பரங்கி மலை சிங்கம் MGR
14.1.1965 அன்று எங்கவீட்டு பிள்ளை திரைப்படம் வெளியானபோது தமிழ்நாட்டு அரசியல் அனல் கக்கிக்கொண்டிருந்தது.
ஜனவரி 26,1965 முதல் இந்தியாவின் ஒரே ஆட்சிமொழியாக இந்தியை அறிவிக்கப்போவதாக அறிவித்திருந்தது மத்திய அரசு. அனுமதிக்க முடியாது என்றார் பேரறிஞர் அண்ணா.
அறிவித்தால் அன்றைய தினம் துக்கநாளாக அனுசரிப்போம் என்றார் அண்ணா. போராட்டம் முந்தைய நாள் திமுகவின் முன்னணித்தலைவர்கள் கைது. தமிழகமே அல்லோலகல்லோப்பட்டுக்கொண்டிருந்தது.
ஜெயலலிதாவுடன் முதன்முதலாக கரம்கோர்த்து ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் வெளிவந்தது. எம்ஜிஆரின் அடுத்தபடம் கன்னித்தாய் ஜெயலலிதா ஜோடி. அடுத்ததாக அதிரடியாக அன்பேவா சரோஜாதேவி எம்ஜிஆரின் ஜோடி.
எம்ஜிஆர் ரசிகர்களின் வீட்டில் நிச்சயம் பெண்குழந்தைகளுக்கு சரோஜா, சரோஜாதேவி என்று பெயர் சூட்டப்பட்டிருக்கும். காரணம் அப்படங்களின் தாக்கம். கறுப்பு சிவப்பு கோடு போட்ட சட்டை அணிந்து எம்ஜிஆர் பாடி நடித்த புதிய வானம் புதிய பூமி, அன்பேவா-வில் அந்தப்பாடல் தமிழ் திரையுலகத்தை கட்டிப்போட்டது.
எம்.ஜி.ஆர். முருகன் வேடத்தில் தேவர் தன்னுடைய முருக கடவுளை தனிப்பிறவி திரைப்படத்தின் மூலமாக கண்டார். தொடர்ந்து ஜெயலலிதாவுடன் தாய்க்கு தலைமகன், 1967 பொதுத்தேர்தலில் திமுக பலம் பொருந்திய கூட்டணியை உருவாக்கியது.
மூதறிஞர் ராஜாஜியின் சுதந்திரா கட்சி. மா.கம்யூ.கட்சி, முஸ்லீம் லீக், தினத்தந்தி சிபா.ஆதித்தனாரின் நாம் தமிழர் கட்சி என பல கட்சிகளை ஒரே குடையின்கீழ் திரட்டி வைத்தார் பேரறிஞர் அண்ணா. எம்.ஜி.ஆர். என்ற பிரச்சார பீரங்கிக்கு இந்த முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தார் அண்ணா. எம்.ஜி.ஆரும் தொகுதியை முன்பே முடிவு செய்து வைத்திருந்தார். அதுதான் பரங்கிமலை தொகுதி.
பரங்கிமலை தொகுதியை ஒரு முறை பார்க்கலாம் என்று புறப்பட்டு சென்ற எம்ஜிஆருக்கு அமோக வரவேற்பு மற்றும் வாழ்த்துக்கள் குவிந்தன.
காரில் ஏறப்போன எம்ஜிஆரிடம் ஒரு பாட்டி கையில் பித்தளை டம்பளரில் காப்பியை தர அடடா அவர் காப்பி சாப்பிட மாட்டார் என கூற, உடனே அந்த பாட்டி அருகில் இருந்த கடையில் கோலி சோடா ஒன்றை வாங்கிக்கொண்டு வந்து எம்ஜிஆர் முன்னால் நின்றார்.
சட்டென கோலிசோடாவை கையில் வாங்கிய எம்ஜிஆர் அந்த பாட்டியை அப்படியே அணைத்துக் கொண்டார். அப்போது எடுக்கப்பட்ட படம் பின்னாளில் தமிழகமெங்கும் பயன்படுத்தப்பட்டது. திட்டமிட்டபடி பரங்கிமலை சட்டமன்ற தொகுதி வேட்பாளராக எம்ஜிஆர் போட்டியிட்டார்.
ஆனாலும் சொந்தத்தொகுதியைவிட கட்சிக்கான பிரச்சாரமே அவருக்கு பிரதானமாக இருந்தது. பல தொகுதிகளுக்கும் நேரில் சென்றார். முதல் சுற்றுப்பயணம் முடிந்ததும். கொஞ்சம் ஓய்வு எடுக்கலாம் என்று தனது ராமாவரம் தோட்டத்திற்கு வந்தார் எம்ஜிஆர்….. அப்போதுதான்….அந்த வரலாற்றுச் சம்பவம் நிகழ்ந்தது.-
-`ஹரிகிருஷ்ணன்