அங்குசம் பார்வையில் ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ திரைப்படம் திரைவிமர்சனம் !
அங்குசம் பார்வையில் ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ – தயாரிப்பு: ‘விஷன் சினிமா ஹவுஸ்’ டி.அருளானந்து, மேத்யூ அருளானந்து. டைரக்ஷன் : சீனு ராமசாமி. நடிகர்—நடிகைகள் ; ஏகன், யோகிபாபு, பிரிகிடா சாகா, ஐஸ்வர்யா தத்தா, சத்யதேவி, லியோ சிவக்குமார், பவா செல்லதுரை, கே.பி.பி.நவீன். ஒளிப்பதிட்வு : அசோக்ராஜ், பாடல்கள் : கவிப்பேரரசு வைரமுத்து, கங்கை அமரன், பா.விஜய், ஏகாதசி. இசை : என்.ஆர்.ரகுநந்தன், எடிட்டிங் : ஸ்ரீகர் பிரசாத், பி.ஆர்.ஓ.நிகில் முருகன்.
கள்ளக் காதலனுடன் அம்மா ஓடிவிட, மிலிட்டரி அப்பாவும் விரட்டிவிட, சின்ன வயசிலேயே அனாதைகளாகிறார்கள் அண்ணன் செல்லதுரை [ ஏகன் ]யும் தங்கை ஜெயசுதா[ சத்யதேவி ]வும். பெரியசாமி [ யோகிபாபு ] நடத்தும் கோழிப்பண்ணையில் வேலை பார்த்து தங்கச்சியை வளர்த்து ஆளாக்கி, அவள் விரும்பிய மாப்பிள்ளையையே கல்யாணம் செய்து வைக்கிறான் செல்லதுரை. இதான் படத்தின் கதை. கள்ளக்காதலனுடன் ஓடும் அம்மா [ ஐஸ்வர்யா தத்தா ] பைத்தியமாகிறார். விரட்டிவிட்ட மிலிட்டரி அப்பாவுக்கு கிட்னி ஃபெயிலியர்.
இதை மூன்று ஆண்டுகள், நான்கு ஆண்டுகள் ஓடும் டி.வி.சீரியலைவிட படுஅபத்தமாக எடுத்து சிதைத்திருக்கிறார் டைரக்டர் சீனுராமசாமி. சினிமாவுக்கு வந்து கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாகியும் இன்னும் அப்டேட் ஆகாமல் அவுட் ஆஃப் ஃபோகஸிலேயே இருக்கும் ஒரே டைரக்டர் சீனு ராமசாமி தான் போல.
படத்தின் தயாரிப்பாளர் அருளானந்துவின் மகன் ஏகன் தான் ஹீரோ. ”நடிப்பா? அப்படின்னா?” ங்கிற ரேஞ்சில் தான் படம் முழுக்க ஏகன் இருக்கிறார். ”என்னை நடிக்க வச்சுட்டா உங்களுக்கு பிரைஸ்” என்கிறார் பிரிகிடா சாகா. ஏகனின் தங்கச்சியாக வரும் சத்யதேவி ஜர்ஸ்ட் பாஸாகியிருக்கிறார்.
படத்தின் யோகிபாபு மட்டும் இல்லேன்னா…?
–மதுரை மாறன்