ஓட்டிகளை சோதித்து வருகிறது. தற்போது இரண்டு நாட்களாக பெய்து வரும் மழையில் நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது. திருச்சியில் வில்லியம்ஸ் ரோடு, கன்டோண்மென்ட், ஸ்டேட் பேங்க் சாலை, பீமநகர், பெரிய கடை வீதி, குட் ஷெட் ரோடு, தில்லை நகர், உறையூர் என பாரபட்சம் பார்க்காமல் அனைத்து பகுதிகளிலும் பயணிக்கும் வாகன ஓட்டிகள் படும் சிரமம் சொல்லிமாளாது.
அரசு பேருந்து, தனியார் பேருந்து, கார்கள், சரக்கு வாகனங்கள், ஆட்டோக்கள் என பாரபட்சம் பார்க்காமல் அனைத்து வாகனங்களும் சிக்கி தவித்து வருகிறது. இதில் இரு சக்கர வாகன ஓட்டிகள் பள்ளத்தில் சிக்கினால் அருகில் உள்ளவர்கள் தூக்கி விட்டு காப்பாற்றி விடுகிறார்கள் மற்ற வாகனங்கள் மாட்டினால் போக்குவரத்து பாதிக்கப்படுவதால் செய்ய வேண்டிய பணிகளை கைவிட்டு மீண்டும் திரும்பும் நிலை பலருக்கும் தினசரி ஏற்படுகிறது. இந்த பணியை இப்படி செய்ய வேண்டும் என்று அறிவுரை கூறுவது இச்செய்தியின் நோக்கம் அல்ல. அனைத்தும் தெரிந்த அதிகாரிகள், அரசியல்வாதிகள் இதனை மக்கள் பணி என்ற ஒன்றை மட்டும் மனதில் நிறுத்தினாலே போதும் இது போன்ற சிரமங்களை மக்கள் சந்திக்காமல் தவிர்க்கலாம்.
இத்துடன் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் அரசு பேருந்து ஒன்று பள்ளத்தில் சிக்கி தவிப்பது பின்னர் மீட்கப்படுவது அதைத் தொடர்ந்து அரசு போக்குவரத்து டெப்போ உள்ள வில்லியம்ஸ் சாலை பகுதியில் மண் கொட்டி பள்ளங்கள் சீரமைப்பது அதே சாலையில் இரவு சகதியில் மாட்டிக் கொண்ட கார், அந்த சாலையை தவிர்க்க வேண்டி டெப்போவில் இருந்து ஹோட்டல் ஃபெமினா வழியாக செல்ல முயற்சி செய்யும் அரசு பேருந்து அத்துடன் மோதிய கார். நடத்துனரின் கதறலையும் ஏற்படுத்தாமல் தப்பிச் செல்வது போன்ற காட்சிகளை காணலாம்.