அலப்பறை ரவுடிகளுக்கு டார்கெட்! திருச்சி ஐ.ஜி. டீம் நடத்திய அதிரடி ஆபரேஷன்!
தீபாவளி திருநாளையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு 08.11.26 மற்றும் 09.11.26 ஆகிய இரு தினங்கள் சிறப்பு அதிரடி சோதனை மத்திய மண்டலத்திற்குட்பட்ட 9 மாவட்டங்களில் நடத்தப்பட்டது.
சரித்திர பதிவேடு குற்றவாளிகளான ரவுடிகள், கேடிகள், கஞ்சா குற்றவாளிகள் ஆகியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் நீண்ட நாட்களாக பிடிகட்டளை நிறைவேற்றப்படாமல் நிலுவையிலுள்ள வழக்குகளில் தலைமறைவு குற்றவாளிகளை கைது செய்யும் நோக்கில் இந்த சிறப்பு அதிரடி சோதனை மற்றும் 368 இடங்களில் வாகன தணிக்கை மேற்க்கொள்ளப்பட்டது.
இந்தச் சிறப்பு நடவடிக்கையில் 608 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளை தணிக்கை செய்யப்பட்டதுடன், 693 வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது, இதில் திருச்சி 7, புதுக்கோட்டை 8, கரூர் 1, பெரம்பலூர் 4, அரியலூர் 2, தஞ்சாவூர் 1, திருவாரூர் 5, நாகப்பட்டிணம் 2 மற்றும் மயிலாடுதுறை 2 என மொத்தம் 32 வழக்குகள் பதியப்பட்டு 34 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஒரு நான்கு சக்கர வாகனம் (Innova car), 3 இருசக்கர வாகனங்கள், 4 கத்திகள், 9 அருவாள்கள், ஒரு கிரிக்கெட் மட்டை மற்றும் ஒரு மரக்கட்டை ஆகியவைகள் கைபற்றப்பட்டுள்ளன.
மேலும் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த 7 பிடியாணை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் 2 கஞ்சா குற்றவாளிகளும் கரூர் மாவட்டத்தில் கொடுங்குற்றத்தில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த ஒரு குற்றவாளியும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்தச் சிறப்பு அதிரடி நடவடிக்கையின்போது மேற்கொள்ளப்பட்ட வாகனத் தணிக்கையில், ஒரு கொலைச் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டு, அதில் தொடர்புடையவர்களிடமிருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும், வாகனத் தணிக்கையின்போது போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக 400 Drunken Drive வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் சட்டத்திற்குப் புறம்பாக செயல்படுவோர் மீது தொடர்ந்து தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். மேலும், தலைமறைவாக உள்ள குற்றவாளிகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க மத்திய மண்டலத்தில் உள்ள 9 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு மத்திய மண்டல காவல்துறை தலைவர் அவர்கள் அறிவுரை வழங்கியுள்ளார்.






Comments are closed, but trackbacks and pingbacks are open.