அங்குசம் பார்வையில் ‘நந்தன்’ திரைப்படம் திரைவிமர்சனம் !
அங்குசம் பார்வையில் ‘நந்தன்’ – தயரிப்பு : ‘இரா எண்டெர்டெய்ன்மெண்ட்’. டைரக்ஷன் : இரா.சரவணன் . நடிகர்—நடிகைகள் : எம்.சசிகுமார், ஸ்ருதி பெரியசாமி, பாலாஜி சக்திவேல், துரை,சுதாகர், சமுத்திரக்கனி, ஜி.எம்.குமார், மிதுன், சித்தன் மோகன், வி.ஞானவேல். ஒளிப்பதிவு : ஆர்.வி.சரண், இசை : ஜிப்ரான் வைபோதா, எடிட்டிங் : நெல்சன் ஆண்டனி. ரிலீஸ் : ‘டிரைடண்ட் ஆர்ட்ஸ்’ ரவீந்திரன். பி.ஆர்.ஓ. யுவராஜ்.
ஆண்டாண்டு காலமாக வணங்கான்குடி ஊராட்சித் தலைவராக இருக்கிறார் ஆதிக்க சாதியைச் சேர்ந்த கோப்புலிங்கம் [ பாலாஜி சக்திவேல் ] அடுத்து நடக்கவிருக்கும் தேர்தலிலும் தானே தலைவராக இருப்பதற்காக கோவிலில் ஊர்ப் பெரியவர்களை முடிவெடுக்க வைக்கிறார். அப்போது நந்தன் [ மிதுன் ] என்ற தலித் இளைஞன் தான் போட்டியிடப் போவதாகச் சொல்கிறான். அவனை அடித்து அவமானப்படுத்தி விரட்டுகிறது ஆதிக்க சாதி.
இதனால் வெகுண்டெழும் நந்தன், தேர்தல் நடத்தச் சொல்லி மாவட்ட ஆட்சியருக்கு மனு எழுதி, அதை நேரில் கொடுக்கப் போகும் போது டிப்பர் லாரி ஆக்சிடெண்டில் சாகிறான் நந்தன். கோப்புலிங்கம் போட்டியிட நாமினேஷன் தாக்கல் செய்வதற்கு முன்பாக அந்த ஊராட்சி தலித்துக்கு ஒதுக்கப்படுகிறது.
இதனால் கோபமாகும் கோப்புலிங்கம். தன்னிடம் அடிமையாக இருக்கும் தலித் இனத்தைச் சேர்ந்த கூழ்பானை ( எ ) அம்பேத்குமாரை[ சசிகுமார்] தேர்தலில் நிற்க வைத்து ஊராட்சித் தலைவராக்கி, அவனை செயல்படவிடாமல் தனது பிடிக்குள்ளேயே ஊராட்சியை வைத்திருக்கிறார். இப்படியே போகும் கதை எப்படித்தான் முடியும்னு நாம் எதிர்பார்த்த மாதிரியே முடியுது.
படத்தின் இயக்குனர் இரா.சரவணன், தமிழகத்தில் நூறாண்டை நோக்கிப் பயணிக்கும் பாரம்பரிய பத்திரிகை குழுமத்திலிருந்து வெளிவந்து கொண்டிருக்கும் அரசியல் பத்திரிகையில் பணியாற்றியவர். அதன் பின் பிரபல தொலைக்காட்சிகளிலும் பணியாற்றியவர். அதே நேரம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் சிஷ்யராகவும் இருப்பவர்.
அதனால் தமிழ்நாட்டின் அரசியலை, ஆட்சியமைப்பை குறிப்பாக திமுகவை சீண்ட வேண்டும் என்பதற்காகவே அரைவேக்காட்டுத்தனமாக எடுத்து, அதில் சசிகுமார், பாலாஜி சக்திவேல் போன்ற பிரபலங்களைத் திணித்து, திரித்து இந்த நந்தனை எடுத்திருக்கிறார் இயக்குனர் இரா. சரவணன்.
“இப்படி எங்காச்சும் நடக்குமா? என்று கேட்பவர்களின் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு போய் காட்டத் தயாராக இருக்கிறேன்” டைட்டில் ஆரம்பிப்பதற்கு முன்பு இப்படி கார்டு போடுகிறார் இயக்குனர் இரா.சரவணன்.
நாமும் சொல்கிறோம்.. ஒரு பொது ஊராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிட எந்த தலித் இளைஞன் முன்வந்திருக்கிறான்? இப்படி படத்தின் அஸ்திவாரமே ஆட்டம் கண்டது உட்பட படம் முழுக்க அரைவேக்காட்டுத்தனம் இருக்கிறது என்பதைச் சொல்லி விடைபெறுகிறோம்.
–மதுரை மாறன்