GH முன்பு போல் இல்லை. நிறைய மாறி இருக்கிறது !
அரசு மருத்துவமணை என்றாலே நாசியைத் துளைத்தெடுக்கும் மருத்துவக் கழிவுகளின் நாற்றம் … சிகிச்சைக்கு இங்கே அங்கே என்று அலைக்கழிப்பார்கள் … மருத்துவர்கள் ”கொள்” என எரிந்து விழுவார்கள் … என்ற சித்திரம்தான் பொதுவில் சொல்லப்படுவதுண்டு.
அரசு மருத்துவமனை பற்றிய வழக்கமான சித்தரிப்புகளுக்கு மத்தியில், திருச்சி அண்ணல் காந்தியடிகள் நினைவு அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நோயாளி ஒருவர் அரசு மருத்துவர்கள் தன்னை கையாண்ட விதம் குறித்து நெகிழ்வோடு அனுபவங்களை பகிர்ந்திருக்கிறார்.
திருச்சி, இலால்குடி – கண்ணாக்குடி மல்லிகைபுரத்தை சேர்ந்தவர் க.கணேசன், வயிற்றுவலி காரணமாக சிகிச்சைக்கு சேர்ந்தவர், மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் தொடர் சிகிச்சையை சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி மேற்கொண்டிருக்கிறார். மருத்துவமனையில் தான் தங்கியியிருந்த நாட்களை நெகிழ்வோடு அசைபோடுகிறார், அவர்.

“திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு நிர்வாகத்திற்கு வணக்கம்! நான் கடும் வயிற்று வலி காரணமாக 28. 01. 2025 அன்று அவசர பிரிவிற்கு வந்தேன். அன்று இரவு 7 மணி அளவில் FS-IV வார்டில் உள் நோயாளியாக சேர்க்கப்பட்டேன். பல்வேறு இரத்த பரிசோதனைகள், CT ஸ்கேன், Contrast CT ஸ்கேன், usg ஸ்கேன், எண்டோஸ்கோப்பி என பல்வேறு பரிசோதனைகள் எனக்கு செய்யப்பட்டன. 3 நாட்கள் கழித்து, கழுத்தில் இருக்கும் கட்டியை கவனித்த ஒரு மருத்துவர், “இன்னும் வேறு எங்கே கட்டிகள் இருக்கின்றன” எனக் கேட்டார்.

“கேன்சராக இருக்கலாமோ” என சந்தேகித்தனர். ஒவ்வொரு பரிசோதனை முடிவுகளும் வந்தன. ஓரளவுக்கு தெளிவான முடிவுக்கு வந்தாலும், இறுதியாக, ‘கழுத்தின் இடதுபுறம் இருக்கும் கட்டியை ஆபரேஷன் மூலமாக எடுத்து பயாப்சி டெஸ்ட் அனுப்புவது’ என முடிவு செய்து, அதற்கு முன் ஏற்பட்ட பல்வேறு சிக்கல்களை, மருத்துவர்களே அலைந்து, திரிந்து, சரி செய்து, கடந்த 06.02.2025 அன்று ஆபரேஷன் செய்யப்பட்டது. அதன் பின் “இது கேன்சர் இல்லை. மருந்து, மாத்திரையிலேயே குணப்படுத்தி விடலாம்” என மருத்துவர்கள் கூறினர். இன்று 08. 02.2025 அன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டேன்.
இவ்வளவு பரிசோதனைகளும், எனக்கு பல்வேறு வகையான வேதனைகளைத் தந்தாலும், தலைமை மருத்துவர் முதல் இளம் மருத்துவர்கள், நர்ஸ் பயிற்சி பள்ளி மாணவிகள் வரை அனைவரும் சிரித்த முகத்தோடு என்னை அணுகியதும், அவர்கள் தந்த நம்பிக்கையும், ஆறுதலும் , என்னை எல்லா பரிசோதனைகளுக்கும் ஒத்துக்கொள்ள வைத்தது. அனைவரையும் அப்பா, அம்மா, ஐயா, தாத்தா என உறவுகளைச் சொல்லியே அழைத்தார்கள். கனிவோடு நடந்து கொண்டார்கள். GH முன்பு போல் இல்லை. நிறைய மாறி இருக்கிறது நல்ல விதமாக.
எனக்கு கடவுள் நம்பிக்கை அறவே இல்லை. ஆனால் தற்போது FS – IV வார்டு தான் எனது கோவில். அங்கு எனக்கு மருத்துவ உதவி செய்த மருத்துவர்கள் உள்பட அனைவரும் தான் எனது கடவுள்கள். கடமைக்காக செய்யாமல், உணர்வோடு செயல்படும் இவர்கள் அனைவரும், தமிழக அளவில், இந்திய அளவில், உலக அளவில், மங்காத புகழ் பெற, மனதார வாழ்த்துகிறேன். தலைமை மருத்துவர் முதல் இளம் மருத்துவர்கள், நர்ஸ் பயிற்சி பள்ளி மாணவிகள் வரை அனைவருக்கும், மருத்துவமனை நிர்வாகத்திற்கும், தமிழ்நாடு அரசுக்கும் கோடான கோடி நன்றிகள். ” என்பதாக அந்த கடிதத்தை நிறைவு செய்திருக்கிறார் கணேசன்.
கூடவே, தான் எழுதிய நெகிழ்வான அந்த இருபக்க கடிதத்தை, தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களிடமே வழங்கியிருக்கிறார். அவரது கடிதத்தை படித்து பார்த்த மருத்துவர்கள் ஆற்றிய எதிர்வினை குறித்து குறிப்பிடும் கணேசன், “நான் FS-iv வார்டு மருத்துவருக்கு எனது கையால் எழுதிக் கொடுத்த இரண்டு பக்க நன்றி கடிதத்தை, அவரோடு இணைந்து பணியாற்றும் 15 மருத்துவர்களிடம் காட்டியிருக்கிறார்.
அவர்களது (H.O.D) தலைமை மருத்துவரிடம் காட்டியிருக்கிறார். அவர், என்னை நேரில் வரவழைத்த இப்போது என்னுடன் 15 மருத்துவர்களும் வந்தனர். அவர் “20 ஆண்டுகளுக்கு மேலாக இங்கே பணி செய்கிறேன். எவ்வளவோ உயிர்களை காப்பாற்றி இருக்கிறேன். பலரும் ‘டிஸ்சார்ஜ்’ என்றவுடன், உடனே வீட்டுக்கு கிளம்பி விடுவார்கள். நன்றி சொன்னவர்கள் மிகவும் குறைவு. நீங்கள் கடிதமாகவே கொடுத்திருக்கிறீர்கள். இது எங்களது உழைப்புக்கான அங்கீகாரம்.
நான் எனது பிள்ளைகளிடம், “உனது தாய், தந்தை, சகோதர, சகோதரி மருத்துவமனையில் வந்து சேர்ந்தால், அவர்களை எப்படி கவனிப்பாயோ, அதேபோல இங்கே வரும் நோயாளிகளை கவனித்துக் கொள்ள வேண்டும்” என அடிக்கடி கூறுவேன். என் பிள்ளைகள் அது போல் தான் நடந்து கொண்டிருக்கிறார்களா என எனக்கு தெரியாது. ஆனால் அப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை, உங்கள் கடிதம் மூலமாக தெரிந்து கொண்டேன். நன்றி” என்றார். பேசிக் கொண்டிருக்கும்போதே, இரு முறை அவர் கண்ணில் இருந்து, கண்ணீர் வழிந்தது.
“உங்கள் கையாலேயே மருத்துவமனை டீனிடம் சென்று கொடுங்கள்” என்றார். நானும் மருத்துவமனை டீனை சென்று சந்தித்து, இந்த கடிதத்தை கொடுத்தேன். படித்துவிட்டு, இருக்கையிலிருந்து எழுந்து நின்று, இரு கரம் கூப்பி, நன்றி சொன்னார். “இதை உடனடியாக கலெக்டருக்கு அனுப்புகிறோம்” என்றார். நாம் ஒரு இடத்தில் அன்பை விதைத்தால், அது பல மடங்கு அன்பாக நமக்கு திரும்ப கிடைக்கிறது. மிகுந்த மகிழ்ச்சி.” என்கிறார், நெகிழ்வோடு கணேசன்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
கணேசன், சாதாரண கூலித் தொழிலாளி. முன்னாள் தரைக்கடை வியாபாரி. இன்னும் சொல்லப்போனால், திருச்சி நகரின் அடையாளம் என்பதாக சொல்லிக்கொள்ளும் பெரும் வணிக நிறுவனங்களின் நெருக்கடிகளுக்கு எதிராக, தரைக்கடை வியாபாரிகளின் சார்பாக அவர்களின் வாழ்வுரிமைக்காக போராடியவர்களுள் குறிப்பிடத்தக்கவர். இதே அரசு மருத்துவமனையில் அப்போது நிலவிய அவலங்கள் உள்ளிட்டு, பொதுப்பிரச்சினைகளை தனது தூரிகைகளால் சுவரொட்டிகளாக எழுதியும் அதே சுவரொட்டிகளை நகரெங்கும் பசை தடவி ஒட்டிய கைகளுக்கும் சொந்தக்காரரும்கூட.
ஒரு இருபது ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற தரைக்கடை வியாபாரிகளின் வாழ்வாதாரத்துக்கான போராட்டத்தில், விரக்தியின் உச்சத்துக்கு சென்ற தரைக்கடை வியாபாரிகள் சிலர் தீக்குளிக்கும் விபரீத முடிவையும் எடுத்திருந்தனர். அன்றுவரை அவர்களுடன் பயணித்த அசோக் என்ற தரைக்கடை வியாபாரி தீக்கிரையாகிவிட, தீக்காயங்களோடு அன்று உயிர்பிழைத்தவர்தான் இந்த கணேசன். சமூக அநீதிக்கு எதிரான கோபத்தை கொண்டவராக மட்டுமின்றி; நல்ல விசயங்களை மனமுவந்து பாராட்டும் பக்குவத்தையும் கைக்கொண்டிருக்கிறார், கணேசன்.
— கலைமதி.