அங்குசம் பார்வையில் ‘சட்டமும் நீதியும்-2’ [ ஜி5 ஓடிடி]
தயாரிப்பு : ’18 கிரியேட்டர்ஸ்’ சசிகலா பிரபாகரன், டைரக்ஷன் : பாலாஜி செல்வராஜ், ஆர்ட்டிஸ்ட் : ‘பருத்திவீரன்’ சரவணன், வரலட்சுமி சரத்குமார், பிரேம்குமார், கவிதா பாரதி, ஆறு பாலா, ‘கல்லூரி’வினோத், பீட்டர் ஜே.சந்திரன், லாவண்யா, ஒளிப்பதிவு : எஸ்.கோகுல கிருஷ்ணன், இசை : விபின் பாஸ்கர், எடிட்டிங் : ஆர்.ஆதீஸ்வரன், வசனம் : பிரதீப் மரியன், பி.ஆர்.ஓ. : சதீஷ் & சிவா [ எய்ம்]
சென்னையில் இன்ஸ்பெக்டராக இருக்கும் கனகவேல் [பிரேம்குமார்] ஒரு சரக்குப் பார்ட்டியில் மோதல் ஏற்பட்டு, துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்படுகிறார். இந்தக் கொலையைச் செய்தது சக போலீஸ்காரர்களான கவிதா பாரதி, ஆறு பாலா, கல்லூரி வினோத், பீட்டர் ஜே.சந்திரன் ஆகிய நால்வரும் தான் என போலீஸ் வழக்குப் பதிவு செய்கிறது.
கனகவேலின் மனைவி வக்கீல் சந்திரா [வரலட்சுமி சரத்குமார்] பார் கவுன்சிலின் தலைவராக இருப்பதால், குற்றம்சாட்டப்பட்ட நால்வருக்காக எந்த வக்கீலும் ஆஜராகக் கூடாது என பார் கவுன்சிலில் தீர்மானம் போடுகிறார்கள். நால்வரில் ஒருவரான ஆறு பாலா மனைவியின் வேண்டுகோளுக்காக வழக்கில் ஆஜராகிறார் சுந்தரமூர்த்தி[ சரவணன்].
தனது கணவனைக் கொன்றவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்தே தீரவேண்டும் என்ற முடிவுடன் கோர்ட்டில் வாதாடுகிறார் வரலட்சுமி. ஆனால் அந்த நால்வரும் குற்றவாளிகள் இல்லை என தகுந்த சாட்சிகள், ஆதாரங்களுடன் வாதாடுகிறார் சரவணன். உண்மையிலேயே அந்த நால்வரும் குற்றவாளிகளா? இல்லையா? என்பதை ஆறு எபிசோடுகளில் விறுவிறுப்பாக, பரபரப்பாக சொல்வது தான் இந்த ‘சட்டமும் நீதியும்-2’.
இந்த 23-ஆம் தேதி முதல் ஜி-5 ஓடிடியில் ஸ்ட்ரீமிங் ஆகும் இந்த வெப் சீரிஸின் முதல் எபிசோடிலிருந்து ஆறாவது எபிசோடு வரை அனைத்து சீன்களுமே அபாரம். ஒரு எபிசோடின் முடிவில் ஒரு ட்விஸ்ட், அந்த ட்விஸ்டுக்கு அடுத்த எபிசோடில் விடை என கண்டினியூட்டியை கரெக்டாக வைத்து செம த்ரில்லிங்காக கொண்டு போயுள்ளார் டைரக்டர் பாலாஜி செல்வராஜ்.
“ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம், ஆனா ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாதுன்னு இனிமே எவன் சொன்னாலும் செருப்பால் அடிப்பேன்” என இப்ராஹிமின் [ஆறு பாலா] மனைவி பேசும் வசனம் தான் இந்த வெப் சீரிஸின் மெயின் ஸ்ட்ரீம். அதைக் கேட்ட பின் தான் துணிந்து இந்த வழக்கை கையில் எடுக்கிறார் சரவணன். வக்கீல் சுந்தரமூர்த்தியாக கருப்புகவுனில் கனகச்சிதமாக பொருந்தியிருக்கிறார் சித்தப்பு சரவணன். வரலட்சுமியின் சட்டப் பாயிண்டுகளுக்கு அலட்டலே இல்லாமல் நிதானமாகவும் அழுத்தமாகவும் தனது கவுண்டர் பாயிண்டுகளை எடுத்துப் போட்டு, வரலட்சுமியை மிரள வைக்கும் சீன்களில் பார்வையாளர்களை ரொம்பவே வசீகரிக்கிறார் சரவணன்.
கருப்புக் கவுனில் மிடுக்கும் கொஞ்சம் திமிரும் கலந்த நடையுடன் வரலட்சுமி நடிப்பும் சபாஷ் போட வைக்கிறது. அதே போல் சப்-இன்ஸ்பெக்டராக கவிதா பாரதியும் மற்ற மூவரும் கேரக்டரின் தன்மை அறிந்து சிறப்பாகவே நடித்திருக்கிறார்கள். நீதிமன்ற உத்தரவின்படி இந்த கொலை வழக்கை விசாரிக்க வரும் ஸ்பெஷல் இன்வெஸ்டிகேஷன் ஆபீசராக ஏசி கேரக்டரில் வரும் நடிகையின் விசாரணை தொனியும் பாடிலாங்குவேஜும் நன்றாகவே ஒர்க்-அவுட் ஆகியுள்ளது.
விபின் பாஸ்கரின் பின்னணி இசையும் க்ளைமாக்ஸ் எபிசோடில் வரும் மோகன்ராஜனின் பாடலும் செமத்தியாக உள்ளது. கோகுலகிருஷ்ணனின் ஒளிப்பதிவு, ஆறு எபிசோடுகளையும் க்ரிப்பாக கொண்டு போக உதவியிருக்கும் ஆதீஸ்வரனின் எடிட்டிங், பிரதீப் மரியனின் பொளேர் வசனங்கள், இவை எல்லாமே டைரக்டர் பாலாஜி செல்வராஜுக்கு பக்கா சப்போர்ட்டாக இருந்து, இந்த வெப் சீரிஸை சக்சஸாக்கியுள்ளது.
ஒரு சாலை விபத்தில் நீதிபதி ஒருவர் கொல்லப்பட்டதை க்ளைமாக்ஸ் எபிசோடில் சொல்லி, ‘சட்டமும் நீதியும்-3’—க்கு லீட் கொடுத்திருக்கிறார் டைரக்டர் பாலாஜி செல்வராஜ்.
அங்குசம் பார்வையில் ‘சட்டமும் நீதியும்-2’ [ ஜி5 ஓடிடி] (69/100)
— ஆண்டவர்






Comments are closed, but trackbacks and pingbacks are open.