அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

கானல் நீராகிப் போனதா? கலைஞரின் கனவு இல்லம் திட்டம் !

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

”இதோ வந்துவிடும்… அதோ வந்துவிடும்…” என்று ஓவர்சீயர்கள் என்றழைக்கப்படும் மேற்பார்வை அதிகாரிகளின் பேச்சை நம்பி கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீட்டைக் கட்டிய ஒரு இலட்சம் பேர் கடனிலும் மன உளைச்சலிலும் தத்தளித்து வருகிறார்கள் என்ற செய்தி பேரதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
தமிழகத்தில் வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்கும் விதமாகவும் குடிசைகள் இல்லா தமிழகத்தை உருவாக்கும் விதமாகவும் கடந்த 2010 ஆம் ஆண்டு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் கலைஞர் வீடு வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
இத்திட்டத்தின் மூலம் குடிசை வீடுகளில் வசிப்பவர்களுக்கும், மிகவும் பின்தங்கிய ஏழை வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்கள் 360 சதுர அடியில் பயனாளியே வீட்டைக் கட்டிக்கொள்ளலாம். இதற்காக அரசு 140 மூட்டை சிமெண்டும் 320 கிலோ கம்பிகளும் வழங்கும். அஸ்திவாரம் போடுவதில் தொடங்கி இறுதிகட்ட பணியை முடிப்பது வரையிலான பணிகளை நான்கு கட்டங்களாக பிரித்து, நான்கு தவணைகளில் மானியத்தொகை ரூ3.50 இலட்சம் ரூபாயை அரசு விடுவிக்கும். இப்பணிகளை மேற்பார்வையிடுவது ஓவர்சீயர்கள் என்றழைக்கப்படும் மேற்பார்வை அதிகாரிகள்.
இதன்படி, தமிழகத்தில் 2021 – 2026 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் மூன்று இலட்சம் வீடுகள் வழங்கப்பட்டன. அதில், 2024 – 25ம் நிதி ஆண்டில் ஒரு லட்சம் வீடுகள் வழங்கப்பட்டு பயனாளர்களுக்கு 4 வீதங்களாக பணமும் வழங்கப்பட்டது. அதேபோல், 2025 – 26ம் ஆண்டில் ஒரு லட்சம் வீடுகளும் வழங்கப்பட்டது. பின்னர் அதன் தொடர்ச்சியாக ஜனவரி மாதம் 2025 – 26 ஆம் ஆண்டுக்கான நிதியாண்டில் மேலும் ஒரு இலட்சம் வீடுகளுக்கு பணி ஆணை வழங்கப்பட்டன. இங்கேதான் சிக்கல்.
ஊராட்சி அமைப்பின் சார்பில் வழங்கப்பட்ட, பணி ஆணையை வைத்து கைக்காசைப் போட்டு வீடு கட்டத் தொடங்கிவிட்டார்கள் பயனாளிகள். ஆனால், இடையில் தேர்தல் குறுக்கிடவே பயனாளிகளுக்கு திட்டத்தின்படி ஒவ்வொரு கட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு முற்றிலும் நிறுத்தப்பட்டது. தேர்தல் முடிந்து புதிய அரசு பொறுப்பேற்றதும் எப்படியும் போட்டுவிடுவார்கள் என்று ஓவர்சீயர்கள் சொன்னதை நம்பி பலரும் வட்டிக்கு பணம் வாங்கி வீட்டைக் கட்டி முடித்துவிட்டார்கள்.
சிக்கலில் சிக்கித்தவிக்கும் ஒரு இலட்சம் வீடுகளில் பெரும்பாலான வீடுகள் கட்டி முடிக்கப்பட்டிருக்கின்றன. சில வீடுகள் மூன்றாவது நிலையிலும், இன்னும் சில வீடுகள் இரண்டாம் கட்ட நிலையில் அப்படியே நிற்கின்றன. முழுமையாக வீட்டைக் கட்டியவர்கள் வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாத நெருக்கடியில் இருக்கிறார்கள். பாதி வீட்டைக் கட்டியவர்களின் நிலை இன்னும் பரிதாபம். வாங்கிய கடனுக்கு வட்டியும் கட்டியாக வேண்டும். இதுவரை கட்டியதோடு கைவிடுவதா? மிச்ச பணிகளையும் முடிக்க மேலும் வட்டிக்கு பணம் வாங்குவதா? என்ற குழப்பத்துக்கும் மன உளைச்சலுக்கும் ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். ஆட்சி மாறி ஒரு மாதம் நெருங்கும் நிலையில் இதுவரையில் நிதி ஒதுக்கீடு குறித்த எந்த தகவலும் இல்லை. முந்தைய அரசின் திட்டம் என்பதால், கைவிடப்பட்டதாகவே சொல்கிறார்கள்.
ஜெயலலிதா முதல்வராக ஆட்சி செய்தபோது பசுமை வீடு என்று இருந்தது. ஸ்டாலின் ஆட்சியில் இது கலைஞர் கனவு இல்லம் என நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆட்சி மாறினாலும் திட்டத்தின் பெயர்களைத்தான் மாற்றினார்களே தவிர, கட்டிய வீட்டிற்கான நிதியை நிறுத்திவிடவில்லை. ஆனால், இந்தமுறை அப்படியே கைவிடப்பட்டிருப்பதுதான் சோகம்.
இரண்டும் கெட்டான் நிலை என்பார்களே, அதுபோல பழையபடி குடிசை வீட்டுக்கும் போக முடியாது. கட்டிய வீட்டையும் அப்படியே விடவும் முடியாது. வாங்கிய கடனுக்கு வட்டி கட்டுவதிலிருந்தும் தப்ப முடியாது. பரிதவிக்கும் ஒரு இலட்சம் பயனாளிகளுக்கும் ஒரு தெளிவான முடிவை வழங்குமா, த.வெ.க. அரசு?

2026 June 11 - 17 Angusam Book

—   பாரத் மற்றும் தஞ்சை க.நடராசன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.