அரசுப்பள்ளி மாணவி ஒருவரை பார்த்து, அமைச்சர் கீர்த்தனா எழுப்பிய அந்த ஒற்றைக்கேள்வி தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. இன்ஸ்டா ரீல்ஸ் இன்ப்ளூயன்சில்தான் த.வெ.க. ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தது என்பதாக, ஒரு சர்ச்சை வலம் வரும் நிலையில்தான் த.வெ.க. தொண்டர்கள் தமிழகம் முழுவதும் செல்ஃபியும் கையுமாக ஆய்வுக்கு அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
அரசு மருத்துவமனைகளும், அரசுப்பள்ளிகளும்தான் இவர்களின் எளிய இலக்காக அமைந்திருக்கிறது. பள்ளி மாணவர்கள் பீஸ்ட் பட பாடலை பாடுகிறார்கள். விஜய் மாமா வாழ்க என்று கோஷம் போடுகிறார்கள். அதை ரீல்ஸ் எடுத்து வைரலாக்குகிறார்கள்.
காஞ்சிபுரம் உத்தரமேரூர் ஒன்றியம் தளவாரம்பூண்டி ஊராட்சியில் அரசுப்பள்ளி சுவற்றில் மாட்டப்பட்டிருந்த முதல்வர் விஜய் படத்தை காட்டி, இவர் யார் என்று தெரிகிறதா? என்று கேள்வி கேட்கிறார், த.வெ.க. ஒன்றிய செயலாளர் ராஜேஷ்.
விருதுநகர் மாவட்டம் செங்குன்றாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமுக்குள் செல்போன் கையுமாக நுழைகிறார் ஒன்றிய செயலாளர் முத்துவேல். ஆய்வு செய்வது போல தெறிக்கும் சினிமா வரிகளோடு ரீல்ஸ் ரிலீஸ் ஆகிறது.
இப்படி, மாற்றி மாற்றி ஒவ்வொரு கட்சிக்காரனும் ரீல்ஸ் எடுத்து போட்டுக்கிட்டே இருந்தா? நாங்க எப்படித்தான் மருத்துவம் பார்க்கிறது?னு கொந்தளித்த, திருச்சி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை மருத்துவர்களும் செவிலியர்களும் தெருவில் இறங்கிப் போராடும் நிலைக்கு கொண்டு வந்திருக்கிறது, இந்த ரீல்ஸ் விவகாரம்.
“தேவையில்லாமல் அரசு அலுவலகங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொள்ளக்கூடாது என்று முதல்வர் அலுவலகத்தில் இருந்து சொல்லப்பட்டதாக” பத்திரிகைகளுக்கு பேட்டியளிக்கிறார் அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார். மேலும், சர்ச்சையில் சிக்கிய த.வெ.க. நிர்வாகிகள் சிலரை கட்சியிலிருந்தே நீக்கியிருக்கிறோம். யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்கிறார், அவர்.
அதெல்லாம் சரி, அமைச்சர் கீர்த்தனா விவகாரத்துக்கு வருவோம். தொழில்துறையின் அமைச்சர், தொழிற்சாலைகளுக்கு சென்று ஆய்வு செய்வதை விட்டு அரசுப்பள்ளிக்கு சென்றது ஏன்? அமைச்சரின் சொந்த தொகுதியில் உள்ள பள்ளி என்பதால் சென்றார் என்றே எடுத்துக்கொள்வோம். ஆய்வுக்கு சென்றதன் நோக்கம் என்ன? எதனை ஆய்வு செய்ய சென்றார்? பள்ளியின் கட்டமைப்புகள், மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், போதுமான ஆசிரியர்கள் இருக்கிறார்களா? என்பதையெல்லாம் ஆய்வு செய்ததற்காக சென்றாரா? இல்லை, அரசுப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் ஆங்கில மொழி அறிவுத்திறன் எந்த இலட்சணத்தில் இருக்கிறது என்பதை வெளிஉலகிற்கு காட்டுவதற்காக சென்றாரா?
அரசுப்பள்ளி ஆசிரியர்களிடத்திலும், மாணவிகளிடமும் அமைச்சராக கீர்த்தனா நடத்திய அந்த உரையாடலை முழுமையாக கேட்டவர்களுக்கு ஒரு விசயம் நிச்சயம் புரிந்திருக்கும். அரசுப்பள்ளியில் ஆங்கிலம் ஒழுங்காக சொல்லித்தரப்படுவதில்லை; அல்லது, அரசுப்பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்தில் தடுமாறுகிறவர்களாகத்தான் இருப்பார்கள் என்ற முன்முடிவிலிருந்துதான் அந்த உரையாடலையே அவர் தொடங்கினார், தொடர்ந்தும் நடத்தினார் என்ற உண்மை புரியும்.
இரண்டு ஆங்கில வார்த்தைகளை சொல்லி அதன் அர்த்தம் என்ன என்று கேட்டபோது, அந்த பள்ளி வளாகம் அதிர கம்பீரமாக சொன்ன அதே மாணவியால் அமைச்சரின் அடுத்த கேள்விக்கு சட்டென்று பதிலளிக்க முடியவில்லை. நம்மை கேள்வி கேட்பது அமைச்சர் என்ற பதட்டம்கூட காரணமாக இருந்திருக்கலாம். அல்லது, உள்ளபடியே அந்தக் கேள்விக்கான அர்த்தம்கூட தெரியாமல் இருந்திருக்கலாம். அமைச்சரின் கேள்வியை சற்று எளிமைபடுத்தி ஆசிரியர் எடுத்து சொன்ன பிறகு, அர்த்தம் புரிந்து பதிலும் அளிக்கிறார், அந்த மாணவி. அப்போதும்விடாத, அமைச்சர் ”இதே கேள்வியை லாஸ்ட் பெஞ்ச் ஸ்டூடண்ட்ஸ்கிட்ட கேட்டா தெரியாது” என்பதாக மெல்ல சிரித்துக்கொண்டே கடந்து போகிறார். இந்த உரையாடல்கள் அமைச்சரின் நோக்கத்தை போதுமான அளவுக்கு அம்பலமாக்கிவிடுகின்றன.
சரி, விசயத்துக்கு வருவோம். அந்த அரசுப்பள்ளி மாணவியிடம் அமைச்சர் எழுப்பிய அந்த ஒற்றை கேள்வி என்ன தெரியுமா?
”வாட் ஈஸ் யுவர் ஃபாதர்?”
”வாட் ஈஸ் யுவர் நேம்” என்பது போன்ற எளிமையான கேள்விகளுள் ஒன்று அல்ல; அமைச்சர் எழுப்பிய அந்தக் கேள்வி. அரசுப்பள்ளிகள் என்றில்லை, நாட்டின் ஏன் உலகின் எந்த மூலையிலும் எந்த பள்ளி ஒன்றிலும் மாணவர்களிடத்தில் கேட்டிரக்கூடாத கேள்வி அது. அந்த ஒற்றைக்கேள்விக்கான விடை அவ்வளவு எளிதானது அல்ல. துயரங்களும் சோகங்களும், ஏக்கங்களும், எண்ணிலடங்கா வலிகளும் கொண்டதாகக்கூட இருக்கலாம்.
அதுவும் பட்டாசு தொழிலுக்கு பெயர்போன சிவகாசியிலிருந்து இப்படி ஒரு கேள்வியை கேட்கும் துணிச்சல் அமைச்சருக்கு எப்படி வந்தது என்பது வியப்பில் ஆழ்த்துகிறது. ஒற்றைப் பெற்றோர்களை மட்டுமே கொண்ட மாணவர்கள் கணிசமானவர்கள் நிறைந்ததுதான் அரசுப்பள்ளிகள் என்ற உண்மை அமைச்சருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பட்டாசு தொழிலுக்கு பெயர்போன சிவகாசியில், அடிக்கடி நிகழும் பட்டாசு ஆலை விபத்துகளில் சிக்கி உயிரிழந்த அப்பாவி தந்தைகளின் பிள்ளைகள் படிப்பதும் இதுபோன்ற ஏதேனும் ஒரு அரசுப்பள்ளியாகத்தான் இருக்கும் என்ற யதார்த்தம் அவருக்கு புரிந்திருக்க வாய்ப்பில்லை.
இதெல்லாம் புரிந்திருந்தால், ஒன்று அந்தக் கேள்வியை அந்த பிஞ்சு மாணவியிடம் கேட்டிருக்க மாட்டார். அல்லது, இப்படி ஒரு நிகழ்வை ஊடகங்கள் கவரேஜ் செய்வதை அனுமதித்திருக்க மாட்டார். திருவள்ளூர் அம்மோனியா ஆலையில் வாயு கசிந்து அப்பாவி தொழிலாளிகள் மாண்ட துயரத்துக்கு ஆய்வு இல்லை. ஆறுதல் சொல்ல அமைச்சர் செல்லவில்லை. தொழில்துறை அமைச்சராக தன் பணியை செய்யத்தவறிய அமைச்சர்தான், பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக மாறி, ஆய்வுக்கு செல்கிறார். இதை யார் கேள்வி கேட்பது?
— அங்குசம் சிறப்பு செய்திக்குழு.







Comments are closed, but trackbacks and pingbacks are open.