நியோமேக்ஸ் : தவிச்ச வாய்க்கு தண்ணீர் எப்போது? பரிதவிக்கும் முதலீட்டாளர்கள்!
நியோமேக்ஸ் | நீதிமன்றத்தில் நடந்தது என்ன ? பரிதவிக்கும் முதலீட்டாளர்கள் !
நியோமேக்ஸ் வழக்கில், ஜூன்-25 வியாழன் அன்று நடைபெற்ற நீதிமன்ற விசாரணையில் நடந்தது என்ன?
தற்போது நடைமுறையில் இருந்துவரும் இரண்டாம்கட்ட ஏலத்தில், 2.05.2026 முதல்30.05.2026 வரையிலான நாட்களில், 1680 பிளாட்டுகள் ஏலத்துக்காக பட்டியலிடப்பட்ட நிலையில், 360 பிளாட்டுகள் ஏலம் போயிருக்கிறது. இதன் மொத்த மதிப்பு ரூ.53,02,82,534.00 ஆகும். இதில் 65 பேர் தாங்கள் முதலீடு செய்த தொகையை காட்டிலும் கூடுதலான விலைக்கு ஏலம் எடுத்திருக்கிறார்கள். இதில், 2 பேர் குழு ஏல நடைமுறையைப் பின்பற்றி ஏலம் எடுத்திருக்கும் தகவலை நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்கள்.
01.06.2026 முதல் 11.06.2026 வரையிலான நாட்களில், 2255 பிளாட்டுகள் பட்டியலிடப்பட்டிருந்த நிலையில், 762 பிளாட்டுகள் ஏலம் போயிருக்கிறது. இதன் மதிப்பு 109,76,52,674.00 ஆகும். 343 பேர் கலந்து கொண்ட ஏலத்தில் இருவர் வெளிநபர்கள் பங்கேற்றிருக்கிறார்கள். 126 பேர் தங்களது முதலீட்டு தொகையைக் காட்டிலும் கூடுதலாக ஏலம் எடுத்திருக்கிறார்கள்.
இதுவரை ஏலத்தில் பங்கேற்று வெற்றிகரமாக தங்களுக்கான பிளாட்டுகளை உறுதிபடுத்தியவர்களில், 2976 பேர் ஏலத்தை நடத்தும் எம்.எஸ்.டி.சி. நிறுவனத்துக்கான சேவைக் கட்டணத்தை செலுத்தாமல் இருக்கிறார்கள் என்ற தகவல் தெரிவிக்கப்பட்டது. மீண்டும் ஒருமுறை அவர்களுக்கு நினைவூட்டல் மின்னஞ்சல் அனுப்பி தொகையை வசூலிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
ஏலத்தில் பங்கேற்கும் முதலீட்டாளர்கள் தவறுதலாக 0 – வை சேர்த்துவிட்டோம், தொகையை பிழையாக பதிவிட்டுவிட்டோம் என்பதாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை பரிசீலித்த நீதிமன்றம் இனி கவனமாக ஏலத்தில் பங்கேற்க வேண்டுமென்று கேட்டுக்கொண்ட நீதியரசர் பரதசக்ரவர்த்தி, 6 பேர் எழுப்பியிருந்த கோரிக்கையில் ஒருவருக்கு மட்டும் 25,000 அபராதத்துடன் ஏலத்தை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.
திருச்சி மொராய்சிட்டியில் கடந்த 17.03.2026 அன்று நடைபெற்ற ஏலத்தில் பிளாட் எண்: 366 வேறு ஒருவருடைய பெயரில் இருந்தது நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதையடுத்து, அந்த ஏலம் ரத்து செய்யப்பட்டது. அதுபோல, 19.06.2026 அன்று நடைபெற்ற ஏலத்தில் பிளாட் எண்கள் – 141, 142 ஆகியவற்றில் காலி மனைக்கு பதிலாக அந்த இடத்தில் கிணறு இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து அந்த இரண்டு இடங்களுக்கான ஏலமும் ரத்து செய்யப்பட்டது. இத்தகைய அனுபவத்தை கணக்கில் கொண்டு, இனி வரும் காலங்களில் ஏலத்தில் பங்கேற்பதற்கு முன்கூட்டியே சம்பந்தபட்ட இடத்தை நேரில் ஆய்வு செய்து கொள்ள வேண்டுமென்றும் நீதியரசர் பரதசக்ரவர்த்தி வலியுறுத்தியுள்ளார்.

இரண்டாம்கட்ட ஏலத்தை தொடர்ந்து, அடுத்தடுத்து அடையாளம் காணப்படும் சொத்துக்களை ஏலத்துக்கு அனுமதித்து வருகிறது நீதிமன்றம். அந்த வகையில் ஏற்கெனவே, குற்றாலம் ரிசார்ட்ஸ், கொடைரோடு டிரைவ் இன் ஹோட்டல் உள்ளிட்ட சொத்துக்களுக்கான ஏல அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், தற்போது கொடைக்கானல் மற்றும் பெரம்பலூரில் உள்ள காலி இடங்கள் ஏலத்துக்கு தயார் நிலையில் இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கொடைக்கானல் இடத்துக்கான ஆரம்பகட்ட விலை ரூ5,31,25,000/- எனவும்; பெரம்பலூர் இடம் ரூ6,25,00,000/- எனவும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
இதுபோல, சொத்துக்களின் விலையை நிர்ணயம் செய்வதில், மதிப்பீட்டு குழு நிர்ணயம் செய்த விலையுடன் 25% உயர்த்தி ஏலத்துக்கான ஆரம்பகட்ட விலை நிர்ணயித்து வரும் நிலையில், இதனை 50% ஆக உயர்த்த வேண்டுமென்ற கோரிக்கை நியோமேக்ஸ் நிறுவன தரப்பில் முன்வைக்கப்பட்டது. நிறுவனம் இந்த விலைக்கு இந்த இடம் விலைபோகும் என கருதினால், தாராளாமாக அவர்களே விலையை நிர்ணயம் செய்யலாம். ஆனால், ஒருவேளை அவ்வாறு விலை போகாத பட்சத்தில் விளம்பர கட்டணத்துக்கான செலவை நிறுவனம் ஏற்றுக்கொள்ளும் என்றால் அனுமதிக்கலாம் என்பதாக நீதியரசர் தெரிவித்ததையடுத்து, நிறுவனத்தாரிடம் ஆலோசித்து வருவதாக நிறுவன தரப்பு வழக்கறிஞர் தெரிவித்திருக்கிறார்.
இத்தகைய கோரிக்கைகளை அனுமதிக்ககூடாதென்றும்; இது காலம் கடத்தும் செயல் என்றும் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது.

புதியதாக அடையாளம் கண்டு அட்டாட்ச்மெண்ட் செய்த நிலங்களை ஏலத்துக்கு கொண்டுவருவதற்கு மதிப்பீட்டு குழுவை வைத்து மதிப்பிடுவது அவசியமாகிறது. ஆனால், இந்த பணிகளுக்கு மாவட்ட பதிவாளர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோரின் ஒத்துழைப்பு எதிர்பார்த்தபடி இல்லை என்ற தகவல் பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தற்போது வரையில் வெறும் 175 ஏஜெண்டுகளை மட்டுமே வழக்கில் சேர்த்திருக்கிறார்கள். எப்படியும் 3000-க்கு அதிகமான ஏஜெண்டுகள் இருப்பார்கள். அவர்களையும் வழக்கில் இணைத்து அவர்களின் சொத்துக்களையும் ஏலத்துக்கு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
மேலும், ”தவிச்ச வாய்க்கு தண்ணீர் கொடுக்காமல், செத்தபிறகு படையல் வைத்து என்ன பிரயோசனம்?” என்ற கேள்வி பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்டது.
இந்த பாதையில்தான் வழக்கு பயணித்து வருவதாகவும்; இனி சற்று கூடுதல் நேரம் ஒதுக்கி விசாரணையை தொடரப்போவதாகவும் தெரிவித்த நீதியரசர் பரதசக்ரவர்த்தி ஜூலை-03 ஆம் தேதியன்று விசாரணையை ஒத்தி வைத்திருக்கிறார்.
— அங்குசம் புலனாய்வுக்குழு.







Comments are closed, but trackbacks and pingbacks are open.