இரு மொழிக் கொள்கைக்கு எதிராகச் செயற்பட்டால் தண்டனை – பாராட்டும் நெறியுரையும் !

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் – நாசரேத்து மாநில நெடுஞ்சாலையில் (மாநில நெடுஞ்சாலை/மா.நெ./SH-93) புதிதாக அமைக்கப்பட்ட வழிகாட்டிப் பலகையில் தமிழ், ஆங்கிலத்துடன் இந்தி மொழியும் சேர்க்கப்பட்டிருந்தது. அனைத்துத் தரப்பாரிடமிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. இதன் காரணமாக, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளர் பூமிநாதன், உதவிப் பொறியாளர் முத்துலட்சுமி ஆகியோர் பணியிடை விலக்கம் செய்யப்பட்டனர்.

பலர் தவறு செய்திருக்கும் பொழுது இருவர் மீது மட்டும் நடவடிக்கை பாய்வது ஏன்? சாத்தான்குளம் மாநில நெடுஞ்சாலைப் பெயர்ப்பலகையில் மட்டும்தானா இந்தி இடம் பெற்றுள்ளது. பூவிருந்தவல்லி தேசிய நெடுஞ்சாலையில் பெருந்தொடரி(மெட்டிரோ) நிலையம் அருகேயுள்ள மாதவரம் – பாரிமுனை – கோயம்பேடு இடங்களைக் குறிப்பிடும் சாலைவழிப் பலகைப் படத்தை மாதிரிக்குப் பார்க்கலாம். இதுபோல் தமிழ்நாடெங்கும் பல நெடுஞ்சாலைகளில் இந்தி இடம் பெற்றுள்ளதைப் பார்க்கலாம்.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

பெயர்ப்பலகைஆனால், மாநில நெடுஞ்சாலைத்துறை, பொறியாளர் சங்கப் பொறுப்பாளர்கள் சிலர், மத்திய சாலை – உள்கட்டமைப்பு நிதி வாயிலாக, 80% நிதிப் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு உள்ளதால் விதிக்கிணங்க இந்தியிலும் பெயர் குறிக்கப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளனர்.

ஆனால், பிற மாநில  வழிகாட்டுப் பலகைகளில் இந்தி இல்லை. சான்றுக்கு, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கருநாடகா, குசராத்து, மகாராட்டிரம், மே.வங்காளம், அசாம் முதலிய மாநிலச் சாலைப் பெயர்ப் பலகைகள் படங்கள் தரப்பட்டுள்ளன.

பிற மாநிலங்களால் பெயர்ப்பலகைகளில் இந்தியைத் தவிர்த்திருக்கும் பொழுது தமிழ்நாட்டு அரசால் ஏன் அவ்வாறு செய்ய இயலாது?

பெயர்ப்பலகைஒன்றிய அரசின் நிதிப்பங்களிப்புத் திட்டம் எதுவென்றாலும், பெயர்ப்பலகை போன்ற எதிலும் இந்திக்கு இடமில்லை என்பதை தெளிவாகக் கூறிவிடவேண்டும்.

இன்று நெடுஞ்சாலை எல்லைக் கற்களில் இந்தி இருப்பதைப் பார்க்கிறோம். இதற்குக் காரணம் தி.மு.க.வின் அமைச்சர் த.இரா.பாலுதான். இந்தியா முழுவதும் இந்தியை எல்லைக்கற்களில் திணித்த தி.மு.க. இன்று சாலைவழிப்பலகைகளில் இந்தி இடம் பெற்றதற்கு மூலவர் யார் என அறிந்தும் தமிழக அரசைத் திட்டுகிறது.

ஒன்றிய அரசின் நிதியுதவியால் இந்தியில் பெயர் வைக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்துவது முறையல்ல.

இருமொழிக் கொள்கையை அரசுகளும் புரிந்து கொள்ளவில்லை. புரிந்தும் புரியாமல் இருக்கும் அதிகாரிகளும் சரியாகச் செயற்படுத்துவதில்லை.

1968 சனவரி 23 செவ்வாய்க்கிழமை காலை 10.30க்கு இரு மொழிக்கொள்கைத் தீர்மானம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. “தமிழும், மற்ற தேசிய மொழிகளும் மத்திய ஆட்சி மொழிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அரசியல் சட்டம் திருத்தப்படவேண்டும். அதுவரையில், ஆங்கிலமே ஆட்சி மொழியாகத் தொடர்ந்து இருந்துவர வேண்டும். அதற்கு ஏற்றபடி இந்திய அரசியல் சட்டத்தின் மொழிப் பிரிவு திருத்தப்பட வேண்டும் என்று இந்த மன்றம் வற்புறுத்துகிறது” என்பதைப் பேரறிஞர் அண்ணா தெரிவித்தார்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

“நமது வீட்டிற்குள் புழங்குவதற்குத் தாய்மொழியான தமிழும், உலகத்தோடு தொடர்பு கொள்வதற்கு பன்னாட்டு மொழியான ஆங்கிலமும் நமக்குப் போதும். நமக்குத் தொடர்பே இல்லாத மற்றொரு மொழி நமக்குத் தேவையில்லை.”  என இருமொழிக்கொள்கைத் தீர்மானத்தின் பொழுது பேரறிஞர் அண்ணா உரையாற்றினார். நமது வீட்டிற்குள் என்று சொல்வதன் மூலம் நாம் வாழும் தமிழ்நாட்டிற்குள் தமிழும் அயல்நாட்டுடன் தொடர்பு கொள்ள ஆங்கிலமும் என்பதே இருமொழிக் கொள்கை.

ஆனால், நடைமுறையில் இருப்பது என்ன? இரு மொழிக்கொள்கை என்றால் தமிழும் ஆங்கிலமும் பயன்படுத்தலாம் எனக் கருதி முடிந்த அளவு ஆங்கிலத்தைப் பயன்படுத்துகின்றனர். அறிவிப்புப் பலகைகள், பெயர்ப் பலகைகள், சுற்றறிக்கைகள், மாறுதல் ஆணைகள், பதவி உயர்வு ஆணைகள், ஒப்பந்த அறிவிப்புகள், ஒப்பந்தங்கள், பொதுவான அரசாணைகள், விலைப்புள்ளிக் கேட்புகள், குறிப்பாணைகள், ஒழுங்கு நடவடிக்கை ஆணைகள், பதவி உயர்வு ஆணைகள், இடைவிலக்க ஆணைகள், பதவி நீக்க ஆணைகள், விளம்பரங்கள், பெரும்பாலான இணையத் தளப் பக்கங்கள் முதலிய எதுவாயினும் ஆங்கிலம் ஆங்கிலம் ஆங்கிலம்தான்.

பொதுத்துறை, உள்துறை, நிதித்துறை,  முதலிய ஆங்கிலத்திலேயே மூழ்கியுள்ள சில துறைகளின் செயலர்கள் மீதும் உயர்நிலை அதிகாரிகள்மீதும் நடவடிக்கை எடுத்தால் தலைமைச்செயலகத்தில் தமிழைக் காணலாம். தமிழ்நாட்டில் தமிழை வாழச் செய்யலாம்.

அனைவருக்கும் முன்மாதிரியாக இருக்க வேண்டிய முதலமைச்சர் தனிப்பிரிவு அலுவலகத்திலேயே – அஃதாவது முதல்வரின் முகவரித் துறையிலேயே தமிழ்ப்படிவத்தைக் கூட ஆங்கிலத்தில்தான் நிறைவுசெய்கிறார்கள். இப்பிரிவு மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழில் மாற்ற வேண்டி அதற்கிணங்க அப்போதைய தலைமைச்செயலர் முனைவர் வெ.இறையன்பு தமிழில் மாற்றி வைத்த பின்பு யார் ஆங்கிலத்திற்கு மாற்றியது? அவர் மீது நடவடிக்கை எடுத்துத் தண்டிக்க வேண்டும்.

அனைத்து அறைகள் வாயிலிலும் பெயர்களும் பதவிப்பெயர்களும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்டுள்ளன. சில இடங்களில் ஆங்கிலம் மட்டும் உள்ளது. இரு மொழிக் கொள்கை என்றால் ஆங்கிலத்திலும் இருக்க வேண்டும் எனத் தவறாக எண்ணுவதாலேயே இந்த நிலை.

தமிழில் இருக்கக்கூடிய கையொப்பம், சுருக்கொப்பம், சுற்றறிக்கைகள், குறிப்பாணைகள், அறிக்கைகள், ஆணைகள், ஒப்பந்தங்கள், பட்டியல்கள், பதிவேடுகள் முதலியன மட்டுமே செல்லத்தக்கன என அறிவிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள தமிழக அரசு அலுவலகங்கள் மட்டுமல்லாமல் பிற மாநில அரசுஅலுவலகங்கள், ஒன்றிய அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள், பிற அலுவலகங்கள் யாவற்றிலும் தமிழ்மட்டுமே அலுவலக மொழியாக இருக்க வேண்டும் என ஆணை பிறப்பித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இருமொழிக் கொள்கைக்கு எதிராகச் செயற்பட்டதாகக் கூறி நடவடிக்கை எடுத்த பொதுப்பணி-நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஆதவு போன்று, தமிழ் வளர்ச்சி அமைச்சரும் மனிதவள மேலாண்மை அமைச்சரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டு முதல்வர் மக்கள் நட்சத்திரம் ச.சோ.விசய் கூடுதல் கருத்து செலுத்தி, இரு மொழிக்கொள்கை என்றால் தமிழ்நாட்டிற்குள் தமிழ்மட்டுமே பயன்படுத்தப்பட நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்!

–    இலக்குவனார் திருவள்ளுவன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.