என்னதான் நடக்குது திருச்சி திமுகவில்?
அண்ணா அறிவாலயத்தில் கழக தலைவர் முன் தீ குளிக்க இருக்கிறேன் … என்பதாக, திமுக திருச்சி மாவட்ட இலக்கிய அணி தலைவர் எம் இராஜவேல் முகநூலில் பதிவிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
திருச்சி இலால்குடி தொகுதியில் தொடர்ந்து நான்குமுறை எம்.எல்.ஏ.வாக பதவி வகித்த முன்னாள் எம்.எல்.ஏ. சௌந்தரபாண்டியனின் பெயரை கட்சி நிகழ்வுகளில் தொடர்ந்து புறக்கணித்து வருவதாக குற்றஞ்சாட்டி இப்படி ஒரு உருக்கமான கடிதத்தை பொதுவெளியில் பதிவிட்டிருக்கிறார், இராஜவேல்.

சௌந்தரபாண்டியன் எம்.எல்.ஏ.வாக இருந்த காலத்திலேயே, இதுபோல மாவட்டத்தின் சீனியர் அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிராக முகநூலில் அவ்வப்போது கருத்துகளை வெளியிடுவதும் பின்னர் சமாதானம் ஆகி நீக்குவதுமாக இருந்துவந்த பின்னணியில்தான் இப்போது இந்த திறந்த மடல் வெளியாகியிருக்கிறது. எப்போதும்போலவே, இப்போதும் அந்த முகநூல் பதிவை நீக்கியிருக்கிறார் இராஜவேல். இலால்குடியில் அவரது பெயரை போடாமல் புறக்கணித்துவிட்டார்கள் என்று குற்றஞ்சாட்டிய நிகழ்வில், சௌந்தரபாண்டியன் பெயரை சேர்த்து புதிய போஸ்டரை திருச்சி திமுகவினர் வெளியிட்டிருக்கிறார்கள்.
முகநூலில் அந்த பதிவை தற்போது நீக்கியிருந்தாலும், அவரது பதிவில் பல்வேறு விசயங்களை குறிப்பிட்டிருக்கிறார் எம் இராஜவேல். முகநூல் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில், “ மாண்புமிகு கழக தலைவர் அவர்களே, கழக பொது செயலாளர் அவர்களே, கழக இளைஞர் அணி செயலாளர் சட்ட மன்ற எதிர் கட்சி தலைவர் மாண்புமிகு திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களே !
திருத்தவில்லை! திருத்தவில்லை!! திருச்சி மாவட்டத்தில் நடக்கும் அநியாயத்தை பாருங்கள் !!
30/06/26 தேதி செவ்வாய் கிழமையன்று லால்குடி ஒன்றியத்தில் நடக்கும் திமுக பொது கூட்டத்தில் , லால்குடி தொகுதியில் தொடர்ந்து 4 முறை திமுகவில் நின்று தொடர் வெற்றி பெற்ற சாதனை நாயகன் சட்ட மன்ற உறுப்பினர் திரு A சௌந்தரபாண்டியன் அவர்கள் பெயர் போடாமல் கூட்ட நோட்டீஸ். அதுவும் அவருடைய சொந்த ஊரில். ஏற்கனவே நடந்த இரண்டு கூட்டங்களுக்கு இரண்டு வகையான நோட்டீஸ் அடித்தார்கள். திருச்சியில் யாரையோ திருப்தி படுத்த இப்படி செய்கிறார்கள்.
கள்ளர் சமூதாயம் திருச்சி N சிவா MP யை ஒதுக்கி ஓரம் கட்டுகிறார்கள். இஸ்லாமிய சகோதரி கவிஞர் சல்மா MP ஒதுக்கி ஓரம் கட்டுகிறார்கள். தற்போது லால்குடியில் உடையார் சமுதாயத்தை ஒதுக்கி ஓரம் கட்டுகிறார்கள். இன்னும் திருத்தவில்லை.
திருச்சி மாவட்ட திமுக வில் நடக்கும் ஆணவ போக்கை கண்டித்து, சம்மந்தப்பட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வில்லை என்றால், 30/06/26 சென்னை அண்ணா அறிவாலயத்தில் கழக தலைவர் முன் தீ குளிக்க இருக்கிறேன். மன்னிக்கவும் எனக்கு வேறு வழி தெரியவில்லை!
இவன், எம் இராஜவேல் M.Com.M.Phil.LLB, திமுக திருச்சி மாவட்ட இலக்கிய அணி தலைவர்” என்பதாக பதிவிட்டிருக்கிறார்.
அவரது சர்ச்சைக்குரிய இந்த பதிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது.
— அங்குசம் செய்திப்பிரிவு.







Comments are closed, but trackbacks and pingbacks are open.