தன்னம்பிக்கையை சிதைக்கக் கூடிய கருப்பொருள்களைக் கொண்ட கதைகள் .
குழந்தைகளுக்கான கதைகளில் அவர்களின் தன்னம்பிக்கையை சிதைத்து விடக்கூடிய கருப்பொருளைக் கொண்ட கதைகளை ஒருபோதும் சொல்லிவிடக்கூடாது.
யானைகள், பாம்புகள் பழிவாங்கும், பேய், பிசாசுகள் கதைகள் போன்ற அறிவியல் தன்மை இல்லாத கதையாடல்கள் குழந்தைகளின் மன வளர்ச்சியையும், ஆளுமைத் திறனையும் பாதிப்பதோடு அவர்களின் தன்னம்பிக்கையையும் சிதைத்து விடும்.
உதாரணமாக பேய் வெள்ளை நிறத்தில் வரும் என்பது போன்ற கதைகளைக் கூறும்போது, சிறுவர்கள் வெள்ளை நிறத்தில் எதைப் பார்த்தாலும் அச்சப்படும் சூழலுக்கு தள்ளப்படுவார்கள். காலப்போக்கில் சாதாரணமாக காற்றில் ஒரு வெள்ளைத்துணி அசைந்தாலும் கூட அவர்களின் தன்னம்பிக்கை சிதைந்து, உளவியல் ரீதியாக அவர்கள் பய உணர்வுக்கு உட்படுவார்கள்.
இன்றளவும் கிராமப்புறங்களில் மதிய நேரத்தில் சிறுவர்கள் விளையாடச் சென்றால் மதிய நேரம் வெளியில் சென்றால் மோகினி பிசாசு பிடித்துக் கொள்ளும் என்பதைப் போன்ற கதைகளை சிறுவர்களுக்கு கூறிக் கொண்டிருக்கிறார்கள்.

இதைத் தவிர்த்து உண்மைத் தன்மையுடன், வெயிலின் வெப்பம் அதிகமாக இருப்பதால் உடல் பாதிப்பு ஏற்படும் போன்ற உண்மையான அறிவியல் வழியில் கதைகளைச் சிறுவர்களுக்கு கூறலாம்.
நவீன தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருகின்ற இந்த காலத்திலும் கூட, நம்மைப் போன்ற பெரும்பாலான பெரியவர்களுக்கு நம்முடைய சிறுவயதில் சொல்லப்பட்ட பேய், பிசாசு, காட்டேரிக் கதைகளும், விலங்குகள் குறித்த மூடநம்பிக்கை கதைகளும் இன்றும் பலரை பல்வேறு சூழல்களில் அச்சத்தில் வைத்திருக்கிறது. இன்றளவும் கூட வெள்ளைத்துணி அசைந்தாலும், வீட்டிற்கு அருகில் இரவில் இரண்டடி எடுத்து வைக்க பல பெரியவர்களின் மனம் அச்சப்படுகிறது. நாமே பகுத்தறிந்து, சிந்தித்து பயத்தை விலக்கினாலும் கூட, சிறு வயதில் நமக்கு சொல்லப்பட்ட இந்தக் கதைகளின் சிந்தனைகள், அவை குறித்து நாம் சிறுவயதில் இருந்தே நம் மனதில் ஏற்படுத்திக் கொண்ட கற்பனைகள், காட்சி பிம்பங்கள் பழக்கத்தின் அடிப்படையில் நம்மில் சிலரை அச்சுறுத்திக் கொண்டுதான் இருக்கிறது.
இவ்வளவு உரையாடல்களுக்கு பின்பும் நம்மில் பலரின் மனதில் ஒரு கேள்வி தோன்றும். நம்முடைய முன்னோர்கள் என்ன முட்டாளா? அவர்கள் கூறிய கதைகள்தானே இவையெல்லாம். கதைகள் கேட்ட தலைமுறையான நாமெல்லாம் அப்படி மோசமான சூழலுக்கு தள்ளப்பட்டு விட்டோமா என்றெல்லாம் தோன்றும்.
நம்முடைய காலக்கட்டத்தில் பெரும்பான்மையான தொழில்நுட்பங்களும், சூழல்களும் முற்றிலும் வேறு. நம்முடைய பெரும்பான்மையான காலங்கள் அறியாமையிலேயே நிரப்பப்பட்டிருந்தன. ஆனால் இப்போதுள்ள தொழில்நுட்ப வளர்ச்சியும், சிறுவர்களின் அதிநவீன வேகமான அறிவும் வேறு. மேலும் அவர்கள் போக வேண்டிய தூரமும் செயல்பட வேண்டிய இலக்குகளும் மிக அதிகம். அவ்வளவு வீரியம் மிகுந்த நிலமாக இருக்கிறார்கள் இத்தலைமுறை சிறுவர்கள்.
(தொடரும்)
— கார்த்திகா கவின்குமார்







Comments are closed, but trackbacks and pingbacks are open.