மக்கள் விரும்பாத எந்தவொரு திட்டத்தையும் மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தக் கூடாது: டிடிவி தினகரன்
டெல்டா பகுதி மட்டுமல்ல, தமிழகத்தின் எந்தவொரு பகுதியிலும் தமிழக மக்கள் விரும்பாத எந்த ஒரு திட்டத்தையுடம் மத்திய, மாநில அரசுகள் அமல்படுத்தக் கூடாது என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
தஞ்சையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தினகரன், மத்திய அரசு நிலக்கரிக்கான ஆய்வை செய்ய மாட்டோம் என கூறியிருப்பதை வரவேற்பதாக தெரிவித்தார். அதே நேரத்தில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான டெல்டா பகுதிகளில் விவசாயத்தை பாதிக்கக் கூடிய எந்த ஒரு திட்டத்தையும் அரசாங்கம் கொண்டுவரக் கூடாது என்றார் டிடிவி தினகரன்.
விவசாயம் சார்ந்த, சுற்றுச்சூழலை, இயற்கையைப் பாதிக்காத திட்டத்தை தான் கொண்டுவர வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கை. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாடும் அதுதான் என்றார் அவர்.
“மக்கள் விரும்பாத திட்டத்தை செயல்படுத்த மாட்டார்கள் என நம்புகிறோம். மேலும் இத்திட்டத்தை இங்கு செயல்படுத்தினால் அமமுக சார்பில் அந்த பகுதி மக்கள் மற்றும் விவசாயிகளுடன் இணைந்து அந்த முயற்சியை கைவிடும் வரை தொடர் போராட்டம் நடைபெறும்,” என்று எச்சரித்தார் டிடிவி தினகரன்.