தியானத்தில் மூழ்கிய நாரைக்கூட்டம்!  

கவிராயர் பக்கம் - வெந்ததும் வேகாததும் - 5

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

வார்த்தைகளால் கோர்க்கப்பட்ட வாக்கியம்போல, வான் பரப்பில் வளைந்தபடி செல்கிறது நாரைக்கூட்டம் ஒன்று.

பலஜோடி இறக்கைகள் ஒரே சமயத்தில் ஓசையே எழுப்பாமல் மடங்கி விரிந்து செல்லும் காட்சி ஓர் ஓவியப் புதிர் போல உள்ளது. ஒன்றின்பின் ஒன்றாய் ஒன்றை மற்றொன்று முந்தாமல் அவற்றை உந்திச் செல்வது ஏது? பறத்தலின் ஒழுங்கு அவை தியானத்தில் மூழ்கியபடி செல்வதைப் புலப்படுத்துகிறது.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

இஃது ஒரு ஜென்குருவின் உபதேசம்போல் இருக்கிறது. மௌனத்தின் மணிகள் கோர்த்த சொற்கள் நாரைக் கூட்டத்தின் ஓசையற்ற சிறகடிப்புகளாய் உள்ளன. நாரைகள் போலவே இயக்கமற்ற இயக்கத்தில் சீடர்கள் மூழ்கியுள்ளனர்.

நாற்பது வருடங்களுக்கு முன்னர் நான் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தரின் தனிச் செயலாளராகப் பணிபுரிந்தபோது அங்கு நிர்வாகப் பிரிவில் புதிதாகப் பணியில் சேர்ந்த ஓர் இளைஞர் என்னிடம் வந்தார்.

அப்போது குங்குமம் வார இதழில் நான் வாரம்தோறும் ஜென் கதைகள் எழுதி  வந்தேன்.

“ஐயா உங்கள் ஜென் கதைகளைப் படித்து வருகிறேன். சிறகே இல்லாமல் என்னைப் பறக்க வைத்து விடுகிறீர்கள். சிந்தனை வானத்தின் உச்சிக்கே சிலசமயம் சென்று விடுகிறேன்.”

அவர் உச்சிக்குச் சென்றது உண்மை. முயன்று படித்து முனைவர் பட்டம் பெற்றுப் கல்லூரியில் இணைப்பேராசிரியராக உயர்ந்தார். பணி ஓய்வு பெற்ற பிறகும் பத்திரிக்கையாளராக இயங்குகிறார்.

“எல்லாம் நீங்கள் எனக்குச் சொன்ன ஜென் கதைகளால்தான் ஐயா.” என்றார் அந்த இளைஞர். அவர் நெடுஞ்செழியனேதான்!

இதோ இந்த இதழில் ஜென் கதைகள் சிறகடிக்கின்றன. புதிய வானம்! புதிய நாரைகள்! புதிய நெடுஞ்செழியன்கள் புறப்பட்டு வரட்டும்!

ஜென் கதைகள் பொழுதுபோக்கிற்காகச் சொல்லப்பட்ட கதைகள் அல்ல. அவை ஞானத்தின் திறப்புகள். சாதாரணமாக விவரிக்க முடியாத ஜென் தத்துவங்களை ஜென்குருமார்கள் கதைகள் வழி வெளிப்படுத்தினர். எடுத்துக்காட்டாகச் சில கதைகளைப் பார்க்கலாம்.

சீடன் குருவிடம் கேட்டான்: “மரம் இவ்வளவு ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கிறதே, அதற்குச் சலிப்பதே இல்லையா?”

குரு சொன்னார்:”அது நின்று கொண்டிருக்கவில்லை. வளர்ந்து கொண்டிருக்கிறது.”

ஜென் கருத்து: அமைதியாக இருப்பது செயலற்றிருப்பது அல்ல.

தஞ்சாவூர் கவிராயர்
தஞ்சாவூர் கவிராயர்
  • ••••

குரு வானத்தில் இருந்த நிலவைக் காட்டி விரலை நீட்டினார்.

சீடன் விரலையே பார்த்துக் கொண்டிருந்தான்.

குரு சொன்னார்: “நான் சுட்டியது நிலவை; என் விரலை அல்ல.”

ஜென் கருத்து: சடங்குகள் போதனைகள் சொற்கள் இவை உண்மையைச் சுட்டிக்காட்டும் விரல்கள் மட்டுமே. விரலைப் பார்த்துக் கொண்டே நிலவை மறந்துவிடக்கூடாது.

  • •••

சீடன் ஒருவன் குருவிடம் சொன்னான்: “நேற்று நான் செய்த தவறு என்னை வருத்துகிறது.”

குரு கேட்டார்: “நேற்று நடந்ததை இப்போது மாற்ற இயலுமா?”

“இயலாது.”

“அப்படியானால், அதில் ஏன் மீண்டும் வாழ்கிறாய்?”

 

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

ஜென் கருத்து: அதன் பொருள் என்னவெனில், “கடந்த காலத்திலிருந்து பாடம் கற்க வேண்டுமே ஒழிய அதில் குடியேறிவிடக்கூடாது.”

  • •••

இரண்டு விதைகள் மண்ணில் விழுந்தன.

ஒரு விதை சொன்னது: “இங்கே ஒரே இருட்டு. வெளியே வரப் பயமாக இருக்கிறது.” அது மண்ணுக்குள்ளேயே கிடந்தது.

மற்றொரு விதை “இருட்டுதான். ஆனால், வெளிச்சம் மேலே இருக்கலாம். போய்தான் பார்ப்போமே” என்று வெளியே வந்தது. அஃது ஒரு மரமானது!

ஜென் கருத்து: “பயம்தான் நம் வளர்ச்சியைத் தடுக்கிறது.”

  • •••••

ஒரு செல்வந்தர் ஜென் குருவிடம் வந்தார்.

“என் வீடு ஏராளமான பொருட்களால் நிறைந்திருக்கிறது. ஆனால், என் மனம் ஏனோ  வெறுமையாக உள்ளது” என்றான்.

குரு அவரை ஒரு காலியான அறைக்கு அழைத்துச் சென்றார். “இந்த அறையில் என்ன இருக்கிறது?”

“ஒன்றுமில்லை”

“இல்லை. காற்று இருக்கிறது. வெளிச்சம் இருக்கிறது. இடம் இருக்கிறது.”

ஜென் கருத்து – வெறுமையும் ஒரு வளம்தான்.

  • ••••

ஒரு சீடன் குருவிடம் கேட்டான்: “ஞானம் பெறுவதற்கு முன் நீங்கள் என்ன செய்தீர்கள்?”

குரு: “விறகு வெட்டினேன்; தண்ணீர் சுமந்தேன்.”

“ஞானம் பெற்ற பிறகு?”

குரு அதே பதிலைச் சொன்னார்: “விறகு வெட்டுகிறேன்; தண்ணீர் சுமக்கிறேன்.”

சீடன் குழம்பினான்.

குரு சிரித்தார்: “ஞானம் வாழ்க்கையின் சாதாரண வேலைகளை மாற்றுவதில்லை – அவற்றைப் பார்க்கும் மனதை மாற்றுகிறது.”

ஜென் கருத்து: ஆன்மீகம் என்பது வாழ்க்கையிலிருந்து ஓடுவது அல்ல; அன்றாட வாழ்க்கையை முழுக்கவனத்துடன் வாழ்வது.

ஜென் மடாலயங்களில் ஜென்குருமார்கள் புதிர்களைச் சொல்லிச் சீடர்களிடம் விடை கேட்பர். இந்தப் புதிர்களுக்கு விடைகளே இல்லை. இவற்றின் மூலம் சீடர்களைச் சிந்திக்க வைப்பது அவர்களின் உள்முகத் தேடலுக்கு உதவும்.

ஜென் உபதேசங்கள் அபத்தமாகத் தோன்றலாம். ஆனால் அபத்தங்கள்தான் சிலசமயம் புதிய சாளரங்களைத் திறந்துவிடுகின்றன.

— தஞ்சாவூர்க் கவிராயர், (9677210062).

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.