நீ சிரித்தால் தீபாவளி ! நெகிழ வைத்த திருச்சி பீனிக்ஸ் ரோட்டரி கிளப் !
திருச்சி சாரதாஸ் கார் பார்க்கிங் ஏரியாவில் சிறப்பு விருந்தினர்களின் வருகைக்காக ஒரு மணி நேரம் முன்னதாகவே காத்திருந்தார்கள், ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சிராப்பள்ளி – பீனிக்ஸ் குழுவினர்.
தனித்தனியே இரண்டு வேன்களில் வந்திறங்கினார்கள், அவர்கள் எதிர்பார்த்திருந்த சிறப்பு விருந்தினர்கள். ஒன்றல்ல, இரண்டல்ல வந்திருந்த 55 சிறப்பு விருந்தினர்களையும் இன்முகத்தோடு வரவேற்று மகிழ்ந்தார்கள். விருந்தினர்களோ, மகிழ்ச்சி பொங்கி வழிந்த குதூகலத்தோடு சாரதாஸ் ஜவுளிக் கடலுக்குள் நுழைந்தார்கள்.
காலை 9 மணிக்கே வாடிக்கையாளர்களால் களை கட்டியிருந்தது, சாரதாஸ் துணிக்கடை. வானவில்லின் வர்ண ஜாலங்களாய் தீபாவளி கலெக்ஷன்கள் ஜொலிஜொலிக்க, எதை எடுக்க, எதை விடுக்க? என்ற குழப்பம் மேலிட கண்ணில் காண்பவை அனைத்துமே அவர்களை வாரி அணைக்கத் தூண்டியது. அவர்கள் தேர்ந்தெடுத்த ஒவ்வொன்றுமே, அவரவர்களின் அளவெடுத்து தைத்ததுபோலவே நேர்த்தியாய் இருந்ததை கண்டு பூரித்து போனார்கள். ஆளுக்கொரு புத்தாடைகளோடு, புன்னகை சிந்த சாரதாஸ் கடையை வலம் வந்தார்கள்.
பட்டு சேலைகளுக்கான பிரிவு சிற்றரங்கமாக மாறியிருந்தது. இருக்கைகளில் சிறப்பு விருந்தினர்கள் அமர வைக்கப்பட்டார்கள். அவர்களுக்கு முன்பாக, ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சிராப்பள்ளி – பீனிக்ஸ் கிளப் நிர்வாகிகள், தலைவர் கே.வினோஜ்குமார், செயலர் ஜாஹிர் ஹூசைன், பொருளாளர் முகமது அன்சாரி, புராஜெக்ட் சேர்மன் பினாய் ராய், புராஜெக்ட் அட்வைசர் செல்வக்குமார், முன்னாள் தலைவர் ரமேஷ்பாபு உள்ளிட்ட நிர்வாகிகள் வந்தமர்ந்தார்கள். சிறப்பு விருந்தினர்களோடு கலந்துரையாட, சிறப்பு அழைப்பாளர்களாக பிரபல லேப்ரோஸ்கோப்பி அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் ஜமீர் பாஷா மற்றும் அவரது துணைவியாரும் மகப்பேறு மருத்துவருமான ஷகீலா ஜமீர் ஆகியோரும் வந்து சேர்ந்தார்கள்.
ரோட்டரி அமைப்பின் செயல்பாடுகள் குறித்தும்; போலியோ ஒழிப்பில் அது நிகழ்த்திய வரலாற்று சாதனையையும் குறிப்பிட்டு சமூகத்திற்கான பொது சேவையில் ஈடுபட வேண்டியதன் அவசியம் குறித்து சிற்றுரை நிகழ்த்தினார் மருத்துவர் ஜமீர் பாஷா.
அதிலும் குறிப்பாக, மாணவ செல்வங்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்ற வேட்கையோடு இயங்க வேண்டும் என்றார்.
மாணவ செல்வங்கள் அவரவர்களுக்கு பிடித்தமானதை தேர்ந்தெடுத்து வைத்திருந்த புத்தாடைகளோடு, இனிப்பு, பட்டாசு பெட்டகத்தோடு, பேனா பென்சில் உள்ளிட்ட ஸ்டேஷனரிகளையும் தொகுப்பாக சிறப்பு விருந்தினர்கள் ஒவ்வொருவருக்கும் பரிசளித்து மகிழ்ந்தார்கள்.
அன்றைய நாளை மிகவும் மகிழ்வாக்கிய அந்த சிறப்பு விருந்தினர்கள் வேறு யாருமல்ல. திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த தொடக்கப்பள்ளி மாணவர்கள். இரண்டாம் வகுப்பு, மூன்றாம் வகுப்பு பயிலும் மாணவர்களே அதில் மூன்றில் ஒரு பாகம் மழலை மாறா முகங்களாய் நிறைந்திருந்தார்கள். ஒரு துணிக்கடைக்குள் நுழைந்து, அவர்களுக்கான உடையை அவர்களே அதுவும் அது என்ன விலை என்று விலைப்பட்டியை பார்க்காமல் மனசுக்கு பிடித்தது போல அவர்களது விருப்பத்திற்கேற்ப தேர்வு செய்தது அவர்களை பொறுத்தமட்டில் இதுவே முதல்முறை.
இதுநாள்வரையில், அப்பா, அம்மா இரண்டில் ஒருவரை கொண்டிருப்போர் அவர்களது வாய்ப்பு – வசதிக்கு ஏற்றபடி எடுத்து வந்த ஆடையை உடுத்தி மகிழ்ந்தவர்கள். இருவரையும் இழந்தவர்கள், அவர்களின்பால் அன்பு கொண்டவர்கள் எடுத்து கொடுத்த உடையை இன்முகத்தோடு ஏற்றுக்கொண்டவர்கள். அவர்களை பொறுத்தமட்டில், இதுபோன்ற ஷாப்பிங் அனுபவங்களை காட்சி அனுபவமாகவே ஏங்கி தவித்தவர்கள்.
இந்த ஆதரவற்ற ஏழை மாணவர்களின் சிரிப்பில்தான் உண்மையான மகிழ்ச்சி பொதிந்திருக்கிறது என்பதை உணர்ந்ததால்தான் என்னவோ, இந்த ஒன்றுகூடலுக்கு “நீ சிரித்தால் தீபாவளி” என்றே பெயரிட்டிருந்தார்கள் பீனிக்ஸ் ரோட்டரி கிளப்பினர். புத்தாடை மட்டுமல்ல; பட்டாசு இல்லாமல் தீபாவளி பண்டிகை முழுமைபெறுவதில்லை. அந்தக்குறையை, காளீஸ்வரி பட்டாசு நிறுவன இயக்குநர் செல்வசண்முகம் போக்கியிருந்தார். தனது பங்களிப்பாக, 55 மாணவர்களுக்கும் ஆளுக்கொரு பட்டாசு பெட்டகத்தை அன்பு பரிசாக வழங்கியிருந்தார்.
நெருக்கடியான தீபாவளி வியாபாரத்துக்கு மத்தியில், துணிக்கடையிலேயே நாற்காலிகளை போட்டு விழா நடத்திக்கொள்வதற்கும்; மாணவர்கள் ஜவுளிக்கடலில் நீந்தி திளைக்கவும் அனுமதி அளித்த சாரதாஸ் நிர்வாகத்தினருக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்தார்கள்.
அந்த பிஞ்சு பிள்ளைகளோடு செலவிட்ட மூன்று மணி நேரங்களும் வாழ்வில் என்றும் நிலைத்திருக்கும் நீங்கா நினைவுகளாய் மனதோடு அப்பிக்கொண்டது. காண்போரை நெகிழ்வில் ஆழ்த்திய அந்த பிஞ்சுகளின் குதூகலத்தில், பொங்கி வழிந்த சிரிப்பில், தீபாவளியின் மகிழ்வை தேடிய பீனிக்ஸ் ரோட்டரி கிளப்பின் முன்னெடுப்பு மெய்சிலிர்க்க வைத்தது.
— இளங்கதிர்






Comments are closed, but trackbacks and pingbacks are open.