தமிழ்த்தாய் வாழ்த்து மரபு மீறல் – பொதுப்பள்ளிகளுக்கான மாநில மேடை கண்டனம்
10.05.2026 அன்று நடைபெற்ற தமிழ்நாடு அரசு அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வில், தமிழ்நாடு மாநிலத்தின் தனித்துவத்தை தொலைத்தது மிகவும் வேதனைக்குரியது!
தமிழ்நாடு அரசு பின்பற்றி வந்த தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் பாடப்படும் மரபை மாற்ற அனுமதிக்க இயலாது!
இந்திய ஒன்றியத்தில் உள்ள மாநிலங்களில் தனக்கென தனித்துவமான மரபை பின்பற்றி, இந்திய ஒருமைப்பாட்டிற்கு வலுசேர்த்து வரும் மாநிலம் தமிழ்நாடு.
ஆண்டுதோறும் வசூலிக்கப்படும் இராணுவ வீரர் நலனுக்கான கொடி நாள் வசூல் தொடங்கி, நாட்டின் இறையாண்மைக்கும், பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற்படும் காலங்களிலெல்லாம், அத்தகைய சவால்களை எதிர்கொள்ள அனைத்து வகையிலும் தனது பங்களிப்பை முதலில் செலுத்தும் மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது. இந்தியாவின் பிற மாநிலத்தில் பிறந்து தமிழ்நாடு மாநிலத்திற்கு வரும் மாணவர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவரையும் இந்தியரென அரவணைத்து அவர்களின் முன்னேற்றத்திற்கு அனைத்து வாய்ப்புகளையும் வழங்கி வரும் மாநிலம் தமிழ்நாடு.
மொழிவாரியக நாம் தமிழர், தேசமாக நாம் இந்தியர்.
இந்திய மொழிகளில் நமது தாய் மொழியான தமிழ், பழம் பெரும் மொழி. தனித்துவமிக்க மொழி.
தமிழ்நாடு மாநில அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்குவது மரபு. காலம்காலமாக பின்பற்றப்படும் இந்த மரபை, சிலர் பின்பற்ற தவறியதைத் தொடர்ந்து, இத்தகைய நடைமுறையை அரசு நிகழ்வுகளில் பின்பற்ற வேண்டும் என்பதை அரசு தனது ஆணை மூலம் அறிவித்தது.
தமிழ்நாடு அரசு பொது(பொது -1)த் துறை அரசாணை (நிலை) எண் 1037 நாள் 17.12.2021 என்ற அரசாணை காலம்காலமாக பின்பற்றப்படும் மரபு தொடர்வதை உறுதிசெய்யவே பிறப்பிக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு நிகழ்வுகள் அனைத்தும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி ‘ஜன கண மன’ என தொடங்கும் தேசியக் கீதம் இசைத்து நிறைவு பெறுவது வழக்கம்.
தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து, நிறைவாக தேசியக் கீதம் எனும் மரபு அறிவியல் பூர்வமான அரசு நடைமுறை. இந்திய தேசியத்தின் பிரிக்க முடியாத அங்கமாக தமிழ்நாடு விளங்குவதன் வெளிப்பாடு.
மூன்று திசைகளில் நீராலும், ஒரு திசையில் நிலத்தாலும் சூழப்பட்ட இந்திய நில அமைப்பை குறிப்பிட்டு, அத்தகைய சிறப்பைப் பெற்ற இந்திய நாட்டின் பெருமைமிகு மாநிலத்தின் தாயாகவும், உலகில் அனைவரும் இன்புற்று இருக்க விரும்பும் பண்புகளை உணர்த்தும் மொழியாகவும் திகழும் தமிழன்னையை வாழ்த்துகிறோம் என்பதே தமிழ்த்தாய் வாழ்த்து வெளிப்படுத்தும் செய்தி.
மொழிப் பற்றையும் நாட்டுப் பற்றையும் ஒருசேர வெளிப்படுத்துவதே தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்குரியத் தனிச் சிறப்பாகும்.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் தமிழ்நாடு அரசு நிகழ்வுகள் தொடங்கும், ‘ஜன கண மன’ என தொடங்கும் தேசியக் கீதத்துடன் நிகழ்வுகள் நிறைவுறும்.
வாதத்திற்காக, தேசியக் கீதத்திற்கு இணையாக வந்தே மாதரம் பாடல் மதிக்கப்பட வேண்டும் என்று ஒன்றிய அரசு ஆணை பிறப்பித்துள்ளது என்று கூறுப்படுமேயானல், தமிழ்நாடு அரசு பின்பற்றி வரும் மரபுப்படியும், தமிழ்நாடு அரசு ஆணையின் படியும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் முதலிலும், நிறைவாக தேசியக் கீதம் அதன் தொடர்ச்சியாக வந்தே மாதரம் என்கிற வகையில் அரசின் நிகழ்வு திட்டமிடப்பட்டிருக்க வேண்டும்.
10.05.2026 அன்று முற்பகல் சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு அமைச்சரவைப் பதிவியேற்பு நிகழ்வில் தமிழ்நாடு அரசு இதுவரை பின்பற்றி வந்த மரபும், அரசாணையும் மீறப்பட்ட நிகழ்வு, தமிழ்நாடு மாநிலத்திற்கும் தமிழ் மொழிக்கும் இழைக்கப்பட்ட பெரும் அநீதி.
தமிழ்நாடு அரசு பொது(பொது -1)த் துறை அரசாணை (நிலை) எண் 1037 நாள் 17.12.2021 தமிழ்நாடு அரசால் மீறப்பட்டுள்ளது. அரசு பிறப்பித்த ஆணையை அரசே மீறிய செயல் சட்டத்தின் ஆட்சி என்ற கோட்பாட்டிற்கு நேரெதிரானது, கண்டனத்திற்குரியது.
‘வந்தே மாதரம்’ பாடல் குறித்த வழக்கில் ‘எந்த கட்டாயமும் இல்லை, யாராவது பாதிக்கப்பட்டால் நீதிமன்றத்தை அணுகலாம்’ என்று உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டிருந்தது.
வந்தே மாத்திரம் பாடல் சிலரின் நம்பிக்கையை நாடாக உருவகப்படுத்துகிறது. ‘இந்தியா எனும் பாரதம்’ என்ற இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பெயர் வரையறையின் அடிப்படையில் வந்தே மாதரம் பாடலில் இந்திய நாடு குறிப்பிடப்படவில்லை. அதனால்தான், இந்திய நாட்டின் புவியமைப்பை வெளிப்படுத்தும் அந்த பாடலின் சில வரிகளை மட்டுமே தேசியப் பாடலாக ஏற்கலாம் என்று வங்கத்தின் இரவீந்திரநாத் தாகூர் முதல் குஜராத்தின் சர்தார் வல்லபாய் படேல் வரை கூறியிருந்தார்கள். டாக்டர் இராஜேந்திர பிரசாத் அவர்கள் முன்மொழிந்து, சர்தார் வல்லபாய் படேல் அவர்களால் வழிமொழியப்பட்டது வந்தே மாதரம் பாடலின் முதல் சில வரிகள் மட்டுமே.
மொழி மற்றும் பழக்கவழக்கங்களால் பன்மைத்துவம் கொண்ட நாடாக இந்தியாவை பார்க்காமல், சிலரின் நம்பிக்கையின் வடிவமாக இந்தியாவை பார்க்கும் வரிகள் இந்தியாவின் தேசியப் பாடலாக எவ்வாறு ஏற்க இயலும் என்பதே இந்த பாடல் மீது வைக்கப்படும் விமர்சனம்.
இத்தகைய விவாதம் ஒரு புறம் இருக்க, தமிழ்நாடு அரசு ஆணையையும் மரபையும் பின்பற்றி தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுடன் தமிழ்நாடு அரசு அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வு தொடங்காமல், வந்தே மாதரம் பாடல் வரிகள் முழுமையாக பாடப் பெற்று, அதன் பின்னர் தேசியக் கீதம், அதன் பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் என்று அமைந்திருந்தது தமிழர்களின் மொழி உணர்வை பாதிக்கும் செயல் மட்டுமல்ல, “வேற்றுமையில் ஒற்றுமை” எனும் இந்திய கோட்பாட்டை சிதைக்கும் செயலாகும்.
“செப்பு மொழி பதினெட்டு உடையாள் எனிற்
சிந்தனை ஒன்றுடையாள்”
என்ற மகாகவி சுப்பிரமணிய பாரதியார்,
“தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்”
என்ற பாவேந்தர் பாரதிதாசனார்,
“புதுமைக் கண்டு வாழ இன்று
போர் செயுந் தமிழ்நாடு – மறப்
போர் செயுந் தமிழ்நாடு – மிக
முதுமை கொண்ட மடமை வீழ
மோதிடும் தமிழ்நாடு”
என்று முழக்கமிட்ட கவிஞர் தமிழ்ஒளி
ஆகியோர் வழியில் நின்று தமிழுக்கு இழைக்கப்பட்டுள்ள இந்த அநீதியை கண்டிக்க தமிழர்கள் குரலெப்ப வேண்டும்.

‘மதராஸ்’ என்று அழைக்கப்பட்ட இந்த மாநிலத்தின் பெயரை தமிழ்நாடு என்று அறிவிக்க வேண்டும் என்று கோரி நடந்த போராட்டத்தின் உச்சமாக, தமிழ்நாடு பெயர் சூட்ட வலியுறுத்தி தியாகி சங்கரலிங்கனார் உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொண்டு தனது உயிரை இழந்தார்.
இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திற்கும் அந்த மாநிலத்தின் பெயருக்கு போராடி ஒருவர் உயிர் துறந்த வரலாறு கிடையாது. தமிழ்நாடு மாநிலத்திற்கு மட்டுமே அந்த வரலாறு உண்டு.
தமிழர், தங்களின் உயிரென கருதும் தமிழ்நாடு மாநிலத்தின் பெயருக்கும், தமிழ் மொழிக்கும் அநீதி இழைக்கப்பட்டால், தாயே தடுத்தாலும் பொறுத்திருக்க இயலாது எனும் பாவேந்தர் பாரதிதாசனார் வரிகளுக்கிணங்க தமிழ் மொழி, தமிழ்நாடு மாநிலப் பெயர், தமிழ்நாடு அரசு இது வரை பின்பற்றி வந்த தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடும் மரபு ஆகியவற்றைக் காக்க தமிழ்நாடு ஒன்றிணைந்து போராடும்.
தமிழ்நாடு அரசு தனது தவறுக்கு வருத்தம் தெரிவிப்பதோடு, இனி வரும் காலங்களில் அனைத்து தமிழ்நாடு அரசு விழாக்களிலும், இதுவரை பின்பற்றி வந்த மரபுப்படி தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையே முதலில் பாட வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோருகிறது.
அனைத்து தமிழ் இயக்கங்களும் இணைந்து வலுவுடன் இக்கோரிக்கையை தமிழ்நாடு அரசின் முன் வைக்க வேண்டும்.
தமிழ் அறிஞர்கள், பேராசிரியர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் உள்ளிட்ட அனைவரும் தமிழர்களின் ஒருமித்த குரலாக தமிழ்த் தாய் வாழ்த்துப்பாடலே தமிழ்நாடு அரசு நிகழ்வுகளின் தொடக்கத்தில் பாடப்பட வேண்டும் எனும் கோரிக்கையை வலியுறுத்த வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோருகிறது.
பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு
பொதுச் செயலாளர்,
பொதுப் பள்ளிக்கான மாநில மேடை








Comments are closed, but trackbacks and pingbacks are open.