பீதியை கிளப்பிய கரடி வீடியோ ! உண்மையா ? புரளியா ?
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே அமைந்துள்ள சுற்றுலாத்தலம் புளியஞ்சோலை. இயற்கையான மலை சூழ்ந்த நீர்ப்பரப்பும் ரம்மியமான சூழலும் நிறைந்த புளியஞ்சோலைக்கு துறையூர் மட்டுமின்றி திருச்சி, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வருகை தருவார்கள்.
பொதுவில், ஞாயிற்றுக்கிழமை உள்ளிட்ட விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். கூடுதலாக, ஆடி மாதத்தில் உள்ள விசேச நாட்களில், இங்கு அமைந்துள்ள ஜீவசமாதி மற்றும் மாசி பெரியண்ணசாமி கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
இந்நிலையில்தான், புளியஞ்சோலை பகுதியில் கரடி உலவுவதாக வீடியோ ஒன்று வெளியாகி பீதியை கிளப்பியிருக்கிறது. இதனை தொடர்ந்து, இதன் உண்மை தன்மை அறியும் வரை சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கோ சுற்றிப் பார்ப்பதற்கோ அனுமதி இல்லை என நாமக்கல் மாவட்ட வனச்சரக அதிகாரி மாதவி யாதவ் எச்சரிக்கை விடுத்துள்ளார். வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து அப்பகுதியில் கூண்டு அமைத்து கரடி பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கரடி உலா வரும் பவர் ஹவுஸ் எனப்படும் பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் அப்பகுதி கண்காணிப்பில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு, சுற்றுலாக்காகவும், நேர்த்திக்கடனை செலுத்துவதற்காகவும் பலரும் புளியஞ்சோலைக்கு கிளம்பிய நிலையில் அவர்களை அதிருப்தி மற்றும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது இந்த சம்பவம். மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலா பயணிகள் புளியஞ்சோலையில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
உண்மையிலேயே, கரடி உலவுகிறதா? இல்லை, வழக்கம்போல ட்ரெண்டுக்காக நெட்டிசன்கள் அல்லது பொதுமக்களை பீதியில் ஆழ்த்தி அதில் இன்பம் காணும் குரூர புத்தி கொண்டவர்களின் செயலா? என்பது போலீசாரின் விசாரணையில்தான் தெரியவரும்.
— ஜோஷ்