‘அங்கீகாரம்’ ஆவரேஜ் தான்” உண்மை சொன்ன ஹீரோ!
‘ஸ்வஸ்திக் விஷன்ஸ்’ தயாரித்து கடந்த 26- ஆம் தேதி ரிலீஸ் ஆனது ‘அங்கீகாரம்’. முதல் வாரத்தில் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதால் படத்தின் வெற்றி விழா நேற்று ( ஜூலை 01) சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் உற்சாகமாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் நடிகர் ஆண்டனி, ஹீரோ கேஜேஆரின் தங்கையாக நடித்த இசபெல்லா, கோச்சாக நடித்த வசுந்தரா, மியூசிக் டைரக்டர் ஜிப்ரான், ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன், கேமரா மேன் விஸ்வநாத், எடிட்டர் தினேஷ் குமார் ஆகியோர் பட அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்கள். ஹீரோ கேஜேஆர் பேசியது தான் ஹை லைட்.
இயக்குநர் தென்பாதியான்
“இந்தப் படத்திற்கு நாங்கள் எதிர்பார்த்ததைவிட நீங்கள் கொடுத்த ஆதரவு மிகவும் முக்கியமானது. அதற்காக பத்திரிகையாளர் நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்தக் கதையை முதலில் கேஜேஆர் ஸ்டுடியோவிடம் கொண்டு சென்றேன். அப்போது வேறு ஒரு பெரிய ஹீரோவிடம் இந்தக் கதையைச் சொன்னோம். ஆனால் அது நடக்கவில்லை. அதனால் வேறு ஒரு கதை செய்யச் சென்றுவிட்டேன். பிறகு, இந்தக் கதையை நம்மைத் தவிர வேறு யாராலும் சரியாக செய்ய முடியாது என்று தோன்றியதால், மீண்டும் இந்தக் கதையை கையில் எடுத்தேன். அப்போது கேஜேஆர், ‘இந்தப் படத்தில் நானே நடிக்கிறேன்’ என்று கூறினார். அதன்பிறகு அவரை வைத்து இந்தப் படத்தை மீண்டும் தொடங்கினோம். இந்தக் கதைக்காக அவர் மிகப்பெரிய உழைப்பைக் கொடுத்தார். என் ஹீரோ எந்த விதத்திலும் தவறாகத் தெரியக்கூடாது என்பதற்காக நானும், என் குழுவினரும் மிகவும் கடினமாக உழைத்தோம். அது படத்தில் நன்றாகவே வெளிப்பட்டிருக்கிறது. நீங்கள் கொடுத்த விமர்சனங்களிலும் அது பிரதிபலித்திருக்கிறது.

இந்தப் படத்திற்கு மிகச் சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் அமைந்தார்கள். என் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் இந்தப் படத்திற்காக அர்ப்பணிப்புடன் உழைத்தார்கள். நாங்கள் நினைத்தது அனைத்தும் இந்தப் படத்தில் நடந்திருக்கிறது. இந்தப் படம் அடுத்த வாரங்களிலும் இன்னும் சிறப்பாக ஓட வேண்டும். அதற்கு உங்கள் அனைவரின் ஆதரவு தொடர வேண்டும்”.
தயாரிப்பாளர் அருள் முருகன்
“ஸ்வஸ்திக் விஷன்ஸ் நிறுவனத்தின் முதல் படம் இது. எங்களுடைய ஹீரோ கேஜேஆர் சார் எங்களை நம்பி, இந்தப் படத்துக்காக இரண்டு வருடங்கள் உழைத்திருக்கிறார். நான் தயாரிப்பாளராக இருப்பதற்கு முன்பு, அவரிடம் மேனேஜராகத்தான் என்னுடைய கேரியரைத் தொடங்கினேன். இன்று இந்த மேடையில் தயாரிப்பாளராக நிற்கிறேன்.
அடுத்து ஜே.பி. அண்ணா, அதாவது இந்தப் படத்தின் இயக்குநர். முதல் நாளிலிருந்தே இன்று வரை அவருடன் பயணித்துக் கொண்டிருக்கிறோம். அவருடைய எழுத்தையும், அவர் சொல்ல வந்த விஷயங்களையும் படமாக உருவாக்கியிருப்பது எங்களுக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது”.
தயாரிப்பாளர் அஜித் பாஸ்கர்
” இயக்குநர் தென்பாதியான் (ஜே.பி.). இந்தப் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமே. இந்தக் கதைக்காக நிறைய ஆய்வுகள் செய்தார். ஒரு விளையாட்டு வீரரின் வாழ்க்கையைப் புரிந்துகொள்வதற்காக பல இடங்களுக்குப் பயணம் செய்து, மிகுந்த உழைப்பைச் செலவிட்டார்.
அதேபோல் தயாரிப்பாளரும் எங்கள் அண்ணனுமான கேஜேஆர் இந்தப் படத்திற்காக முழு ஆதரவையும் அளித்தார். இந்த மாதிரியான படத்தை உருவாக்குவதற்கு நிறைய காலமும் உழைப்பும் தேவைப்பட்டது. படப்பிடிப்பு தளத்திலும் அனைவரும் மிகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றினர். தொழில்நுட்பக் குழு முழு ஆதரவு தந்ததனர்
இப்படத்திற்கு ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு அளித்து வருவது படக்குழுவினருக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது”.
ஹீரோ கேஜேஆர்
“முதலில், மக்கள் டிக்கெட் வாங்கி படம் பார்த்து ஆதரவு அளித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. அதற்கு காரணம் பத்திரிகையாளர்கள் மட்டுமல்ல, யூடியூப் சேனல்கள், ஆன்லைன் ஊடகங்கள் என அனைவரும் இந்தப் படத்திற்கு மிகப்பெரிய ஆதரவு கொடுத்திருக்கிறீர்கள். ஒரு நடிகராக இந்த வரவேற்பு எனக்கு 100 சதவீதம் அல்ல, 1000 சதவீதம் மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த விழாவில் ஒரு நடிகராக நிற்பதில் பெருமையாக இருக்கிறது.

இந்தப்படம் பெரிய வெற்றி இல்லை ஆவரேஜ் தான். எனக்கு தெரிந்தவர்கள் திரையரங்கு உரிமையாளர்கள் என் காதுபடவே வேறு கதையை எடுத்திருக்கலாம் வேறு ஹீரோ நடித்திருக்கலாம் என்றார்கள். ஆனால் இப்போது மக்கள் வரவேற்பு தர ஆரம்பித்து இருக்கிறார்கள். இதற்கு முழு காரணம் என இயக்குநர் தென்பாதியான் தான் அவர் சொன்னதை நான் செய்தேன். தொழில்நுட்பக் குழு அத்தனை பேரும் மிகச்சிறப்பாக உழைத்திருக்கிறார்கள். இந்தப்படம் ஜெயித்தால் தான் இவர்களுக்கு வாழ்க்கை.
இன்னும் 10 வருடத்தில் நான் கண்டிப்பாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகனாக ஜெயிப்பேன் நான் இந்த தயாரிப்பாளர்களை ஜெயிக்க வைப்பேன். கைவிட மாட்டேன். இந்தப்படத்தில் உழைத்த அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களும் எனக்காக காசு பணம் பார்க்காமல் வேலை செய்தார்கள். இந்த வாரமும் தியேட்டர்களில் அங்கீகாரம் ஓடி இன்னும் பெரிய வெற்றி பெற உங்கள் ஆதரவைத் தாருங்கள்”.
— ஆண்டவர்







Comments are closed, but trackbacks and pingbacks are open.