மோசடிக்காரர்களை நம்பி மீண்டும் ஏமாறாதீர்கள் ! எச்சரித்த நீதியரசர் !
நியோமேக்ஸ் விவகாரத்தில், மோசடிக் குற்றச்சாட்டில் சிக்கி நிபந்தனை பிணையில் வெளியில் நடமாடி வரும் நியோமேக்ஸ் நிறுவனத்தின் முன்னணி இயக்குநர்கள் இரகசிய கூட்டம் நடத்திவருவதாக, பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் தரப்பிலிருந்து நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றதையடுத்து, “மோசடிக்காரர்களை நம்பி மீண்டும் ஏமாறாதீர்கள்” என்பதாக எச்சரித்திருக்கிறார், நீதியரசர் பரதசக்ரவர்த்தி.
மேலும், நீதிமன்றத்தின் மேற்பார்வையில் நடைபெறும் ஏல நடைமுறைகள் மற்றும் வழக்கு விசாரணைகள் குறித்து, யூடியூப் சேனல்களில் பலரும் பலவிதமாக பேசிவருவதாக குறிப்பிட்டபோது, “உளறுபவர்கள் உளறிக்கொண்டே இருக்கட்டும். கைப்பேசிகளை அணைத்துவிட்டு ஆக வேண்டிய காரியங்களை பாருங்கள்” என்பதாகவும் கருத்து தெரிவித்திருக்கிறார். மேலும், இதுபோன்ற வீடியோக்களை கண்காணித்து நீதிமன்ற அவமதிப்பை உள்ளடக்கமாக கொண்ட வீடியோக்கள் குறித்து நீதிமன்றத்தில் முறையிடுமாறும் விசாரணை அதிகாரியை கேட்டுக் கொண்டார்.
அக்-01 அன்று நடைபெற்ற நீதிமன்ற விசாரணையில்தான், மேற்கண்ட கருத்துகளை தெரிவித்திருந்தார். மேலும், சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஏலத்தில், ரூ.80,46,15,478.00 என்பதாக நீதிமன்றம் நிர்ணயித்திருந்த நிலையில், அப்படியே இருமடங்கு கூடுதலாக ரூ.168,19,99,688.00 ரூபாய்க்கு ஏலம் நடைபெற்றுள்ளது. மதுரை உயர்நீதிமன்றத்திற்கு பின்புறமுள்ள காலியிடத்திற்கு முன்னாள் மதுரை மேயர் முத்துவின் குடும்பத்தினர் உரிமை கொண்டாடிய நிலையில் இதுகுறித்து விளக்கம் அளிக்க இரு வாரம் அவகாசம் அளித்துள்ளது.
மேற்படி நிலத்திற்கான சந்தை மதிப்பு 800 கோடியாக உள்ள நிலையில், அரசு தரப்பில் வெறும் 170 கோடி நிர்ணயித்திருப்பதாகவும்; இதனை குறைந்தபட்சம் 300 கோடிக்கு குறைவில்லாமல் நிர்ணயிக்க வேண்டுமென்றும் நியோமேக்ஸ் நிறுவன தரப்பு வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார்.
ஏலத்தில் சில இடங்களை முதலில் எடுத்துவிட்டு பிறகு அந்த இடங்கள் வேண்டாமென்று நீதிமன்றத்தை சிலர் அணுகியிருந்த நிலையில், நீதிமன்றத்தின் ஏலநடைமுறையை சீர்குலைக்கும் வகையில் இவர்களின் செயல்பாடுகள் இருப்பதாக எச்சரித்திருந்த நீதியரசர் அவர்களை நேரில் ஆஜராக சொல்லியிருந்தார். தற்போதைய விசாரணையில் அவர்கள் ஆஜராகியிருந்த நிலையில், சில நிபந்தனைகளின் அடிப்படையிலும் அபராதத்துடனும் அவர்களது கோரிக்கை ஏற்கப்பட்டது.

இனிஇதுபோன்ற கோரிக்கைகளுடன் நீதிமன்றத்தை அணுகினால், நீதிமன்ற நடவடிக்கை பாயும் என்றும்; ஏலத்தில் எடுக்கப்போகும் இடங்களை முன்கூட்டியே நேரில் சென்று சரிபார்க்க வேண்டும்; ஏலத்தில் பங்கேற்று இதுவரை எம்.எஸ்.டி.சி.க்கு பணம் கட்டாத 1180 பேருக்கும் கடைசி வாய்ப்பு என்றும்; தவறும்பட்சத்தில் எதிர்வரும் ஏலத்தில் பங்கேற்கும்போது இ.எம்.டி. கட்டண சலுகையை இழப்பதுடன் அபராதமும் விதிக்க நேரிடும் என்றும் எச்சரித்தார்.
மேலும், குழுவாக ஏலத்தில் பங்கேற்பவர்கள், முன்னரே தங்களுக்கான குழுவை ஏற்படுத்திக்கொண்டு ஏலத்தில் பங்கேற்க வேண்டுமென்றும்; தனிநபரே சில இடங்களை ஏலம் எடுத்துவிட்டு பின்னர் குழுவாக சேர்க்க அவகாசம் கேட்டு நீதிமன்றத்தை அணுகக்கூடாது என்றும்; இவ்வாறு ரியல் எஸ்டேட் பிசினஸ் நோக்கில் இந்த ஏல நடைமுறையை அணுகினால் நீதிமன்ற நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்பதாகவும் எச்சரித்திருக்கிறார்.
இதுவரை, நியோமேக்ஸ் நிறுவனத்தால் நிராகரிக்கப்பட்ட உறுதி செய்யப்படாத பாண்டுகளின் விவரங்களை பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசு இணையத்தில் வெளியிட வேண்டுமென்றும் உத்தரவிட்டார். நெய்வேலி சங்கத்தின் சார்பில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 27 துணை நிறுவனங்களின் பட்டியலை விசாரணைக்குட்படுத்தும்படி போலீசாரை கேட்டுக்கொண்டார்.
மதுரை உயர்நீதிமன்றத்திற்கு பின்புறமுள்ள இடம் குறித்த பதில் அளிக்க அக்-09 ஆம் தேதி அன்றும்; வழக்கமான விசாரணைக்காக அக்-16 அன்றும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்பதாக அறிவித்திருக்கிறார், நீதியரசர் பரதசக்ரவர்த்தி.
நியோமேக்ஸ் | ரகசிய கூட்டம்! எச்சரித்த நீதியரசர் !
– அங்குசம் புலனாய்வுக்குழு.






Comments are closed, but trackbacks and pingbacks are open.