பாடல்கள் சிறார்களுக்கு நம்பிக்கையையும் ஊக்கத்தையும் தருகிறது
சிறார் இலக்கியம் - ஆசிரியா் அறிமுகம்-4
சிறார் பாடல்களைத் தொடர்ந்து எழுதிவரும் எழுத்தாளர் குருங்குளம் முத்துராஜா அவர்களின் நேர்காணல்
இளமைப் பருவம் பற்றி?
எனது பெற்றோர் முத்து-காமாட்சி இணையர்.ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள். நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே பள்ளிக்கூட சூழலில்தான். பசுமையான பள்ளிக்கூட நினைவுகளே எனது பாடல்களில் எதிரொலிக்கின்றன.
பெயருக்கு முன்னால் இணைந்துள்ள குருங்குளம் பற்றி கூறுங்கள்?
திருவாரூர் மாவட்டத்திலுள்ள ஒரு சின்னஞ்சிறு அழகிய கிராமம் குருங்குளம். நாம் பிறந்து வளர்ந்த ஊர் ஊரைச் சுற்றி மூன்று குளங்கள், பசுமையான வயல்வெளிகளால் சூழப்பட்ட ஊர். எனது பாடல்களில் கமழும் கிராமிய மனத்திற்கு குருங்குளமே காரணம்.
தங்களின் கல்வி குறித்து கூறுங்கள்?
குருங்குளம் ஆரம்பப் பள்ளியில் தொடங்கி, பேரளம் அரசினர் மேல்நிலைப்பள்ளி வரை பள்ளிக் கல்வி கற்றேன். பின்னர் இளங்கலை வரலாறு. மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரியில். முதுகலை கல்வியியல் பட்டங்கள் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில்.
தங்களின் பணிச் சூழல் குறித்து?
நான் படித்து முடித்த காலகட்டங்களில் வரலாறு படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு குறைவு. உடனே வெளிநாட்டில் வேலை தேடினேன். மாலத்தீவு கல்வித் துறையில் பத்தாண்டு காலம் ஆசிரியராகப் பணியாற்றினேன் ஊர் திரும்பி 52 வயதில் முதல் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்று நான் பயின்ற பேரளம் பள்ளியிலேயே பட்டாதாரி ஆசிரியராகப் பணியாற்றினேன். பணி நிறைவுக்கு பின் தற்போது பூந்தோட்டம் ஸ்ரீ லலிதாம்பிகா மெட்ரிக் பள்ளியில் முதல்வராக பணியாற்றுகிறேன்.

சிறுவர்களுக்கான பாடல்கள் எப்படி இருக்க வேண்டும்?
சிறுவர் பாடல்களின் முதல் தகுதி எளிமை. பாடல்கள் எளிமையான சிறிய சொற்களோடு இருக்க வேண்டும். ஒவ்வொரு வரியிலும் மூன்று அல்லது நான்கு சொற்களுக்கு மேல் இருக்கக் கூடாது. எதுகை மோனையோடு குழந்தைகள் தாளம் போட்டுப் பாடும் வகையில் சந்தத்தோடு அமைய வேண்டும். ஒரு சில சொற்கள் பாடலில் திரும்பத் திரும்ப வருவது குழந்தைகளுக்கு பாடலைப் பாடுகின்ற மகிழ்ச்சியைத் தரும்.
சிறுவர்களுக்கான பாடல்களின் தேவை என்ன?
குழந்தைகள் எப்போதுமே இசையையும், பாடல்களையும் விரும்புபவர்கள். அதனாலேயே அவர்களை தூங்க வைக்க தாலாட்டு பாடுகிறோம். கடுமையான பாடச் சுமையின் நடுவே அவர்கள் சற்றே இளைப்பாற மகிழ்ச்சியாக இருக்க பாடல்கள் மிகவும் அவசியம். பாடல்கள் அவர்களுக்கு புத்துணர்ச்சியும் மகிழ்ச்சியும் தருகின்றன. குழந்தைகள் அவர்களது உலகில் உலவிட பாடல்கள் உதவுகின்றன.
எந்த வயது சிறுவர்கள் வரை பாடல்கள் அவசியம்? ஏன்?
பிறந்த குழந்தை முதல் 15 வயது வரை குழந்தைகள். இவர்களுக்குப் பாடல்கள் அவசியம். சின்னஞ்சிறு குழந்தைகள் நாம் பாட கேட்கின்றார்கள். வளர்ந்ததும் அவர்களே பாடி மகிழ்கின்றனர். மகிழ்ச்சியாகவும்,பாதுகாப்பாவும் இருப்பது அவர்களின் உரிமை. அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு சிறுவர் பாடல்கள் உதவுகின்றன. பாடல்கள் சிறார்களுக்கு நம்பிக்கையையும் ஊக்கத்தையும் தருகின்றன.
சிறுவர் கதைகளை விட பாடல்களின் முக்கியத்துவம் என்ன?
சிறுவர் பாடல் என்பது சிறுவர்களின் நேரத்தில் மிகக் குறுகிய காலமே எடுத்துக் கொள்கிறது. ஒரு சில நிமிடங்களில் ஒரு பாடலை படித்து முடித்து மகிழலாம். அவர்களே அந்த பாடலை பாடி பார்க்கின்ற மகிழ்ச்சி அவர்களுக்கு கிடைக்கிறது. ஓரிரு முறை படித்துவிட்டால் பாடல்கள் மனதில் மனப்பாடமாக பதிந்து விடுகின்றன. புத்தகமோ எதுவும் இல்லாத நேரத்தில் கூட தாங்களாகவே அந்தப் பாடலை பாடி மகிழக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.
தற்கால சிறார்கள் வாசிப்பை நோக்கி நகர என்ன செய்ய வேண்டும்?
குழந்தைகளுக்கு மகிழ்ச்சி தரும் சின்ன சின்ன விளையாட்டுகளும், பாடல்களும் குழந்தைகளை பெரிதும் கவரும். செல்போன் பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கு சின்னஞ்சிறு வாசிப்பு இயக்க புத்தகங்கள் பேருதவியாக இருக்கும்.
எழுத்து உலக நுழைவு:
எட்டாம் வகுப்பு படிக்கும் போது இருந்தே கவிதை எழுதத் தொடங்கியதாக நினைவு பின்னர் பத்திரிகை துணுக்குகள் கவிதைகள் எழுதியிருக்கிறேன். எனது தினமும் திருக்குறள் படித்திடுவோம் என்ற சிறார் பாடல் தினமணி சிறுவர்மணியில் வெளியானது.கற்றலில் எளிமை, இனிமை என்ற நோக்கத்தோடு எழுதிய பாட்டும், பாடமும் என்ற தொகுப்பு திருச்சி இல்லம் தேடி கல்வி மண்டல மாநாட்டில் இளம்பகவத் ஐ.ஏ.எஸ்,சுதன் ஐ.ஏ.எஸ் பேராசிரியர் மாடசாமி, திரு ஜே.கிருஷ்ணமூர்த்தி ஆகியோரால் வெளியிடப்பட்டது.







Comments are closed, but trackbacks and pingbacks are open.