யார் இந்த நேஹா போரா? பெரும் ஆவலைத் தூண்டும் கேள்விகளுள் இது ஒன்று. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்வதற்கு முதற் காரணமாக அமைந்த, ஜந்தர் மந்தர் போராட்ட பந்தலில் சோனம் வாங்க்சுடன் இணைந்து 23 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்து நடத்தியதில் இவரும் ஒருவர்.
கரப்பான் பூச்சி ஜனதா பார்ட்டி தொடங்கி வைத்தப் போராட்டத்தை, உறுதியோடு தொடர்ந்து அதனை வெற்றிகரமாகவும் முடித்து வைத்த களப்போராளிகளில் முதன்மையானவர் இந்த நேஹா போரா.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்ட மாணவியான நேஹா போரா. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) (விடுதலை) கட்சியுடன் இணைந்த அகில இந்திய மாணவர் சங்கத்தின் (AISA) தேசியத் தலைவராகவும் இருக்கிறார்.
போராட்டக்களத்தில் இவரது ஆடைகளின் மீது வீசப்பட்ட கருப்பு மை தான் இவர் மீதான முதல் கவனக்குவிப்பாக அமைந்தது. அதனை தொடர்ந்து போராட்டக்களத்தில், துளி பயமே இல்லாமல் டெல்லி போலீசாரோடு தினமும் அவர் மல்லுக்கட்டியது மட்டுமல்ல; துப்பாக்கியிலிருந்து கிளம்பும் குண்டுகளைப்போல வெடித்து தெரித்த அவரது வார்த்தைகளுக்காகவும் எல்லோரது கவனத்தையும் பெற்றார். இந்த ஜென்-ஸிக்கு பின் யோகேந்திரா, பிரஷாந்த் பூஷன் மட்டுமல்ல, ஏறக்குறைய ஏனைய அரசியல் கட்சித்தலைவர்களும் டெல்லி வீதியில் அணிவகுத்து நின்றார்கள்.
”ஒருவருக்கொருவர் எதிராகப் போராடாமல், ஒருவருக்காக ஒருவர் போராடுவது என்றால் என்ன என்பதை இந்தப் போராட்டங்கள் இளைஞர்களுக்குக் காட்டியுள்ளன” என்பது போன்ற நேஹா போரா உதிர்க்கும் வீரியமான வார்த்தைகளே அவரது அடையாளம்.
– கலைமதி






Comments are closed, but trackbacks and pingbacks are open.