வெறும் அசிடிட்டி என்று அலட்சியம் செய்யாதீர்கள் !
”கல்யாண பங்ஷன்ல சாப்பிட்டதுல இருந்து வயிறு கொஞ்சம் உப்புசமா இருக்கு.”, “என்னென்ன தெரியல மேல் வயிறு அசௌகரியமா இருக்கு”, “கொஞ்சம் அஜீரணக் கோளாறு”, “வயிற்று எரிச்சலா இருக்கு”, “அடிக்கடி ஏப்பம் வருது” – இப்படியா டெம்ப்ளேட் பாணியில் சில காரணங்களை சொல்லி, வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் மெடிக்கலில் மாத்திரை கேட்டு வாங்கி சாப்பிடுபவர்களை நாம் பார்த்திருக்கிறோம்.
ஆனால், இந்த அறிகுறிகளுக்குப் பின்னால் H. pylori எனப்படும் ஒரு சிறிய கிருமி இருக்கலாம் என்பது பலருக்குத் தெரியாது. நாம் சாப்பிடும் உணவைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் தண்ணீர் சுத்தமாக இல்லாவிட்டால், அதன் மூலம் பல்வேறு நோய்க்கிருமிகள் உணவில் சேர வாய்ப்புள்ளது. குறிப்பாக, சுகாதாரமற்ற சூழலில் தயாரிக்கப்படும் உணவு, பாதுகாப்பற்ற தண்ணீர் மற்றும் உணவைக் கையாளும் முறையில் சுகாதாரக் குறைபாடு ஆகியவை H. pylori தொற்று பரவுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கக்கூடும்.

இதனால் பானிபூரி, கரும்புச்சாறு, தெருவோர ஃப்ரைடு ரைஸ், நூடுல்ஸ் போன்ற உணவுகளைச் சாப்பிடுவதால் ஒவ்வொரு முறையும் H. pylori தொற்று ஏற்படும் என்று அர்த்தமல்ல. ஆனால், அவை தயாரிக்கப்படும் இடத்தில் பயன்படுத்தப்படும் தண்ணீர், பாத்திரங்களின் சுத்தம், உணவுப் பொருட்களைப் பாதுகாக்கும் முறை மற்றும் சுற்றுப்புற சுகாதாரம் சரியாக இல்லாவிட்டால், பல்வேறு நோய்க்கிருமிகள் உணவில் சேரும் அபாயம் அதிகரிக்கிறது.
இந்தக் கிருமி வயிற்றின் உட்புறச் சுவரில் நீண்டகால அழற்சியை ஏற்படுத்தலாம். சிகிச்சை பெறாமல் விடப்பட்ட சிலருக்கு காலப்போக்கில் வயிற்றுப் புண் அல்லது சிறுகுடலின் முதல் பகுதியில் புண் ஏற்படலாம். மேலும், நீண்டகால H. pylori தொற்று வயிற்றுப் புற்றுநோய்க்கான முக்கிய காரணிகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
அதனால், “எனக்கு அசிடிட்டி தான்” என்று மாதக்கணக்கில் தானாகவே மருந்து எடுத்துக்கொள்வது சரியான அணுகுமுறை அல்ல. தொடர்ந்து வயிற்று எரிச்சல், மேல் வயிற்று வலி, அஜீரணம், அடிக்கடி ஏப்பம், வயிற்று உப்புசம் அல்லது மீண்டும் மீண்டும் ஏற்படும் வயிற்றுத் தொந்தரவுகள் இருந்தால், இரைப்பை–குடல் மருத்துவரை அணுகி காரணத்தைக் கண்டறிவது அவசியம். தேவையானவர்களுக்கு எண்டோஸ்கோபி மற்றும் H. pylori பரிசோதனைகள் மூலம் தொற்றைக் கண்டறிய முடியும்.
- pylori கண்டறியப்பட்டால், மருத்துவர் பரிந்துரைக்கும் முழுமையான கிருமி ஒழிப்பு சிகிச்சையை தவறாமல் முடிக்க வேண்டும். தொற்றை ஒழிப்பதன் மூலம் வயிற்றுப் புண் மீண்டும் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க முடியும்; நீண்டகாலத்தில் வயிற்றுப் புற்றுநோய் அபாயத்தையும் குறைக்க உதவும்.
வயிற்று எரிச்சலை வெறும் ‘அசிடிட்டி’ என்று அலட்சியம் செய்யாதீர்கள். சுத்தமான தண்ணீர் • சுகாதாரமான உணவு • உணவை பாதுகாப்பாகக் கையாளுதல் • சரியான மருத்துவ ஆலோசனை – இவை அனைத்தும் H. pylori உள்ளிட்ட உணவு மூலம் பரவும் தொற்றுகளைத் தவிர்க்க உதவும்.
அடிக்கடி ஏற்படும் அஜீரணத்திற்கு மாத்திரை தேடுவதற்கு முன், அதன் உண்மையான காரணத்தைத் தேடுங்கள். உங்கள் வயிறு சொல்லும் எச்சரிக்கையை அலட்சியம் செய்யாதீர்கள்.
மரு. ரா. கிஷ்வந்த்,
இரைப்பை, குடல் மற்றும் கல்லீரல் சிறப்பு மருத்துவர்,
மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை, திருச்சி.






Comments are closed, but trackbacks and pingbacks are open.