சுடப்பட்ட எம்.ஜி.ஆர்.; சுட்ட எம்.ஆர்.ராதா
சுடப்பட்ட எம்.ஜி.ஆர்.; சுட்ட எம்.ஆர்.ராதா
12 ஜனவரி 1967 அன்று மாலை நேரம். எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டம் வரவேற்பறையில் எம்.ஆர்.ராதாவும், பெற்றால்தான் பிள்ளையா படத்தயாரிப்பாளர் கே.கே.என். வாசுவும் காத்திருந்தனர். இண்டர்காம் மூலம் எம்.ஜி.ஆருக்கு தகவல் தரப்பட்டது.
சிறிதுநேரம் கழித்து ஒரு அலறல் சத்தம் என்னண்ணே இப்படி பண்ணீட்டீங்க? என்ற எம்.ஜி.ஆரின் அலறல் குரல் தோட்டத்தில் இருந்தவர்களை பதறச்செய்தது.
இடதுகாதை அணைத்தபடியே வரவேற்பறையிலிருந்து வெளியேறினார் எம்.ஜி.ஆர். ரத்தம் ஒழுகிக்கொண்டிருந்தது. அருகில் இருந்த ஷோபாவுக்கு பின்னால் எம்.ஆர்.ராதா கையில் துப்பாக்கி, நெற்றிப்பொட்டு, தோள்பகுதிகளில் ரத்தம், கீழே முகம் புதைந்து விழுந்து கிடந்தார் ராதா.
அவசர அவசரமாக வெளியே வாசலுக்கு ஓடிவந்த எம்.ஜி.ஆர் கார் டிரைவர் மாணிக்கத்தை அழைத்து காரை எடுக்கச்சொன்னார். தயாரிப்பாளர் வாசுவை அழைத்து நீங்க போய் அண்ணன் ராதாவை கவனியுங்கள் என்றார் எம்.ஜி.ஆர். காயம்பட்ட இருவரும் ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதி. சுடப்பட்டது எம்.ஜி.ஆர்., சுட்டது எம்.ஆர்.ராதா. இதுபோதாதா சென்னை மாநகரம் மட்டுமல்லாது தமிழகமே கொந்தளித்தது.
எங்கும் கலவரம் வன்முறை, பதற்றம். ராயப்பேட்டை மருத்துவமனை திமுக தொண்டர்களாலும், எம்.ஜி.ஆர். ரசிகர்களாலும் மூச்சுவிட திணறியது. புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். உயிர் தப்பினார். துப்பாக்கியால் பலியிட செய்த முயற்சி பலிக்கவில்லை. இது முரசொலி பத்திரிக்கையின் முதல்பக்க செய்தி. புரட்சி நடிகர் என்று கழகத் தோழர்களாலும், மக்கள் திலகம் என்று பொதுமக்களாலும், கொடை வள்ளல் என்று மாற்று முகாமில் இருப்பவர்களும் போற்றிப்புகழும் நமது கழக கலைமாமணி எம்.ஜி.ஆர்.
அவர்களை நாம் உயிருடன் திரும்பப் பெற்றுவிட்டோம் என்று அதன் ஆசிரியர் மு.கருணாநிதியால் செய்தி வெளியிடப்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்தபின் எம்.ஜி.ஆரைப் பார்த்த சாண்டா சின்னப்பதேவர் எம்.ஜி.ஆரின் அறைக்குள் நுழைந்தவர் கையில் வைத்திருந்த பொட்டலத்திலிருந்து விபூதியை எடுத்து எம்.ஜி.ஆர். நெற்றியில் பூசினார். கைவசம் கொண்டு வந்திருந்த பெரிய சைஸ் பணப்பொட்டலத்தை எம்.ஜி.ஆரிடம் கொடுத்தார்.
முருகா இந்தாங்க அட்வான்ஸ். நம்மளோட அடுத்த படத்திற்கு டைட்டில் ரெடி படப்பெயர் விவசாயி. வழக்கு ஒன்று எம்.ஜி.ஆரை சுட்டது என்றும் சிகிச்சை ஒருபுறமும். பரங்கிமலை வேட்பாளர் தேர்தல் மற்றொரு புறம், வேட்பு மனுவிற்கு முன்பே துப்பாக்கி சூடு நடந்துவிட்டது.
வேட்பாளர் நேரில் வரவேண்டும் என்று தேர்தல் அதிகாரி. அதற்கு சாத்தியமே இல்லை. இது டாக்டர்கள் குழு. டில்லி தேர்தல் கமிஷன் வரை தகவல் போய் சேர்ந்தது. அங்கிருந்து வந்த உத்தரவால் அதிகாரிகள் மருத்துவமனைக்கே இறங்கி வந்தனர். எம்.ஜி.ஆரிடம் .மருத்துவமனையிலேயே கையெழுத்திட்டு வேட்புமனு தாக்கலானது. தேர்தல் பிரச்சாரத்திற்கு போக இயலாத சூழ்நிலை எம்.ஜி.ஆருக்கு. ஆர்.எம்.வி.க்கு ஒரு யோசனை தோன்றியது.
பலத்த வற்புறுத்தலுக்குப்பின் எம்.ஜி.ஆரை சமாதானம் செய்து மருத்துவமனையில் எம்.ஜி.ஆர் கழுத்தில் கட்டுடன் இருந்த புகைப்படத்தை தேர்தலில் போஸ்டராக வெளியிடப்பட்டது.
எம்.ஜி.ஆர் போகவேண்டிய இடங்களுக்கெல்லாம் இந்த போஸ்டர் போனது. எம்.ஜி.ஆரின் ரசிகர்கள், பக்தர்கள், வெறியர்கள், அபிமானிகள், அனுதாபிகள், ஆதரவாளர்கள் என்று அத்தனைபேரின் வாக்குகளையும் சிந்தாமல் சிதறாமல் சேகரித்துக்கொள்ள அந்த போஸ்டர் பயன்பட்டது.
எளிதில் உணர்ச்சிவசப்படும் அத்தனைபேரையும் திமுகவின் பக்கம் கொண்டுவந்து சேர்த்துவிடும் சக்தியாக அந்த போஸ்டர் விளங்கியது.
அந்த தேர்தலில் ஆட்சிக்கட்டிலில் இருந்த காங்கிரசை தோற்கடித்து 138 சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்று திமுக வென்றது. பரங்கிமலை சிங்கமாம் எம்.ஜி.ஆர். 27 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். பேரறிஞர் அண்ணாவின் தலைமையில் மந்திரிசபை பட்டியல் எம்.ஜி.ஆருக்கு இரா.செழியன் மூலம் தரப்பட்டது.
அதில் சி.பா.ஆதித்தனார் பெயர் இடம்பெற்றிருந்தது. தனக்கு அதிருப்தி இருப்பதை இரா.செழியன் மூலம் அண்ணா அவர்களுக்கு கொண்டுபோய், மந்திரிகள் பட்டியலிலிருந்து சி.பா.ஆதித்தனார் பெயர் நீக்கி, சி.பா.ஆதித்தனாரை சபாநாயகராக ஆக்கினார் அண்ணா. நினைத்ததை சாதித்தார். பரங்கிமலை சிங்கமான எம்.ஜி.ஆர்.
-ஹரிகிருஷ்ணன்