பன்முகத் திறன் கொண்ட முத்தமிழறிஞர் கலைஞர், திரைப்படப் பாடல்களிலும் தன் திறமையை சிறப்பாக வெளிப்படுத்தியவர். தமிழ்த் திரை இசையின் முன்னோடிகளில் ஒருவரான ஜி.ராமநாதனில் தொடங்கி ஆஸ்கார் புகழ் ஏ.ஆர்.ரஹ்மான் வரை பல இசை அமைப்பாளர்களுடன் கலைஞர் பயணித்திருக்கிறார். முழு நேர பாடலாசிரியர்கள் பலருக்கே இந்த வாய்ப்பு அமைந்ததில்லை.
கலைஞரின் படைப்பாற்றலில் உருவான பாலைவன ரோஜாக்கள், பாசப்பறவைகள், புயல் பாடும் பாட்டு, பாடாத தேனீக்கள், தென்றல் சுடும் போன்ற படங்களுக்கு இளையராஜா இசை அமைத்திருக்கிறார். வைரமுத்து, வாலி, கங்கைஅமரன், புலமைப்பித்தன் உள்ளிட்ட பல பாடலாசிரியர்கள் பாடல்களை எழுதியுள்ளனர். கலைஞர் எழுதி, இளையராஜா இசையமைத்துப பாடிய இரண்டு பாடல்கள் குறிப்பிடத்தக்கவை.
‘காவலுக்கு கெட்டிக்காரன்’ படத்தின் முதல் பாடலை (டைட்டில் சாங்) கலைஞர் எழுத இளையராஜா இசையமைத்து பாடியிருப்பார்.
காவலுக்கு கெட்டிக்காரன்.. இந்த காக்கி சட்டைக்காரன்..
தஞ்சாவூரு ஜில்லாகாரன்.. அவன் அஞ்சா நெஞ்சம் படைச்ச வீரன்..
-என்ற பல்லவியுடன் தொடங்கும் பாடலில்,
சொன்னதை செய்வோம் என்பான்-அப்படி
செஞ்சதையே சொல்வோம் என்பான்
– என்ற வரிகள் சரணத்தில் இடம்பெற்றிருக்கும்.
காவலுக்கு கெட்டிக்காரன் 1990ஆம் ஆண்டு பொங்கல் நாளில் வெளியானது. அப்போது கலைஞர் முதலமைச்சராக இருந்தார். 1989 தேர்தலில் தி.மு.க. அளித்த வாக்குறுதிகளான பெண்களுக்கு சொத்துரிமை, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், சத்துணவில் முட்டை உள்ளிட்ட பலவும் நிறைவேற்றப்பட்டிருந்தன. “சொன்னதைச் செய்வோம்-செய்வதைச் சொல்வோம்” என்பதை அந்தத் தேர்தல் களத்தில்தான் கலைஞர் முன்னெடுத்தார். அதைத் திரைப்படப் பாடல் வரிகளிலும் இடம்பெறச் செய்தார்.
இசைஞானி இளையராஜா இசையில் கலைஞரின் ‘தென்பாண்டிச் சிங்கம்’ கதையை கவிஞர் இளையபாரதி, 1996ல் தொலைக்காட்சித் தொடராக இயக்கினார். அந்தத் தொடரில் இடம்பெற்ற பாடலையும் கலைஞர் எழுத, இளையராஜா இசையமைத்துப் பாடினார். ராஜாவின் குரலும், போர்க்களத்து உணர்வைத் தூண்டும் பின்னணி இசையும் அதிர வைக்கும்.
தென்பாண்டி சிங்கமடா.. தேன் தமிழ்ப்பாடும் தங்கமடா..
வரிப்புலியின் வர்க்கமடா.. அந்த வறியோரின் சொந்தமடா
-என்று அந்தப் பாடல் ஒலிக்கும்.
பிரிட்டிஷாரை எதிர்த்துப் போரிட்ட மருதுசகோதரர்கள், வேலு நாச்சியார் ஆகியோருக்கு உதவியாக இருந்த பாகநேரி நாட்டுத் தலைவர் வாளுக்கு வேலி என்ற வீரரை மையமாகக் கொண்டது தென்பாண்டி சிங்கம் என்கிற புதினம். கதையை எழுதிய கலைஞரே, தொடருக்கு ஏற்றபடி தலைப்புப் பாடலையும் எழுதியிருந்தார்.
இருநூறு வருசம் முன்னே
இனமானம் காத்தவன்டா..
வெள்ளை இருட்டை வெளியே
விரட்டி அடிச்சவன்டா..
-என்ற வரிகளில் கலைஞரின் கற்பனைத் திறனும் கவிதையாற்றலும் வெளிப்பட்டன.
இருட்டு கருப்பாக இருக்கும். அதை விரட்டினால் விடியல் வெளிச்சம் கிடைக்கும். ஆனால், ஆள்பவர்களே வெள்ளைக்காரர்களாக இருந்ததால், ‘வெள்ளை இருட்டு‘ என்ற சொல்லைக் கச்சிதமாகப் பயன்படுத்தியிருப்பார்.
வானத்தைக் கிழித்து வைகுண்டத்தைக் காட்டுவது என்பது வைதீக சொல்லாடல். கலைஞர் இந்தப் பாடலில், ‘வானத்தைக் கீறி உனக்கு வைகறையை பரிசளிப்பான்’ என்று இயற்கைத் தன்மையுடன் எழுதியிருப்பார்.
கலைஞருக்கும் இளையராஜாவுக்குமான ‘கெமிஸ்ட்ரி’ இந்த இரண்டு பாடல்களிலும் செம்மையாக இருக்கும். இளையராஜாவுக்கு இசைஞானி என்ற பட்டத்தை வழங்கியவர் கலைஞர் என்பதும், கலைஞருக்காக தன் பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஒரு நாள் முன்னதாக வைத்துக் கொண்டவர் இளையராஜா என்பதும் ஊரறிந்த ரகசியம்.
ஜூன் 2 இசைஞானி இளையராஜா பிறந்தநாள்.
தொடரும்.
கோவி.லெனின், மூத்த பத்திரிகையாளர்.






Comments are closed, but trackbacks and pingbacks are open.