1.5 கிலோ கோழிக்கறி வாங்க 150 கி.மீ. தூரம் : அலைக்கழிக்கப்படும் சிறைக்காவலர்கள் !

ஜெயில் பரிதாபங்கள் - 11

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

தமிழகத்தில் சிறைக்கைதிகளுக்கு வாரம் இரண்டு நாட்கள் (ஞாயிறு மற்றும் புதன் கிழமை) கோழிக்கறி வழங்கப்பட்டு வருகிறது. மற்ற நாட்களில் 11.45 முதல் 12 மணிக்குள்ளாக, மதிய உணவு வழங்கப்படும் நிலையில், கோழிக்கறி வழங்கப்படும் நாட்களில் மட்டும் மதியம் 2 – 3 மணி வரையில் காலதாமதம் ஆகிவிடுவதாக சொல்லப்படுகிறது. மேலும், கோழிக்கறி என்ற பெயரில் பெரும்பாலும் கழித்துக்கட்டப்பட்ட கறிகள்தான் பரிமாறப்படுவதாகவும்; குறிப்பிட்ட சில கிளைச்சிறைகளில் இந்த கறிக்கும் கைதிகளிடமே பணம் வசூலிக்கப்படுவதாகவும் குற்றஞ்சாட்டு எழுந்திருக்கிறது.

கைதிகளின் உறவினர்கள் தரப்பிலிருந்து முன்வைக்கப்படும் இந்தக்குற்றச்சாட்டு குறித்து சிறைத்துறை வட்டாரத்தில் விசாரித்த வகையில் நமக்கு கிடைத்த தகவல்கள் அதிர்ச்சியூட்டுகின்றன. திருச்சி சரகத்திற்குட்பட்ட கிளைச்சிறைகளில்தான் இப்படி ஒரு சர்ச்சை சுழன்றடிக்கிறது.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

தமிழகம் முழுவதிலுமுள்ள 9 மத்திய சிறைகளில்  ப்ரீடம் பிரிசன் பஜார் என்ற பெயரில் சிறைக்கைதிகளை கொண்டு தயாரிக்கப்படும் பல்வேறு மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் விற்பணை செய்யப்படுகின்றன. திருச்சி உள்ளிட்ட சில மத்திய சிறைகளில் கோழிக்கறியும் விற்பணை செய்து வருகிறார்கள்.

இந்நிலையில், திருச்சி சரகத்திற்குட்பட்ட கிளைச்சிறைகள், மகளிர் சிறைகளில் உள்ள கைதிகளுக்கான கோழிக்கறியை, திருச்சி மத்திய சிறை வளாகத்தில் இயங்கும் ப்ரீடம் பிரிசன் பஜார் – கோழிக்கறி கடையிலிருந்துதான் கொள்முதல் செய்ய வேண்டுமென்று பிறப்பிக்கப்பட்ட வாய்மொழி உத்தரவுதான் காரணம் என்கிறார்கள்.

அரசு விதியின்படி, கைதி ஒருவருக்கு 150 கிராம் கோழிக்கறி வழங்க வேண்டும். நூறு கைதிகளை கொண்ட கிளைச்சிறை என்றாலும்கூட, அதிகபட்சம் 15 கிலோ கோழிக்கறி. வெறும் 10, 20 சிறைக்கைதிகளை கொண்டிருக்கும் கிளைச்சிறைகளுக்கு 1.5 – 3 கிலோ போதுமானது. ஆனால், இந்த 1.5 கிலோ கோழிக்கறியை வாங்க, நாகப்பட்டினம், திருவிடைமருதூர், நன்னிலம், மயிலாடுதுறையிலிருந்து என சுமார் 100 – 150 கி.மீ. தூரம் வரையில் பயணித்து திருச்சி மத்திய சிறைக்கு வந்துதான் வாங்கியாக வேண்டுமென்று கட்டாயப்படுத்தப்படுவதாக புலம்புகிறார்கள்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

ஜெயில் பரிதாபங்கள்இதற்காக காவலரோ, சிறை சமையலரோ அதிகாலையே கிளம்பி அவ்வளவு தூரம் பயணப்பட்டு வாங்கி செல்கிறார்கள். சில நாட்களில், சிறைக்கு வந்து சேரவே 11, 12 மணி ஆகிவிடுகிறது.  அதன்பிறகு, சமைப்பதில் மதிய உணவுக்கான நேரம் மாறிவிடுகிறது. இவ்வாறு தாமதமாவதால், கோழிக்கறி ஒரு விதமான வாடை எடுக்க ஆரம்பித்துவிடுகிறது. சிறைக்கைதிகள் சாப்பிட மறுக்கும் சம்பவங்களும் நடக்கிறது. இதில் இன்னும் கொடுமை, பொதுமக்களுக்கு நல்ல கறிகளை விற்பணை செய்ததுபோக கழித்துக்கட்டிய கறிகளையெல்லாம் சிறைக்கைதிகளின் தலையில் கட்டிவிடுகிறார்கள் என்கிறார்கள்.

இதில் இன்னொரு விசயம். சிறைக்குத் தேவையான மளிகைப்பொருட்களை வெளிச்சந்தையில் வாங்கக்கூடாது; வாங்கவும் முடியாது. அந்தந்த பகுதியில் இயங்கிவரும் கூட்டுறவு அங்காடிகளிலிருந்துதான் சப்ளை செய்யப்பட்டு; அதற்குரிய பணம் சிறைத்துறையிலிருந்து நேரடியாக கூட்டுறவு அங்காடிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். இதுதான் நடைமுறை. கோழிக்கறிக்கும் பொருந்தும்.

இந்நிலையில், அந்தந்த பகுதி கூட்டுறவு அங்காடியினரை சரிகட்டி அவர்களிடமிருந்துதான் கறி வாங்கியதைப்போல போலியான பில் தயாரித்து சிறைத்துறைக்கு அனுப்பி வைக்கிறார்கள். பணம் வந்ததும் குறிப்பிட்ட கமிஷன் தொகையை கழித்துக் கொண்டது போக, எஞ்சிய தொகையை சிறை காவலர்களுக்கு வழங்கிவிடுவதாகவும் சொல்கிறார்கள்.

கூட்டுறவு அங்காடி பெயரில் பில் எழுதி, பணம் கைக்கு வரும் வரையில் கோழிக்கறிக்கு யார் பணம் கொடுப்பது? சில சிறை காவலர்கள் கைக்காசை போடுகிறார்கள். இன்னும் சிலர், வேறு வழியின்றி சிறைக்கைதிகளிடமே பணம் வசூலித்து கொடுக்கிறார்கள் என்கிறார்கள். ஆக, இத்தகைய நடைமுறை கிளைச்சிறை காவலர்கள் விதிமீறல்களில் ஈடுபட சிறைத்துறை நிர்வாகமே தூண்டுவதுபோல் அமைந்துள்ளது என்பதாக குற்றஞ்சாட்டுகிறார்கள்.

கடந்த 1 வருடங்களாகத்தான், அதுவும் திருச்சி மத்திய சிறையில்தான் இந்தக்கூத்து என்கிறார்கள். வழக்கம்போல, கூட்டுறவு அங்காடி வழியாகவே அந்தந்த கிளைச்சிறைகளுக்கான கோழிக்கறி சப்ளை தொடர வேண்டும் என்பதுதான் சிறைக்காவலர்களின் எதிர்பார்ப்பாக அமைந்திருக்கிறது.

அங்குசம் புலனாய்வுக்குழு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.