1980 களின் தொடக்கத்தில் நடந்த ஒரு துர்மரணம், ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டையே உலுக்கியது.
திருச்செந்தூர் முருகன் கோயில் அதிகாரி சுப்பிரமணிய பிள்ளை, அங்குள்ள விருந்தினர் அறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். “தற்கொலை” என்றது காவல்துறை – தமிழ்நாடு அரசு.
இடையில், “உண்டியல் பணத்தை திருடி, சிக்கிக்கொண்டார் சுப்பிரமணிய பிள்ளை. அவமானம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்டார்” என்றார் ஆளுங்கட்சியைச் சேர்ந்த, அந்த கோயின் அறங்காவலர் ஒருவர்.
சுப்பிரமணிய பிள்ளையின் குடும்பத்தினர், “அவர் நேர்மையான மனிதர்..” என்று அழுகையுடன் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

அந்தப் பகுதி மக்கள், “திருச்செந்தூர் கோயிலில் நடந்த வைரவேல் திருட்டு, கோடிகணக்கிலான உண்டியல் பண முறைகேடு ஆகியவற்றை நேர்மையான அதிகாரியான சுப்பிரமணிய பிள்ளை தோண்டித் துருவினார். உண்மைகள் வெளிவந்துவிடும் என்ற அச்சத்தில் அவர் படுகொலை செய்யப்பட்டார்” என்று பொதுமக்கள், அதிர்ச்சியுடனும் ஆதங்கத்துடனும் பேசினர்.
அப்போது அதிமுக ஆட்சி. எம்.ஜி.ஆர். முதலமைச்சர். தி.மு.க. எதிர்க்கட்சி. தலைவர் கருணாநிதி. களமாடத் தொடங்கினார் கருணாநிதி. மேடைகளில் முழங்கினார்; முரசொலியில் வரிக்கு வரி சாடினார்; தமிழ்நாடு அரசை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளைக் கணைகளாகத் தொடுத்தார். மொத்தத்தில், ஆட்சி அதிகாரத்தின் அடித்தளத்தையே ஆட வைக்கும் நெருக்கடியைத் தந்தார்.
வேறு வழியின்றி, இந்த மர்ம மரணத்தை விசாரிக்க நீதிபதி சி.ஜே.ஆர். பால் தலைமையில் ஒரு நபர் கமிஷனை அமைத்தது, எம்.ஜி.ஆர். அரசு. கமிஷன் தீவிர விசாரணை நடத்தி, அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது. ஆனால், தமிழ்நாடு அரசு, அந்த அறிக்கையை வெளியிடவில்லை.
அப்போது நடந்தது ஒரு அதிரடித் திருப்பம். அந்த அறிக்கையின் நகலை செய்தியாளர்களுக்கு அளித்தார் கருணாநிதி!
அதைவிட அதிர்ச்சி, “சுப்பிரமணிய பிள்ளை தற்கொலை செய்துகொள்ளவில்லை. கொலை செய்யப்பட்டார்” என்று அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார், நீதிபதி பால்.
இந்த விவகாரத்தால் சட்டமன்றமும் கொதிநிலையை அடைந்தது. அதோடு விடவில்லை கருணாநிதி. மதுரையில் இருந்து திருச்செந்தூர் வரை ‘நீதி கேட்டு நெடும்பயணம்‘ என்ற – இன்றும் நினைவில் நிற்கும் – நடைபயணத்தைத் தொடங்கினார்.
எம்.ஜி.ஆர் அரசு, இறுதியாக பால் கமிஷன் அறிக்கையைச் சட்டமன்றத்தில் தாக்கல் செய்தது. குறிப்பிட்ட வழக்கில், சாட்சியம் இல்லாததால் எவரும் தண்டிக்கப்படவில்லை என்றே நினைக்கிறேன். அன்று தமிழக அரசியலையே தலைகீழாகப் புரட்டிப்போட்ட சம்பவம் இது.

சமீபத்தில், பழனி தண்டாயுதபாணி சுவாமி மடத்தின் நில மோசடி வழக்கில் கைதான வழக்கறிஞர் அன்வர்தீன், சிறையிலேயே மர்மமான முறையில் மரணமடைந்த செய்தியைக் கேட்டதும், நாற்பதாண்டுகளுக்கு முன் நடந்த அந்தப் பழைய சம்பவம் நினைவுக்கு வந்தது.
– டி.வி.சோமு







Comments are closed, but trackbacks and pingbacks are open.