ஆளும் கட்சி அமைச்சருடன் அண்டர் டீலிங் … கடுப்பான எடப்பாடி … பீதியில் மா.செ.க்கள் !
நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் முன்பு எப்போது இல்லாத வகையில் கடும் போட்டியை கொடுத்து இருக்கிறது. இதற்கு காரணம் விஜய் என்கிற புதிய வரவு தான். விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் இந்த தேர்தலில் கணிசமாக வாக்குகளை பெரும் என கணிக்கப்பட்டாலும், யாருடைய வாக்குகளை, அதாவது திமுக – அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளில் யாருடைய வாக்குகளை விஜய் பிரிக்கிறார் என்பதை பொறுத்தே அடுத்து யார் ஆட்சி அமைக்க போகிறார் என்பதை உறுதி செய்ய முடியும்.
அந்த வகையில் விஜய்யின் வாக்கு பிரிவு தான் 2026 தேர்தல் முடிவு என்பது தெள்ளத் தெளிவாக உள்ளது. இந்நிலையில் மீண்டும் ஆட்சியை பிடிக்க திமுக மிக தீவிரமாக களம் இறங்கி இருக்கும், அதே வேளையில் பிளவுபட்ட அதிமுகவும் முன்னைக்காட்டிலும் பி.ஜே.பி. ஆதரவுடன் திமுகவுடன் நேருக்கு நேர் மல்லுக்கட்டுகிறது.
இந்த பின்னணியில்தான், அதிமுகவின் முன்னணி நிர்வாகிகள் சிலர் திமுகவின் அண்டர் டீலிங்கில் இணைந்த விவகாரம் எடப்பாடியை எட்டியிருக்கிறது. அதுவும் கட்சித் தொண்டர்கள் எல்லாம், உயிரைக் கொடுத்து களத்தில் தீவிரமாக வேலை செய்து கொண்டிருந்த வேளையில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் திமுக அமைச்சர்களுடன் அண்டர் டீலிங்கில் இருந்த விவகாரம் தலைமையை சூடேற்றியிருப்பதாக சொல்கிறார்கள்.
மலைக்கோட்டை மாவட்டத்தில் புறநகர் மாவட்ட செயலர் ஒருவர் ஆளும் கட்சியின் வெயிட்டான அமைச்சர் ஒருவருடன் செய்து கொண்ட டீலிங் தலைமையை ரொம்பவே கோபத்தில் ஆழ்த்திவிட்டதாக சொல்கிறார்கள். நேரடியாக அந்த மா.செ.வுக்கே லைனில் வந்த எடப்பாடி தேர்தல் முடிவு வரட்டும் என செம்மயாக காட்டியிருக்கிறார்.
அம்மா இருந்தபோது கட்சியை எப்படி கட்டுக்கோப்பாக வழிநடத்தினாரோ, அதுபோல கட்சி நிர்வாகிகளிடத்தில் அதுவும் ஆளுமைமிக்க அமைச்சராக இருந்தாலும் எந்நேரமும் எதுவும் நடக்கலாம் என்ற அச்சம் அவர்களிடத்தில் இருந்தது போல ஒரு சூழலை கட்சிக்குள் உருவாக்க வேண்டுமென்றே எதிர்பார்க்கிறார்களாம்.
இன்னும் சொல்லப்போனால், சொந்தக்காரன் சொந்த சாதிக்காரன் என்ற பந்த பாசத்தில்கூட, அவ்வளவு ஏன் பொண்ணு கொடுத்து பொண்ணு எடுத்த சம்பந்தியாக இருந்தாலும் எதிர்க்கட்சி என்றால் எதிர்க்கட்சிதான். கல்யாணம் காதுகுத்து என குடும்ப விசேசத்தில் கலந்து கொண்டால்கூட, ஒருவேளை எதிர்பாராத விதமாக ஒரே திருமண நிகழ்வில் மாற்றுக்கட்சியினருடன் குடும்ப பாசத்தில் கை குலுக்கினால்கூட பதவி பறிபோகும் என்ற நிலையை மீண்டும் கொண்டு வர வேண்டுமென்றே அதிமுக தொண்டர்கள் விரும்புகிறார்கள் என்கிறார்கள். தேர்தல் முடிவுக்குப் பிறகு அதிமுகவில் மாவட்ட செயலாளர்கள் மாற்றம் கன்பார்ம் என்றே கிசுகிசுக்கிறார்கள். பொருத்திருந்துதான் பார்ப்போமே!
– அங்குசம் தேர்தல் செய்திக்குழு.








Comments are closed, but trackbacks and pingbacks are open.