த.வெ.க. வேட்பாளர் பட்டியல் விநோதங்கள் விரிவான அலசல்…
தி.மு.க. தீயசக்தி என்றும், பா.ஜ.க.தான் கொள்கை எதிரி என்றும் பிரகடனப்படுத்தி கொண்டும், திராவிட கட்சிகளுக்கு மாற்றாக களம் காணப்போவதாக தன்னைத்தானே அறிவித்துக்கொண்டு தேர்தல் களத்தில் களம் காணும் த.வெ.க.வின் வேட்பாளர் பட்டியல் பல விசித்திரங்களை கொண்டிருக்கிறது.
அதிமுக, திமுக, காங்கிரஸ் என பல்வேறு கட்சிகளிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களையும், மீண்டும் போட்டியிட தங்களுக்கு சீட் ஒதுக்கவில்லை என்று அதிருப்தியில் இருந்தவர்களையும் அண்ணனாக அரவணைத்து சீட்டுகளை வாரி வழங்கியிருக்கிறார் த.வெ.க. தலைவரும் நடிகருமான விஜய்.

அ.தி.மு.க. to த.வெ.க.
அதிமுகவில் ஒன்பது முறை எம்.எல்.ஏ வாகவும் ஐந்து முறை வெவ்வேறு துறைகளில் அமைச்சராகவும் எதிர்கட்சித் துணைத் தலைவராகவும் பதவி வைகித்த கே.ஏ.செங்கோட்டையன் தலைமையின் மீதிருந்த அதிருப்தி காரணமாக அதிமுகவிலிருந்து விலகி த.வெ.க.வில் இணைந்த நிலையில் தற்போது த.வெ.க. சார்பில் கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வும் வடசென்னை வடக்கு மேற்கு மாவட்ட செயலாளராகவும் இருந்த வி.எஸ்.பாபு அப் பதவியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், அண்மையில் த.வெ.க.வில் இணைந்து தற்போது த.வெ.க சார்பில் கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடுகிறார்.

பா.ஜ.க.வில் மாநில தொழில்நுட்ப பிரிவு தலைவராகவும், அ.தி.மு.க.வில் தொழில்நுட்ப பிரிவு இணைச்செயலாளராகவும் பதவி வகித்த சி.டி.ஆர். நிர்மல்குமார் சென்ற வருடமே த.வெ.க.வில் இணைந்த நிலையில், தற்போது த.வெ.க. சார்பில் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் த.வெ.க.வின் தொழில்நுட்ப மற்றும் சமூக ஊடக பிரிவின் துணை பொதுச்செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டு முறை அ.தி.மு.க.வின் எம்.எல்.ஏ.வும் ஒருமுறை அமைச்சராகவும் பதவி வகித்த கு.ப.கிருஷ்ணன் தேர்தல் தேதி அறிவிக்கும் தருணத்தில் த.வெ.க.வில் இணைந்தார். ஏற்கெனவே, ஸ்ரீரங்கத்தில் மூன்று முறை போட்டியிட்டு ஒருமுறை வென்றவர், தற்போது த.வெ.க சார்பில் லால்குடி தொகுதியில் போட்டியிடுகிறார்.

இரண்டு முறை வில்லிவாக்கம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்த ஜே.சி.டி. பிரபாகரன் அண்மையில் த.வெ.க.வில் இணைந்தார். தற்போது த.வெ.க. சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.
திருப்பூர் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. எம்.பி. ஆகவும் ஈரோடு மேற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளராகவும் பதவி வகித்த வி.சத்யபாமா, அண்மையில் செங்கோட்டையன் தலைமையில் த.வெ.க.வில் இணைந்தார். தற்போது த.வெ.க சார்பில் திருப்பூர் வடக்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.
அதிமுக முன்னாள் வால்பாறை தொகுதி எம்.எல்.ஏ. டாக்டர் ஸ்ரீதரன் அதிமுகவிலிருந்து விலகி அண்மையில் த.வெ.கவில் இணைந்தார் தற்போது த.வெ.க. சார்பில் வால்பாறை (தனி) தொகுதியில் போட்டியிடுகிறார்.
அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வும் நெல்லை புறநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளராக பதவி வகித்த ரெட்டியார்பட்டி நாராயணனுக்கு இந்த முறை நாங்குநேரி ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த தொகுதி அ.ம.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டதால், அதிருப்தியடைந்து கடைசி நேரத்தில் த.வெ.க.வில் இணைந்தார். தற்போது, நாங்குநேரி தொகுதியில் த.வெ.க. வேட்பாளராக போட்டியிடுகிறார்.
திருப்பத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளரும் முன்னாள் சேர்மனுமான டாக்டர் திருப்பதி, திருப்பத்தூர் தொகுதி ஒதுக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் அ.ம.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டதால், அதிருப்தியில் த.வெ.க.வில் இணைந்து தற்போது த.வெ.க. சார்பில் திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

அ.தி.மு.க. முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன் தனக்கும் தன் தந்தைக்கும் உரிய மரியாதை அளிக்கப்படவில்லை எனக்கூறி அண்மையில் த.வெ.கவில் இணைந்து , ராசிபுரம் தொகுதியில் த.வெ.க சார்பில் போட்டியிடுகிறார்.
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வும் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளருமான தூசி கே.மோகன் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டதால், அதிமுகவிலிருந்து விலகி த.வெ.க.வில் இணைந்தார். தற்போது த.வெ.க. சார்பில் செய்யாறு தொகுதியில் போட்டியிடுகிறார்.
அதிமுக அரியலூர் மாவட்ட செயலாளராக பதவியில் இருந்து நீக்கப்பட்ட கவிதா ராஜேந்திரன், த.வெ.கவில் இணைந்து தற்போது ஜெயங்கொண்டம் தொகுதி வேட்பாளராக போட்டியிடுகிறார்.
அ.தி.மு.க. முன்னாள் கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ.வும் முன்னாள் அதிதிராவிட நலத்துறை அமைச்சராகவும் இருந்த 71 வயதான என்.சுப்பிரமணியன் காலம் போன காலத்தில் த.வெ.க.வில் தஞ்சமடைந்து கந்தர்வகோட்டை தொகுதி வேட்பாளராக களம் காணுகிறார்.
62 வயதான சோழவந்தான் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ எம்.வி கருப்பையா, அதிமுகவில் சீட் மறுக்கப்பட்ட நிலையில் அதே தொகுதியில் த.வெ.க சார்பில் போட்டியிடுகிறார்.

தி.மு.க. to த.வெ.க.
திமுகவில் திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பதவி வகித்த நவல்பட்டு விஜி, அவரது அரசியல் கனவை அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகர்த்துவிட்டார் என்ற விரக்தியில் தவெ.க.வில் இணைந்து அதே திருவெறும்பூர் தொகுதியில் த.வெ.க. வேட்பாளராக போட்டியிடுகிறார்.
காங்கிரஸ் To த.வெ.க.
காங்கிரஸ் கட்சியில் இருந்துகொண்டே, த.வெ.க. பக்கம் தாவப்போவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட டி.செல்வம் த.வெ.க.வில் இணைந்த நிலையில் சேப்பாக்கம் தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
நாம்தமிழர் to த.வெ.க.
சீமான் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து விலகிய ஜெகதீச பாண்டியன், த.வெ.க.வில் இணைந்து சங்கராபுரம் தொகுதி போட்டியிடுகிறார்.
— அங்குசம் தேர்தல் செய்திக்குழு.








Comments are closed, but trackbacks and pingbacks are open.