அங்குசம் பார்வையில் ‘கான்சிட்டி’
தயாரிப்பு & டைரக்ஷன் : ‘பவர் ஹவுஸ் பிக்சர்ஸ்’ ஹரிஷ் துரைராஜ். இணைத் தயாரிப்பு : ‘மால்வி & மான்வி மூவி மேக்கர்ஸ்”, ‘கிளவுட் ஸ்டுடியோஸ்’. ஆர்ட்டிஸ்ட் : அர்ஜுன் தாஸ், அன்னா பென், யோகிபாபு, வடிவுக்கரசி, ராதாரவி, விடிவி கணேஷ், அருள்தாஸ், மாஸ்டர் அகிலன், பொன்வண்ணன், இமான் அண்ணாச்சி, தம்பி ராமையா, மதன், மதுசூதன்ராவ், கல்கி. ஒளிப்பதிவு : அரவிந்த் விஸ்வநாதன், இசை : ஷான் ரோல்டன், எடிட்டிங் : அருள் மோசஸ், பி.ஆர்.ஓ : யுவராஜ்.
சென்னை மங்களபுரம் ஏரியா மின்வாரிய அலுவலகத்தில் வேலை பார்க்கிறார் அர்ஜுன் தாஸ். தனியார் வங்கி ஒன்றில் கடன் வாங்கி அம்மா கட்டிய வீட்டிற்காக இப்போதும் தவணை கட்ட போராடுகிறார். இதனால் பொதுமக்கள் கட்டும் கரண்ட் பில் தொகையில் கைவைக்கிறார். அந்தப் பணத்தை அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு ஒரு கம்பெனியில் போடுகிறார், வட்டி குவிகிறது. இதனால் மேலும் பணம் போடுகிறார். தனது நண்பனுக்கு 10 கோடி கடன் தருகிறார். வாங்கிய நண்பன் செத்துப் போகிறான்.
அதே மங்களபுரம். லீசுக்கு வீடு எடுத்து ஏமாற்றப்பட்டதால், அதே முறையில் மற்றவர்களை ஏமாற்றி லட்சக்கணக்கில் பணத்தை சுருட்டுகிறார் அன்னா பென். அதே மங்களபுரம். அம்மா வடிவுக்கரசியும் மகன் யோகிபாபுவும் இணைந்து டிரஸ்ட் பெயரில் லட்சக்கணக்கில் மக்கள் பணத்தை ஸ்வாகா பண்ணுகிறார்கள். இந்த மூன்று பேருமே அர்ஜுன் தாஸிடம் பணத்தைக் கொடுத்து ஏமாந்தவர்கள். ஒரு கட்டத்தில் சீட்டிங் பண்ணிய நால்வருமே போலீஸில் சிக்குகிறார்கள், அங்கிருந்து தப்பி மங்களூருக்குப் போய் ஓட்டல் நடத்துகிறார்கள்.
ஏழு வருடங்கள் கழித்து மீண்டும் சென்னை மங்களபுரம் வருகிறார்கள். தங்களை கைது பண்ணிய அப்போதை இன்ஸ்பெக்டரைச் சந்திக்கிறார்கள். இப்போது ரிடையர்டாகிவிட்ட இன்ஸ்பெக்டரோ, உங்களை தப்பிக்கவிட்டதே நான் தான். ஏன்னா எனக்கு நிறைய பணம் வேணும். அது உங்களால தான் முடியும் என சொல்லி மீண்டும் சீட்டிங் வேலை பண்ண வைக்கிறார். அதன் பிறகு அர்ஜுன் தாஸ் & கோவின் நிலை என்ன? இதான் ‘கான்சிட்டி’.
“நேர்மையா உழைச்சு சம்பாரிச்ச பணம் தான் நிலைக்கும், நிம்மதிய கொடுக்கும்” இந்த ஒரு வரி வசனத்தை இரண்டரை மணி நேரப்படத்தில் ஒரேயொரு இடத்தில் மட்டும் வைத்துவிட்டு, டிசைன் டிசைனாக சீட்டிங் ஆட்டத்தை வெளிப்படுத்தி மிரள வைக்கிறார் டைரக்டர் ஹரிஷ் யுவராஜ். “ஏமாறுகிறவன் இருக்கும் வரை ஏமாத்துருவன் ஜெயிச்சுக்கிட்டே இருப்பான்” இதவேற அடிக்கடி சொல்றாரு டைரக்டர்.
சீட்டிங் ஆட்டத்தை ஆரம்பித்த டைரக்டரால் அதை எப்படி முடிப்பதுன்னு தெரியாம கண்ணு முழி பிதுங்கி, நம்மையும் பிதுக்கியெடுத்துட்டார். உதாரணத்துக்கு ரிப்போர்ட்டர் மதன் வீட்டுக்குள் போவது, அமைச்சர் தம்பி ராமய்யாவை மடக்குவதெல்லாம் விழலுக்கு இரைத்த நீராகிவிட்டது. இதே சீட்டிங் கும்பல் மும்பையில் முகாமிடுவதாக க்ளைமாக்ஸ் வைத்து திகில் கிளப்பிவிட்டார்.
படத்தை ஓரளவு தூக்கிச் சுமப்பது அர்ஜுன் தாஸ் தான். பொன்வண்ணனின் மகளுடான காதல், கல்யாணம் வரை வந்து சீட்டிங்கில் போலீசில் சிக்கியதும் நின்று போகிறது. போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் அர்ஜுன் தாஸை கன்னத்தில் பளார்விட்டுக் கிளம்புகிறார் காதலி. இதனால் கூனிக்குறுகி அவமானத்தால் உறைந்து போகும் சீனிலும் மாஜி இன்ஸ்பெக்டருக்கு மங்களம் பாட, தண்ணீரில் இயங்கும் ஜெனரெட்டர் சீட்டிங், டூப்ளிகேட் டோல்கேட் சீட்டிங் ப்ளான் என ரவுண்ட் கட்டி அடிக்கிறார் அர்ஜுன் தாஸ்.
இன்னொருவனிடம் ஏமாந்து ஒரு ஆண் குழந்தைக்குத் தாயாக அன்னா பென். ஓரளவு சமாளித்திருக்கிறார். படத்தில் யோகிபாபு, விடிவி கணேஷ் இருந்தும் காமெடி ஏரியா ரொம்பவே ட்ரையாகிவிட்டது தான் இந்த கான்சிட்டியின் டிராஜெடி. ஒன்றிரண்டு சீன்களில் வடிவுக்கரசி காமெடி பண்ணியும் எடுபடவில்லை.
கதை வெவ்வேறு களங்களில் நடந்தாலும் ஒரே இடத்தில் நடப்பது போன்ற திரைக்கதை பலவீனத்தால் கான்சிட்டியில் முழுமையான கான்செண்ட்ரேஷனைச் செலுத்த முடியவில்லை.
அங்குசம் பார்வையில் ‘கான்சிட்டி’ 43/100
— ஆண்டவர்







Comments are closed, but trackbacks and pingbacks are open.