’விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்’ பேனரில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்க, அருண் பிரபு டைரக்ஷனில் உருவாகியுள்ள படம் ‘சக்தித் திருமகன்’. செப்டம்பர்.05-ஆம் தேதி ரிலீஸ் ப்ளானில் இருந்ததால் இதுவரை இரண்டு புரமோ நிகழ்ச்சிகளை நடத்தினார் விஜய் ஆண்டனி. இப்போது செப்டம்பர்.19—ஆம் தேதிக்கு ரிலீஸ் தள்ளிப் போனதால், நேற்று முன் தினம் [ செப்.10] இரவு மூன்றாவது புரமோவை சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயம் அருகே உள்ள ‘ஹயாத் ரீஜென்ஸி’ ஓட்டலில் நடத்தினார் விஜய் ஆண்டனி. இது அவருக்கு 25-ஆவது படம் என்பதால், இதுவரை அவரை வைத்து டைரக்ட் பண்ணியவர்கள், தயாரிப்பாளர்கள், இனிமேல் வரிசையாக எடுக்கப் போகும் படங்களின் தயாரிப்பாளர்கள், அதில் நடிக்கப் போகும் நடிகர்-நடிகைகள் என பெரிய கூட்டமே ஹயாத்தில் நிரம்பி வழிந்தது.
நிகழ்ச்சியில் படத்தின் டிரெய்லர், பாடல்கள் திரையிடப்பட்ட பின் முதலாவதாக பேச வந்தார் நடிகரும் த.வெ.க.தலைவருமான விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர். “சுக்ரன் படத்தில் எனது கணவர் தான் செந்தில் ராஜாவை விஜய் ஆண்டனியாக்கி மியூசிக் டைரக்டராக அறிமுகப்படுத்தினார். அப்போதிலிருந்து எனது குடும்பத்தில் ஒருவரான விஜய் ஆண்டனியின் தற்போதைய வளர்ச்சி மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.
விஜய் ஆண்டனியின் டைரக்டர்கள், ‘சக்தித் திருமகன்’ ஹீரோயின் ஷெல்லி காலிஸ்ட், மற்ற படங்களின் நடிகர்-நடிகைகள் என இருபத்தைந்துக்கும் மேற்பட்டவர்கள் விஜய் ஆண்டனியின் தொழில்பக்தி குறித்தும் புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பளிப்பது குறித்தும் பெருமிதமாக பேசினார்கள்.

தயாரிப்பாளர்கள் தனஞ்செயனும் சித்ரா லட்சுமணனும் மேடை ஏறினார்கள். இதில் சித்ரா லட்சுமணன் சுருக்கமாக பேசி முடித்து மைக்கை தனஞ்செயனிடம் கொடுத்தார்.

“தமிழ் சினிமாவில் விஜய் ஒரு பெரிய ஹீரோ மட்டுமல்ல, இண்டஸ்ட்ரியும் கூட. அவருக்கு அடுத்து இப்போது விஜய் ஆண்டனி தான் இண்டஸ்ட்ரியாகவே இருக்கிறார். வெற்றிக்கான சூட்சுமங்கள் அத்தனையும் அவருக்கு அத்துபடி. விஜய் ஆண்டனியால பல தயாரிப்பாளர்கள், புதிய டைரக்டர்கள் உருவாக முடியும். இந்த சினிமா இண்டஸ்ட்ரியும் வளர்ச்சி அடையும்” என்றார் தனஞ்செயன்.

டைரக்டர் அருண் பிரபு, “இது மக்கள் சார்ந்த அரசியல் படம். நீங்கள் எந்த மாதிரியான எதிர்பார்ப்பில் வந்தாலும் அதை பூர்த்தி செய்யும்”
இறுதியாக விஜய் ஆண்டனி பேசும் போது, “இந்தப் படத்தை எனது நண்பர்கள் சிலருக்கு போட்டுக்காட்டி, இதில் ஏதாவது குறியீடு வைத்திருக்கிறாரா டைரக்டர்?னு கேட்டேன். எதுவும் இல்லை என்றார்கள். எது வந்தாலும் சமாளித்துக் கொள்ளலாம், எந்தக் கட்சியைப் பற்றி சொல்லியிருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என அவர்களிடம் சொன்னேன். இன்னும் இன்னும் புதிய டைரக்டர்கள், கலைஞர்களுக்கு வாய்ப்புகளைத் தரவேண்டும் என்பதற்காக விஜய் ஆண்டனி பிலிம் காப்பரேஷனை 2027 முதல் பப்ளிக் லிமிடெட் கம்பெனியாக மாற்றப் போகிறேன். இப்போது இந்த ‘சக்தித் திருமகன்’-க்கு உங்களின் மேலான ஆதரவை வேண்டுகிறேன்” என கச்சிதமாக முடித்தார்.
நிகழ்ச்சியை மிகவும் சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தார் பி.ஆர்.ஓ.ரேகா.
— ஜெடிஆர்
Comments are closed, but trackbacks and pingbacks are open.