கிராமத்துப் பள்ளிக்கூடத்தில் எங்களுக்கு அறிவியல் பாடம் நடத்திய வடிவேல் வாத்தியாரை இன்று வரை மறக்க முடியவில்லை.
பாடங்களிலிருந்தே சின்னச்சின்ன விடுகதைகளைச் சொல்லி வியப்பில் ஆழ்த்துவார். பாடங்கள் எங்களுக்கு மறக்காமல் இருக்க அவர் கையாண்ட உத்தி இது.
‘சன்னலுக்கு வெளியே எட்டிப் பார்க்கும் குட்டிப் பையன். பச்சை சட்டை போட்டிருப்பான். அவன் யார்?’
நாங்கள் விழிப்போம்.
அவர் சொல்வார்:
“சன்னலுக்கு உள்ளே கண்ணாடி குடுவையில் வைக்கப்பட்டிருக்கும் பச்சைக்கொடி வெளியே சூரிய வெளிச்சத்திற்காக எட்டி பார்க்கிறது. இதன் பெயர் ஒளிநாட்டம்!”
‘அறிதுயிலில் ஆழ்ந்திருப்பான் – மழை பெய்தால் பாடுவான். அந்தக் குட்டிப் பையன் யார்?”
சிரித்தபடி சொல்வார்.
“அந்தக் குட்டிப்பையன் பெயர் தவளை! அந்த அறிதுயிலுக்கு ஆங்கிலத்தில் hybernation என்று பெயர்! அறிதுயிலில் மண்ணுக்குக் கீழே ஆழ்ந்திருக்கும் தவளை மழை பெய்ததும் விழித்துக் கொண்டு கத்துவதற்கு இதுதான் காரணம்!”
hybernation என்ற ஆங்கிலச் சொல்லைப் பார்க்கும்போது எல்லாம் வடிவேல் வாத்தியாரும் அவர் நடத்திய பாடமும் நினைவுக்கு வந்துவிடும்.
“எனக்குக் கையில் ஆறுவிரல் உண்டு தெரியுமா? அது என்ன?” என்று ஒருமுறை விடுகதை போட்டார்.
”சார் உங்க கையில் அஞ்சு விரல்தானே இருக்கு!” என்று நாங்கள் கோரஸாகக் கத்தினோம்.
“இதோ என் ஆறாவது விரல்!” என்று சாக்பீசை எடுத்துக் காண்பித்தார்.
இப்போது பள்ளிக்கூடங்களில் கரும்பலகையும் சாக்பீசும் காணாமல் போய்விட்டன! சாக்பீசை தனது ஆறாவது விரல் என்று சொல்லிப் பெருமைப்படும் ஆசிரியர்களும் இல்லை!
கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதையில் ஆறாம் விரல் பற்றி எழுதியிருப்பார்.
‘என் ஆறாம் விரலில் இருந்து
ரத்தம் கசிந்து
சிலுவையை நனைக்கிறது’
எழுதுகோல் ஆறாம் விரலாகி அதிலிருந்து ரத்தமும் கசிகிறதாம்!
கலைமகள் நாளில் குழந்தையின் விரல் பிடித்து நெல் பரப்பி ‘அ’ என்ற முதல் எழுத்தை எழுத வைப்பது வழக்கம். விரலுக்கு முதல்மரியாதை!
வில் வித்தை கற்றவன் கீழ்ச்சாதி என்பதால் கட்டை விரலைக் காணிக்கையாகக் கேட்ட துறவி பற்றிய கதை புராணத்தில் உண்டு!

பார்த்திபன் கனவு படத்தில் கவிஞர் கபிலன் எழுதிய பாடலில் நாயகனும் நாயகியும் பாடும் பாடல் வரும். ஆலங்குயில் கூவும் ரயில் என்று தொடங்கும்….. அந்தப் பாடலில் ஒவ்வொரு சொல்லாக நாயகன் சொல்ல அதற்கு விளக்கமாக நாயகி பாடும் பதிலாக வரிகள் வரும்.
அதில் ஒரு வரி:
‘சிகரெட்?’ என்று நாயகன் கேட்பான்
‘விரல்களின் இடையே
ஒரு விரல் போல
சில நொடி வாழ்ந்திடும்
ஆறாம் விரல்!’ என்று
நாயகி பாடுவதாக வரும்.
அழகான பாடல்! அழகான கற்பனை!
இந்து மதத்தில் கடவுளுக்கு உருவம் கற்பித்தவர்கள் கடவுளின் வேலைக்கு மனிதனைப்போல் அவயங்கள் போதாது என்று நினைத்தார்கள் போலும். ஆறு தலை, மூன்று கண், நூறு கை என்று கடவுளுக்குக் கூடுதல் அவயங்களைச் சிற்பங்களில் செதுக்கி வைத்தார்கள்.
மனிதனுக்கு அன்றாடம் செய்யும் வேலைகள் கூடிக்கொண்டே போகும்போது இன்னொரு கை, இன்னொரு கண் இருந்தால் தேவலையே என்று சில சமயம் தோன்றுகிறது. அந்தச் செயல் வெற்றிகரமாக முடியும்போது அதைச் செய்ய வேறொரு கை முளைத்து விட்டதாகக் கருதுகிறான்.
லோப்சாங் ரம்பா என்ற திபேத்திய லாமா(துறவி) அவரது மடாலயத்தில் சிறுவயதில் இளம் துறவிகளுக்கு மூன்றாவது கண் திறக்க நெற்றி நடுவே துளைபோடும் சடங்கு பற்றி விவரித்திருப்பார்!
சாக்பீஸ் என்பது ஆசிரியரின் ஆறாம் விரல்! அது நமது அறிவின் அடையாளம்! வெறும் சாக்பீஸ் அல்ல!
— தஞ்சாவூர்க் கவிராயர்






Comments are closed, but trackbacks and pingbacks are open.