மாணவிக்கு பாலி*யல் தொல்லை! – தவெக நிர்வாகி மீது வழக்கு!
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி நாகர்கோவில் பிரபல கல்லூரியில் எம்.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். தக்கலை அருகே உள்ள மூலச்சல் பகுதியை சேர்ந்த இவரது தோழி கன்னியாகுமரி மத்திய மாவட்ட தவெக இளைஞர் அணியில் முக்கிய பொறுப்பில் உள்ளார்.
கடந்த 21ம் தேதி மாலை 4 மணியளவில் மாணவியும் அவரது தோழியும் தக்கலை அருகே பஸ்சுக்காக நின்று கொண்டிருந்தனர்.
அப்போது தக்கலை அருகே உள்ள மருந்துக்கோட்டையை சேர்ந்த கன்னியாகுமரி மத்திய மாவட்ட செயற்குழு உறுப்பினராக உள்ள கிறிஸ்டோபர் காரில் வந்தார். ஏற்கனவே தவெக இளைஞர் அணி பெண் நிர்வாகியை தெரியும் என்பதால் அவரிடம் ஏன்? இங்கு நிற்கிறீர்கள், உங்கள் ஊர் வழியாகத்தான் செல்கிறேன், வாருங்கள். என கூறியுள்ளார். பெண் நிர்வாகிக்கு ஏற்கனவே கிறிஸ்டோபரை தெரியும் என்பதால் அவரும் தனது தோழியை வற்புறுத்தி காரில் ஏற செய்துள்ளார்.

முதலில் தவெக நிர்வாகியை மூலச்சல் பகுதியில் இறக்கி விட்டு விட்டு, உடன் வந்த குலசேகரத்தை சேர்ந்த மாணவியிடம் , “நான் குலசேகரம் தான் செல்கிறேன். உங்களை அங்கு இறக்கி விடுகிறேன்” என்று அழைத்துச் சென்றுள்ளார். இடையில் பெட்ரோல் நிலையத்தில் எரிபொருள் நிரப்ப நின்றதாக தெரிகிறது. அப்போது உடன் வந்த கல்லூரி மாணவியிடம் கிறிஸ்டோபர் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி கோபத்தில் அவரை கடுமையாக திட்டி உள்ளார். இதனையடுத்து கிறிஸ்டோபர் அந்த மாணவியிடம் மன்னிப்பு கேட்டதுடன், அவருடைய வீடு அருகில் இறக்கி விட்டு சென்றுள்ளார். இந்த சம்பவத்தை தன்னுடன் காரில் வந்த தவெக நிர்வாகியான தனது தோழியிடம் சொல்லி பாதிக்கப்பட்ட மாணவி கதறி அழுதுள்ளார்.
இதனைக் கேட்டு ஆத்திரமடைந்த தவெக நிர்வாகி, கல்லூரி மாணவியான தனது தோழியை கொற்றிக்கோடு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று புகார் கொடுத்துள்ளார். ஆனால், கொற்றிகோடு காவல் நிலையத்தில் உரிய முறையில் வழக்குப்பதிவு செய்யாமல் சமாதானமாக முடித்து வைக்கும் வகையில் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் இந்த பிரச்சினை பூதாகரமாக வெடித்தது. சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இதையடுத்து இந்த புகாரை தக்கலை போலீசார் விசாரிக்க எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து தக்கலை போலீசார் விசாரணை நடத்தி மாணவி புகாரின் பேரில் பாலியல் தொந்தரவு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் தவெக நிர்வாகியான கிறிஸ்டோபர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.






Comments are closed, but trackbacks and pingbacks are open.