கிரிக்கெட்டையும் ஆட்டிப்படைக்கும் அரசியல் !
IPL க்கு முன்பு(ம்) கிாிக்கெட் இருந்தது-தொடா்-23
கப்பு முக்கியம் !
டி-20 தொடரில் வெற்றிக் கோப்பையை உயர்த்திப் பிடித்திருக்கிறது இந்திய கிரிக்கெட் அணி. 20 ஓவருக்குள் கிரிக்கெட்டை சுருக்கிய போது ஆர்வமும் கேள்வியும் ரசிகர்கள் மனங்களில் எழுந்தது. ஆனால், அதிரடியான விறுவிறுப்பான ஆட்டமாக அதை உருவாக்கிவிட்டார்கள் பிளேயர்கள். முதல் டி-20 கோப்பையை வென்ற இந்திய அணி, அதன்பின் கடந்த இரண்டு தொடர்களாக கோப்பையை வென்றதால், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் உற்சாகம் பெற்றுள்ளனர்.
2026 மார்ச் 8ஆம் நாள் அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவர்களில் 250 ரன்களுக்கு மேல் அடித்து பட்டையைக் கிளப்பியது. அடுத்து ஆடிய நியூசிலாந்து கிட்டத்தட்ட 100 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றுப் போனது. தொடர்ச்சியாக இரண்டு டி-20 கோப்பைகளை வென்ற மகிழ்ச்சியில் இந்திய அணி உள்ள நிலையில், அணியின் கேப்டனான சூர்யகுமார் யாதவ், இந்தத் தொடரில் பெரிதாக ஜொலிக்கவில்லை. ஆனால், இந்தியாவின் மற்ற ஆட்டக்காரர்கள் தூள் கிளப்பி விட்டார்கள்.

பேட்டிங் என்றால் முதல் ஓவரிலேயே சிக்ஸர் அடிப்பது, பவுலிங் என்றால் முதல் ஓவரிலேயே விக்கெட் எடுப்பது என இந்திய அணியின் அதிரடி ஆட்டம் எல்லாரையும் கவர்ந்தது. அதிலும் சஞ்சு சாம்சன் தனக்கு கிடைத்த கடைசி மூன்று போட்டிகளிலும் சராசரியாக 90 ரன்கள் அடித்து இந்திய அணியின் வெற்றிக்குத் துணை நின்றார்.
கேரளாவைச் சேர்ந்தவர் சஞ்சு சாம்சன். பொதுவாக இந்திய அணியில் மும்பை, டெல்லி, பஞ்சாப், பெங்களூரு, சென்னை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள்தான் அதிகம் இடம்பெறுவார்கள். ஒரு காலத்தில் மும்பையின் ஆதிக்கமே அதிகமாக இருந்தது. பின்னர் டெல்லி, பெங்களூரு, சென்னைக்காரர்கள் ஓரளவு இடம்பிடிக்கத் தொடங்கினார்கள். அதிகம் கவனிக்கப்படாத ஹரியானா மாநிலத்திலிருந்து வந்த ஆல்ரவுண்டர்தான் கபில்தேவ்.
டெஸ்ட் போட்டிகளிலிலிருந்து ஒரு நாள் போட்டிக்கு கிரிக்கெட் விளையாட்டு நகர்ந்து கொண்டிருந்த நேரத்தில், 1975, 1979 ஆகிய ஆண்டுகளில் நடந்த உலகக் கோப்பை ஒரு நாள் போட்டிகளில் இந்தியா பெரிதாக சாதிக்காத நிலையில், 1983ஆம் ஆண்டு நடந்த மூன்றாவது உலகக் கோப்பை போட்டிக்கு இந்திய அணியின் கேப்டனாக இருந்தார் கபில்தேவ். போட்டித் தொடர் தொடங்குவதற்கு முன் இந்திய அணியை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இரண்டு உலகக் கோப்பைகளை வென்றிருந்த வெஸ்ட் இன்டீஸ் அணியை வீழ்த்த ஆஸ்திரேலியாவால் முடியுமா, இங்கிலாந்தால் முடியுமா என்பதுதான் கிரிக்கெட் வல்லுநர்களின் பார்வையாக இருந்தது.
முதல் சுற்றுப் போட்டிகளில் ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் 20 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இந்திய அணி. கேப்டன் கபில்தேவ் களமிறங்கினார். அதிரடியாக ஆடி 175 ரன்களைக் குவித்தார். அவரை கடைசிவரை அவுட்டாக்க முடியவில்லை. அணியின் ஸ்கோரும் 200 ரன்களைக் கடந்திருந்தது. பவுலிங்கில் திறமையைக் காட்டியது இந்திய அணி. ஜிம்பாப்வே அணியை வீழ்த்தியது. அப்போதுதான், கிரிக்கெட் உலகம் இந்தியா பக்கம் பார்வையைத் திருப்பியது.
ஒற்றை ஆளாக கபில்தேவ் போட்ட போடு இன்றளவும் கிரிக்கெட் வரலாற்றில் பேசப்படுகின்ற ஆட்டமாக உள்ளது. இவ்வளவுக்கும் அன்றைய ஆட்டத்தின் வீடியோ பதிவு எதுவுமில்லை. ஒளிபரப்ப வேண்டிய டி.வி. சேனலில் ஊழியர்கள் ஸ்ட்ரைக் என்று காரணம் கூறப்பட்டது. காட்சிப் பதிவுகள் இல்லாவிட்டாலும் மனக்கண்ணில் எப்போதும் நிலைத்திருக்கும் கபில்தேவ் ஆடிய அதிரடி ஆட்டம். அதன்பின், அடுத்தடுத்த கட்டத்திற்கு முன்னேறியது இந்திய அணி.
இறுதிப்போட்டியில் வலுவான வெஸ்ட் இன்டீஸ் அணியை எதிர்கொண்டது இந்தியா. அப்போதெல்லாம் ஒரு நாள் போட்டிகளில் 60 ஓவர்கள் வீசப்படும். இந்தியா ஏறத்தாழ 160 ரன்களில் ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக சென்னையைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் அடித்த 35 ரன்கள்தான். இந்த சொற்ப ஸ்கோரை வெஸ்ட் இன்டீஸ் எளிதாக அடைந்துவிடும் என நினைத்தார்கள். ஆனால், கபில்தேவ்வின் பந்து வீச்சும், சக பந்து வீச்சாளர்களை அவர் பயன்படுத்திய விதமும், ஃபீல்டிங் செட்டப்பும் வெஸ்ட் இன்டீஸ் அணியைத் திணறடித்தது.

வெஸ்ட் இன்டீஸ் கேப்டன் க்ளைவ் லாயிட் இதை எதிர்பார்க்கவில்லை. அந்த அணியின் நட்சத்திர அதிரடி ஆட்டக்காரர் விவியன் ரிச்சர்ட்ஸ் தூக்கி அடித்த பந்தை பின்பக்கமாக ஓடிப்போய் கபில்தேவ் பிடித்தபோது இறுதிப்போட்டியில் இந்தியாவின் வெற்றி ஏறத்தாழ உறுதியாகிவிட்டது. கடைசி விக்கெட் விழுந்ததும் இந்திய ஆட்டக்காரர் மொகிந்தர் அமர்நாத் ஸ்டம்ப்புகளைத் தூக்கிக் கொண்டு பெவிலியன் நோக்கி ஓடிவந்ததும். ஷாம்பெய்ன் நுரைக்க, லார்ட்ஸ் மைதானத்தில் வெற்றிக்கோப்பையை கபில்தேவ் அண்ட் கோ உயர்த்தியதும் இந்திய கிரிக்கெட்டின் வரலாற்றுத் தருணங்கள்.
ஹரியானா ஹரிகேன் என்று பெயர் பெற்ற கபில்தேவ் போல, கிரிக்கெட்டில் அதிகம் பங்கேற்காத கேரளா மாநிலத்திலிருந்து சஞ்சு சாம்சன் தேர்வாகி வந்ததும், 2026 டி-20 போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு அவர் ஆடிய நேர்த்தியும் வரலாறாகி உள்ளது. இந்திய அணியின் தேர்வாளர்களும் பயிற்சியாளர்களும் செய்கின்ற அரசியல் பல திறமையான ஆட்டக்காரர்களைப் பழி வாங்கியுள்ளது. சஞ்சு சாம்சனும் பல்வேறு காரணங்களால் தொடர்ந்து ஆடுவதற்கு வாய்ப்புத் தரப்படாமல் புறக்கணிக்கப்பட்டவர். தொடர்ந்து போராடி, தன் திறமையை வெளிப்படுத்தி, கிடைத்த வாய்ப்பில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியுள்ளார்.
மதம், சாதி, மாநிலம், கட்சி, குடும்ப செல்வாக்கு உள்பட பலவும் இந்திய அரசியல் போலவே இந்திய கிரிக்கெட்டிலும் கோலோச்சுகின்றன. அதனால் பாதிக்கப்பட்ட திறமையாளர்களின் பட்டியல் நீளமானது.
(ஆட்டம் தொடரும்)
கோவி.லெனின், மூத்த பத்திரிகையாளா்








Comments are closed, but trackbacks and pingbacks are open.